தமிழ் நிலத்தை ஆண்ட மூவேந்தர் குடிப்பெயரையும் வடநாட்டுத் தொடர்பு கொண்ட வடசொல்லாக மொழி அறிஞர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.
""சோழ வளநாடு "சோறு' உடைத்து'' என்பதால் "சோழ' என்ற சொல்லின் பிறப்பு சோறு என்று கருதுவர். சோழ வேந்தர்கள், வீரர்களுக்குச் சோறு அளித்த செய்தி கலிங்கத்துப்பரணியிலும் காண்கிறோம். வேழம் (யானை) உடைய நாட்டின் உதியன் சேரலாதன்கூட பாரதப் போரின் படைவீரர்களுக்குப் பெரும்சோறு அளித்த தகவல் உண்டே!
உணவு வழங்கி மக்களிடம் வேலை வாங்குவதுதான் மன்னர் கடமை. விலை இல்லா மளிகைப் பண்டங்களும், தொகுப்பு வீடுகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கி ஆயிற்று. காலையும் மாலையும் இனி அரசு காட்டும் இடத்திற்கு வந்து நின்று விலை (ஊதியம்) இல்லா பணி செய்யட்டும் குடிமக்கள்.
அன்றைக்கும் நெல் (அரிசி) குதிர்களை அரண்மனைப் பண்டகங்களில் சேமித்து மக்களைக் காத்தவர்கள் அ(û)ரசர்கள். சிலப்பதிகாரத்திலும் "அரைசியல்' என்றுதான் வருகிறது. ஆங்கிலத்தின் "ரைஸ்' ஆகிய அரிசிக்கும் அ(û)ரசியலுக்கும் ஏகப் பொருத்தம். அந்நாளில் உணவு தானியக் கிடங்குகளாகிய கோயில்களைச் சுற்றிப் பாதுகாப்பு அகழி அல்லது அரண் எழுப்பியது அவசியம்தான்.
எப்படியோ, அரைசர் என்பதே அரையர். அதுவே ராயர் (ராஜர்?). "ராஜ்' என்ற சொல்லை அப்படியே புரட்டி வாசித்தால் ரஷியாவின் "ஜார்' (மன்னர்) என்று ஆகிவிடும்.
சோழர் காலத்திய பழக்க வழக்கங்களை, மானுடவியல், வாழ்வியல் ஆதாரங்கள் அடிப்படையில் மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவோம். அந்தக் காலத்திய நாணயத்தின் ""முன் பக்கத்தில் புலி, இணைக் கயல், புலி ஆகிய மூன்று சின்னங்களும் அதன் கீழே "ஸ்ரீராஜராஜசோழ' என்று வடமொழி தேவநாகரி எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருந்தன'' ("ராஜராஜ சோழன்') என்று ச.ந. கண்ணன் போன்ற அண்மைக்கால ஆய்வர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.
அவ்வாறே ஆந்திர நெல்லூர் மாவட்டத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு அருகில் கூடூர். அந்நாளில் (கடல் கொண்ட) "காகந்தி நாடு'. காவிரிப்பூம்பட்டினத்திற்கு இன்னொரு பெயர் காகந்தி. அங்கு கரிகாலன் வழி வந்தவர்கள் தெலுங்குச் "சோடர்கள்', சோதிட நிபுணர்கள்.
இன்றைய ஈராக் பகுதி ஆகிய மெசபடோமியா பிரதேசத்தில் கி.மு. 600 வாக்கில், அதாவது இரண்டாம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின்போது வானவியல் புதுப்பொலிவுடன் பரிணமித்தது என்பதே உண்மை. சால்தியன் என்றழைக்கப்பட்ட மெசபடோமியக் குருமார்கள் சூரிய, சந்திர, கோள்களின் சலனங்களை வாழ்வியலோடு தொடர்புறுத்தி "சோதிடவியல்' உருவாக வழிவகுத்தனர். அதனால் தெலுங்குச் சோடர், தமிழ்ச் சோழியர் இருவருமே ஆதி ஈரானிய "சால்டிதிய' வழித்தோன்றல் என்றும் கருத இடமுண்டு.
பிரிக்கப்படாத பாகிஸ்தானின் காந்தாரமும் தட்சசீலமும் அல்லவா உண்மையான மகாபாரதக் களம்! அங்கு திரௌபதைத் திருமணத்திற்கு சேர, சோழ, பாண்டியர் மூவரும் சென்றதாகவும் தருமர் நடத்திய ராஜசூய வேள்வியை மூவேந்தர்களும் கண்டு மகிழ்ந்ததாகவும் அறிகிறோம். சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று ஒரு மன்னன் பெயரும் பெற்றான்.
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் (புறநானூறு - 71) இறந்த பிறகு மனைவி பெருங்கோப்பெண்டு சிதைத் தீயில் விழுந்து உயிரை மாய்த்தாள். இந்த உடன்கட்டை ஏறும் பழக்கம் ஆரியப் பண்பு. அதிலும் ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தாராம். முதலாம் பராந்தகன் காலத்திலும், வீரசோழ இளங்கோவேள் என்கிற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியாரும் உடன்கட்டை ஏறியது வரலாறு.
