குழந்தைகளே நலமா?
நான் தான் கற்பூர மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் சின்னமோம் கேம்பரா என்பதாகும். நான் லாராசீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சூடம் மரம், காம்போர் லாரல், கபூர் மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் யாங்சே நதி, தைவான், ஜப்பான், கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளை பூர்விகமாகக் கொண்டவன். என்னை ஜப்பான் மக்கள் குசுனோகின்னு அன்பா அழைக்கிறாங்க. இந்தியாவில் கேரளாவிலும், தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலும் நான் அதிகமா காணப்படறேன். நான் ஒரு பெரிய மர இனத்தைச் சேர்ந்தவன். நான் 60 அடி உயரம் கூட வளருவேன். என் தோற்றம் ஒரு குடை போன்று இருக்கும்.
என் பூக்கள் வேப்பம் பூவைப் போன்ற வெண்மையான பூங்கொத்துகளுடன் காணப்படும். என் பழங்கள் நாவல் பழத்தைப் போன்று கருமை நிறம் கொண்டது. நான் ஒரு மரம் மட்டுமல்ல, கேம்ஃபர், செப்ரோல், யூஜினால் மற்றும் டெர்பினியரல், லிக்னான் போன்ற எண்ணெய் மற்றும் இரசாயண கலவையாகும். என்னிடமும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. என் மரத்தின் பட்டை மணம் மிக்கது. கட்டைப் பகுதி கடினமானது. மஞ்சள், பழுப்பு நிறத்தில் அதிக மணத்துடன் இருக்கும். என் இலைகள் தடித்தவை. என் தளிர்கள் செம்மை நிறத்துடன் தோன்றி பின்னர் கரும்பச்சை வண்ணமாகும். என் கட்டை மற்றும் இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டது.
என் வேர், அடிமரம், கிளைகள் ஆகியவற்றினை வெட்டி, துண்டுகளாக்கி நீரிலிட்டு காய்ச்சி பின் பதப்படுத்தி, அத்துடன் சுண்ணாம்பு சேர்த்து கண்ணாடி குடுவையில் போட்டு பதப்படுத்தினால் சுத்தமான கற்பூரம் கிடைக்கும். இதற்கு சூடம் என்ற பெயரும் உண்டு. இது கட்டியாக இருக்கும். அதே சமயத்தில் எளிதில் தூளாக நொருங்கும் தன்மையுடையது. நீரில் மிதக்கக் கூடியது. எண்ணெய் காற்றில் கரையக் கூடியது. நறுமணம் கமழக்கூடியது.
குழந்தைகளே, இந்தக் கற்பூரம் தெய்வ வழிபாட்டிற்கு இன்றியமையாதது. திருக்கோயில்களில் இறைவனுக்கு தீபராத்தி காட்டும் கற்பூர ஒளியில் நீங்கள் மெய்மறந்து நிற்பதை நான் பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். தன்னை எரித்துக் கொண்டு உங்களை தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்வதால் கற்பூரத்தை தியாகத்தின் சின்னமாகவும் பெரியவர்கள் கருதுகிறார்கள். அதனால், மக்கள் கற்பூரத்தை வாசனைப் பொருளாக மட்டும் கருதாமல் ஒரு புனிதப் பொருளாகவும் கருதறாங்க.
என் மரத்திலிருந்து கிடைக்கும் இந்தக் கற்பூரத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. நரம்பு புடைப்பு, முதுகுவலி, ஆஸ்துமா, இருமல், ஜன்னி காய்ச்சல், தலைக் குத்தல், சூதக ஜன்னி, கீல்வாதம், படுக்கைப் புண், ஜலதோஷம், மார்ச்சளி, சுளுக்கு, நமைச்சல் ஆகிய நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுது. உங்க வீட்ல யாருக்காது மூட்டுவலி இருக்கா, கவலைப்படாதீங்க, தேங்காய் எண்ணெய்யை காய்ச்சி அதில் கற்பூரத்தைக் கலந்து மூட்டு மேல் தடவினால் மூட்டுவலி பஞ்சாய் பறந்திடும். கற்பூரத்தை துணியில் முடித்து, முகர்ந்து வந்தால் ஜலதோஷம், தலைவலி அறவே நீங்கிடும்.
குழந்தைகளே, என் மரத்திலிருந்து எடுக்கப்படும் கற்பூர எண்ணெய் முடி வளர்வதற்கும், பாத வெடிப்புகள் மறைவதற்கும் பயன்படுது. கற்பூரத்தின் நறுமணம் பூச்சிகளையும், கொசுக்களையும் ஓட ஓட விரட்டும். "சர்வதேச கொசுக்கள் ஆராய்ச்சி' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கற்பூர எண்ணெய்கள், "பி-மென்தேன்' மற்றும் "சாம்பினே' என்றழைக்கப்படும் வேதியியல் பொருள்களைக் கொண்டுள்ளன. இவை கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய நோய்களை விரட்டும் திறன் கொண்டவை. 13-ஆம் நூற்றாண்டடை சேர்ந்த மார்கோபோலோ என்ற மாலுமி கற்பூர எண்ணெய்யை சீனர்கள் அதிக பயன்படுத்தியுள்ளதாக சொல்லியிருக்கிறார். மரங்களால் மழைப் பொழிவு அதிகரிக்கும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.
குழந்தைகளே, வரும் ஆண்டு உங்களுக்கு நோய், நொடிகளற்ற, கற்றலில் தடைகளற்ற, ஒழுக்கமிகு ஆண்டாக, அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன். எனக்குத் தெரியும் நீங்கள் அனைவரும் கற்பூர புத்தி உடையவர்கள் என்று. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.