பொதுஜன வாக்கெடுப்பு - ஒரு பார்வை!

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் இருக்கக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் அண்மையில் வாக்களித்தனர். அதைப் போன்று ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்துதான் இருக்க வேண்டும் என்றும் 2014-இல் பொதுஜன வாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது.
பொதுஜன வாக்கெடுப்பு - ஒரு பார்வை!
Updated on
4 min read

பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் இருக்கக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் அண்மையில் வாக்களித்தனர். அதைப் போன்று ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்துதான் இருக்க வேண்டும் என்றும் 2014-இல் பொதுஜன வாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது.

பொதுஜன வாக்கெடுப்பு அல்லது கருத்தறியும் வாக்கெடுப்பு என்று அழைக்கப்படுகின்ற Referendum Plebiscite முறை நேரிடையாக மக்களே பங்கேற்று முடிவெடுக்கின்ற முறையாகும். நாட்டில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள், முக்கியப் பிரச்னைகள் குறித்து தீர்வு காணவேண்டிய விடயங்களுக்கு, மக்களே ஆம் இல்லை என்ற கருத்து வாக்களிக்கின்ற முறைதான் பொதுஜன வாக்கெடுப்பு.

இதை நேரடி ஜனநாயகம் என்பார்கள். சில நாடுகளில் பொது வாக்கெடுப்பு Plebiscitory என்று அழைக்கப்படுகிறது. இதன் முடிவுகள் சில சமயங்களில் ஆலோசனைகளாகவும், பரிந்துரைகளாகவும், அரசு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளாகவும் அமையும்.

பொதுத் தேர்தல் போன்று இல்லாமல் எப்படி கிரேக்கத்தில் நகர அரசுகளில் மக்களே பங்கேற்றார்களோ அதைப் போன்று அரசின் முடிவுகளிலும் மக்கள் பங்கேற்கும் முறைதான் இது. இந்த முறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது.

உலக அளவில் 58 ஜனநாயக நாடுகளில் இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் 39 நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பை பின்பற்றுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் இம்முறை நடைமுறையில் உள்ளது.

நாட்டின் முக்கியப் பிரச்னைகள், தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல் (Recall)  போன்ற சூழல்களில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. பிரதானமாக நேரடி ஜனநாயகம் இந்த முறைகளில் விளங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவம் என்பது இந்த முறைக்கு சம்பந்தமில்லை. மக்களே நேர்மையாக தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் வெளிப்படையாக சொல்வதுதான் பொதுஜன வாக்கெடுப்பு.

"மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் இனிஷியேட்டிவ் முறையில் மனுக்கள் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை பதவியிலிருந்து திரும்ப அழைக்கும் முறை மக்களின் உரிமையாகும்' என்று அரசியல் அறிஞர் ஜேம்ஸ் டஃப் பார்னட் கூறுகிறார். மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் முறைக்கு கோட்பாடுகளை வடிவமைத்தவர் இவர்.

இந்தியாவில் இது நடைமுறையில் இல்லை. ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் பொதுஜன வாக்கெடுப்பு நடைமுறையில் இல்லை.

1933-இல் இங்கிலாந்தில் ஜேம்ஸ் கோல்டுஸ்மித்தால் ரெஃபரெண்டம் கட்சி என்ற மக்களின் கருத்துகளை முன்னெடுக்கும் அரசியல் கட்சி துவக்கப்பட்டது. அந்தக் கட்சியினுடைய தாக்கம்தான் இன்றைக்கு பிரிட்டனில் இயங்கும் யூ.கே.ஐ.பி. கட்சி. இந்த இயக்கம்தான் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இருக்கக் கூடாது என்ற பிரசாரத்தை நடத்தியது.

பொதுஜன வாக்கெடுப்பு போன்று மக்களோ, மக்கள் குழுக்களோ கையொப்பமிட்ட மனுக்கள் மூலமாக நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு மக்களின் கருத்தறிய வாக்களிப்பை நடத்துவதற்கு பெயர்தான் இனிஷியேட்டிவ் (Initiative) என்கிற மக்கள் முயற்சி. இதுவும் பொதுஜன வாக்கெடுப்பு போன்ற நடைமுறைதான். இது அமெரிக்காவில் முதன்முதலாக 1890-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

இதில் பிரதான பங்கு மக்களே. அரசு வெறும் பார்வையாளர் மட்டும்தான். சுவிட்சர்லாந்திலும் பல சமயங்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, முதல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இந்த முறையில் செயல்படுத்தியது. இம்முறையால் மக்கள் பிரதிநிதி மன்றங்களில் வினாக்கள் எழுப்பப்பட்டு நாட்டின் தலைவர்களே பிரச்னைகளைக் கண்டு அச்சம் கொண்டதும் உண்டு.