அர்ஜுனன் தெற்கே மணலூர் ஆகிய மணப்பூரை ஆண்ட பாண்டிய மன்னரின் மகளான சித்திராங்கதையை மணந்தார் என்ற கருத்தும் உண்டு.
""ஐஞ்சிற்றரசர் துணை கொண்டு (அவன் மாமன்) பாண்டியன் ஆண்டதினாற் பெற்ற பஞ்சவன் என்ற பெயரும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்பதனோடு தொடர்புடையதன்று'' (தமிழ், வரலாறு, பக். 50) என்று கருதுகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
உள்ளபடியே ஆதி ஈரானிய வழக்கில் "பென்ட' (பஞ்ச) என்றால் ஐந்துதான். இன்றைக்கும் பஞ்சவர் மனைவி திரௌபதை "பஞ்ச ஆளி' (பாஞ்சாலி)தானே!
தமிழில் பாண்டி என்றால் காளையாம். தூய வெண்மையைக் குறிப்பதாகவும் கொள்வோம். பாண்டு பிடித்தவன் என்றால் மேனியில் வெண்தேமல் கொண்டவன். பாண்டா கரடி என்றால் வெண்கரடி ஆயிற்றே! பாண்டியர் வெள்ளை இனமாக இருக்கலாம். பாண்டு ரங்கன் வெள்ளை நிறத்தவன். (ரங்க்-நிறம்). பாண்டே என்ற சொல்வழக்கு இன்றும் மகாராஷ்டிரத்தில் சகஜம்.
சமீபத்திய ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழலில் முக்கியப் புள்ளியின் பெயர் பாண்டே என்கிற பாண்டு. அம்பாலிகா - வேத வியாசர் மகன் பெயருக்கு இப்படி ஓர் அவமானம்!
சங்கப் பாடலில் இம்மென்கீரனார் எனும் புலவர் இமயமலை குறித்து, ""ஆரியர் பொன்படு நெடுவரை'' (அகம். 398) என்று பேசுகின்றார். இமயவரம்பன் வேறு இருக்கிறார். பண்டு, பாலை மணல் வழி வந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்கள் தங்களை "அய்ர' என்றே சொல்லிக் கொண்டனர். ஆதி ஈரானிய மொழியிலும், வடமொழியிலும் இதற்கு மணல் என்றே பொருள். "ஆயிரம்' பன்மையைக் குறிப்பது. ""திரையிடு மணலினும் பலரே'' என்கிறது மதுரைக் காஞ்சி. ஐயர், ஐயா, அய்யன் என்றால் தலைமை. இன்னொரு வகையில் "ஆயிர' (வைசியர்) - "ஆரிய' (வைசியர்) தானே.
அவ்வகையில் ஆரிய அரசர் பிரகதத்தனுக்கு தமிழ் போதிக்கவே கபிலர் குறிஞ்சிப் பாட்டு பாடினாராம். ""ஆரியர் படையின் உடைக'' (அகம். 336) என்ற வரிகளில் ஆரிய மன்னன் தோல்வி பதிவாகிறது. ""எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்'' (அகம். 386) என்கிற பரணர் கூற்றுப்படி ஆரிய எதிரிகள் பற்றிய செய்தியும் அறிகிறோம்.
சேர(ல்) என்ற சொல்லாட்சியின் தோற்றம், மலைச்சாரல் சார்ந்தது என்பர். தென்னைத் தலையில் தேங்காய் (வடமொழியில் "கேரம்') தாங்கிய பூமி "கேர அளம்'. அதுவே சேர நாடு. க - ச பிறழ்ந்து ஒலிக்கும். நமக்கு கீரை . மலையாளத்தில் சீரை அல்லவா? கன்னடத்திலும் செவி - கெவி ஆகும். செம்பு - கெம்பு ஆவதும் உண்டே.
அன்றியும், அங்கு "சேர்த்-தலை', "தலைச்-சேரி' ஆகிய இடப்பெயர்களைப் பாருங்கள். "சேர' என்ற சொல்லும் "தலை'யும் இணைந்தே புழங்கும். வடமொழியில் ஸ்ரீமான்-தலைவன். "ஸிர்' (தலை) என்பதால் தலைவனே ஆங்கிலத்திலும் "சேர்மன்'. தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் ""ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு..'' என்றே வருகிறது.
பாருங்களேன், ஸ்ரீ, (ஆங்கில) "சர்' (பட்டம்) ஆகிய சொற்களுக்கும் ஷீர் (ஷேர்) என்ற சிங்கத்திற்கும் தொடர்பு உண்டு. இன்றைய ஆங்கிலத்தின் "சேர்' இருக்கை - "அரி' ஆசனம், சிம்ம ஆசனம்.
