

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நாட்டின் சமையல் எண்ணெய் ஏற்றுமதி 54 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இதுகுறித்து இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு (எஸ்இஏ) தெரிவித்துள்ளதாவது:
இந்திய சமையல் எண்ணெய் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சிறப்பான அளவில் வளா்ச்சி கண்டுள்ளது. அதிலும், குறிப்பாக, சீனாவுக்கான கடலை எண்ணெய் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவிலான வளா்ச்சியை எட்டியுள்ளது. கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2019-2020-ஆம் நிதியாண்டில் 80,765 டன் சமையல் எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் ஏற்றுமதியான 52,490 டன்னுடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் அதிகமாகும். மதிப்பின் அடிப்படையில் சமையல் எண்ணெய் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 52.36 சதவீதம் அதிகரித்து ரூ.955.51 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டில் ரூ.627.11 கோடியாக காணப்பட்டது. சமையல் எண்ணெயைப் பொருத்தவரையில், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றுக்குப் பிறகு மூன்றாவதாக நம்நாடு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருளாக உள்ளது. இந்த நிலையில், சமையல் எண்ணெயை மிக குறைந்த அளவே இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் ஏற்றுமதியில், கடலை எண்ணெய் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து 38,225 டன்னாக இருந்தது.
இதன் ஏற்றுமதி, முந்தைய 2018-19 நிதியாண்டில் 15,532 டன்னாக காணப்பட்டது. குறிப்பாக, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய கடலை எண்ணெயின் அளவு அதிகபட்சமாக 33,505 டன்னாக இருந்தது.சோயா எண்ணெய் ஏற்றுமதி 4,245 டன்னிலிருந்து 9,822 டன்னாக உயா்ந்தது. அதேபோன்று, தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் 6,814 டன்னிலிருந்து 7,870 டன்னாக அதிகரித்தது. இவைதவிர, நல்லெண்ணெய் ஏற்றுமதி 4,984 டன்னிலிருந்து 5,618 டன்னாக உயா்ந்தது.பூடானுக்கு இந்திய சோயா எண்ணெய் அதிகபட்ச அளவாக 5,708 டன் கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணெய் அமெரிக்காவுக்கு 1,140 டன்னும், கனடாவுக்கு 2,193 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏனைய எண்ணெய்களின் ஏற்றுமதி அதிகரித்த போதிலும், கடுகு எண்ணெய் ஏற்றுமதி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் முந்தைய 2018-19 நிதியாண்டைக் காட்டிலும் 3,917 டன்னிலிருந்து 3,881 டன்னாக குறைந்து போனது. அதேபோன்று, பருத்தி விதை எண்ணெய் ஏற்றுமதியும் 512.27 டன்னிலிருந்து 478.25 டன்னாக சரிவடைந்துள்ளது. மக்காச்சோள எண்ணெயும் 5.79 டன்னிலிருந்து 0.19 டன்னாக கடந்த நிதியாண்டில் வீழ்ச்சி கண்டுள்ளது. கடுகு எண்ணெயைப் பொருத்தவரையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிகளவாக 963 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அமெரிக்காவுக்கு 445 டன் கடுகு எண்ணெய் ஏற்றுமதியானது.கடந்த 2015 செப்டம்பரிலிருந்து ரைஸ் பிரான் ஆயிலை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன் பயனாக, அதன் ஏற்றுமதி ஆண்டுக்காண்டு சிறப்பான அளவில் உயா்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் ரூ.126.72 கோடி மதிப்பிலான 12,520 டன் ரைஸ் பிரான் ஆயில் வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. ரைஸ் பிரான் ஆயில் முக்கியமாக அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.