இன்றைய பாகிஸ்தானில் அர்த்தஷீர் என்ற சௌராஷ்டிரிய (ஈரானிய)ப் பெயர் சர்வ சாதாரணம். "மாயோன் மேய ஓண நன்னாள்' (மதுரைக் காஞ்சி 591) என்றபடி இன்றைக்கும் "நிலம் தரு திருவின் நெடியோன்' (மதுரைக்காஞ்சி 763) ஆகிய திருமாலுக்கு திருவோணப் பண்டிகை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நரசிம்ஹம் (பாதி சிங்கம்) மாதிரி பாதி (அர்த்த) புலி அல்லது சிங்கம் (ஷீர்) என்ற பொருள் வருகிறதோ?
மூவேந்தர் பெயர் நிலை இருக்கட்டும். கி.பி. 3-6 நூற்றாண்டுக் காலகட்டத்தில் தொண்டை மண்டலத்தில் (கர்னாடகத்தைச் சார்ந்த) களப்பிரரை வென்ற பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு.
பாருங்களேன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லப(ன்) என்ற மன்னன் பெயரைக் கொஞ்சம் புரட்டி வாசியுங்கள். பல்லவ ஸ்ரீராம ஸ்ரீ என்று வரும்.
பப்பதேவன், சிவ ஸ்கந்த வர்மன், விஜய ஸ்கந்த வர்மன், சாருதேவி, புத்தியங்குரன் போன்ற பல்லவப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களே அல்ல. பாரசீகம் சார்ந்த "பஹ்லவா'க்கள். அவர்தம் காலத்தியச் செப்பேடுகள் பிராகிருத மொழியில் எழுதப்பெற்றவை. மகேந்திர பல்லவன் "மத்த விலாசம்' என்ற நூலை வடமொழியிலேயே எழுதினார். அவர்களுக்குக் காஞ்சி தலைநகர். அசோகரின் பௌத்த ஸ்தூபி நிலைத்த மாநகர். அந்நாளில் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் எல்லாமே வடமொழிகள்தாம்.
இன்றைக்கும் பௌத்த நாடான ஜப்பானில் கஞ்சி என்ற எழுத்து வடிவம் வழக்கில் உள்ளது. சீன எழுத்துருக்கள் கொண்ட பழைய வட்டார வரிவடிவம். நஞ்சு, நச்சு ஆன மாதிரி கஞ்சி, கச்சி ஆயிற்று. மணிமேகலையில் பல இடங்களில் கச்சியும் காஞ்சியும் விரவியே வருகிறது.
"விண்பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்' (அகநானூறு 69), ""முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்..'' (அகம். 281) போன்ற பாடல் அடிகளில் கோசர்களுக்காக மௌரியர்கள் தமிழகத்தின் வடுக இனத்தவர் துணையுடன் மோகூரைத் தாக்கிய செய்தி பெறப்படுகிறது.
கி.மு. 301 - கி.மு. 273-ஆம் ஆண்டுக் காலகட்டத்தில், "சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி.. வம்ப வடுகர் நைந்தலை சவட்டி..'' (அகம். 375) வென்ற வரலாறு படம் பிடிக்கப்படுகிறது.
""வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலி'' (அகம். 265) என்றவாறு வட இமயத்து அருகே பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர்கள் (கி.மு. 425 - கி.மு. 323) பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தமிழ்ச் சங்கப் பாடல்களின் அதிசயம்.
தங்களுக்குள் போரிட்டுக் கொண்ட மூவேந்தர்களும் பல்லவர்போல ஆதித் திராவிடர் (பழந்தமிழர்) வாழ்ந்த மண்ணை ஆண்ட வடவர் தானோ என்னவோ?
மாறன், மீனவன், தென்னவன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட "கயல்' கொடி முத்தரையர்கள், பாண்டியரின் கிளைக்குடியாம். இன்றைக்கு திராவிடக் கிளைக்கட்சிகள் மாதிரி. இருந்தாலும் மத்தியில் பல்லவர் ஆட்சியோடு கூட்டணி வைத்துப் பாண்டியரோடு போரிட்டனராம்.
இதற்கு மத்தியில் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1268 - 1311) வரலாறும் சொல்லி வைப்போம். அவர்தம் மனைவியான பட்டத்து அரசிக்கு சுந்தர பாண்டியன் என்ற மகனும், தூரத்துத் துணைவிக்கு வீர பாண்டியன் என்ற மகனும் இருந்தார்களாம். தனக்குப் பிறகு வீர பாண்டியனே அரசனாக வேண்டும் என குலசேகரன் விரும்பினானாம். இதை அறிந்த சுந்தர பாண்டியன் தந்தையைக் கொலை செய்து மதுரையில் முடி சூட்டிக் கொண்டான் என்றும் ஒரு சரித்திரம் உண்டு.
அது என்ன அன்றைய மதுரையிலுமா
இந்தக் கதை?
கட்டுரையாளர்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.