பல வகையான வாக்கெடுப்புகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரு புதிய, புரட்சிகர அரசியலமைப்பின் மீது 1793-இல் பிரான்ஸ் வாக்களித்தபோதிலிருந்து, தற்போது வரை ஏறக்குறைய 3000 வாக்கெடுப்புகள் உலகமெங்கும் நடந்துள்ளன. தேசிய மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறித்து பல வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. பாலியல் தொழில், மாஃபியா, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டனின் உறுப்புரிமை இவையனைத்துமே மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.

1970-லிருந்து வாக்கெடுப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 1990-களில் உச்சத்தைத் தொட்டது. மாஃபியா உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து கூட 1995-ஆம் ஆண்டில், இத்தாலி 12 பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது.

1997-ஆம் ஆண்டு ஈக்வடார் நாடு 14 பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் அந்த நாட்டு அதிபரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பும் அடங்கும். எரிவாயு பணிகளை தேசிய மயமாக்குவது, வரிகள் செலுத்துவது என பல பிரச்னைகளுக்கும் பொதுஜன வாக்கெடுப்பு பல நாடுகளில் நடந்தன.

கடந்த 2009-ஆம் ஆண்டு, மசூதியில் கோபுர அமைப்புகள் கட்டுதலை தடுக்க ஆதரவளித்து சுவிட்சர்லாந்து வாக்களித்தது. 2012-இல் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஜூரிச், கார்களில் பாலியல் தொழில் நடத்த வசதியினை கொண்டு வருவதற்கு ஆதரவாக வாக்களித்தது. உலகிலேயே, அரசுக்கு சட்டங்களை மக்களே பரிந்துரை செய்யவும், சட்டங்கள் கடுமையாக வலியுறுத்தப்பட்டால் அவற்றின் மீது மக்கள் நேரடியாக வாக்களிக்கவும் வழிவகை செய்யும் ஒரே நாடு சுவிட்சர்லாந்து மட்டுமே.

மக்கள் வாக்கெடுப்புகளின் வினோத தன்மையையும் தாண்டி, தனி நாடாவது அல்லது ஓர் அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, அது கவனத்தையும் ஈர்க்கிறது.

1945-ஆம் ஆண்டிலிருந்து, 50-க்கும் மேற்பட்ட விடுதலை கோரும் வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகளில் விடுதலை வேண்டுமா என்பதற்கு ஆம் என்றும், 25 வாக்கெடுப்புகளில் வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளன. ஆம் என்று வாக்களித்த நாடுகளில் மோசமான ஜனநாயகமே இருந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

1990-களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன. சோவியத் யூனியன் உடைந்த போது, அவற்றில் எட்டு நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து மூன்று நாடுகள் பிரிந்தன. எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும் விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இந்த முடிவினை அங்குள்ள கொடூரமான போராளிக் குழு எதிர்த்தது.

பெரும்பாலான கருத்தறியும் வாக்கெடுப்புகள் புதிய மற்றும் வெளிப்படையான சகாப்தத்தின் தொடக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், விடுதலை கோரும் வாக்கெடுப்புகள் திரும்ப எட்ட முடியாத ஒரு வழிமுறையினை தொடக்கி விடுவதாக சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1967-இல் இருந்து அமெரிக்காவிடமிருந்து விடுதலை வேண்டுமா என்று கேட்டு நான்கு வாக்கெடுப்புகளை ப்யுயர்ட்டோ ரிக்கோ நடத்தியது. இவையனைத்துக்குமே இல்லை என்றே வாக்களிக்கப்பட்டது. அதே வேளையில், கனடாவை விட்டு வெளியேறுவதற்கு எதிராக இரண்டு முறை கியூபெக் வாக்களித்தது. ஆனாலும், அங்கு இன்னொரு வாக்கெடுப்பு வேண்டுமென தற்போது பரப்புரைகள் பலமாக உள்ளன.

உலகில், ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பிரிந்த நாடுகள் ஆகும்.

போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும், நியூ கலிடோனியா பிரான்ஸ் நாட்டிடமிருந்தும் தங்களுக்கு தனி இறையாண்மையை வழங்க பொதுஜன வாக்குரிமை வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றன.

இலங்கையில் ஈழக் கோரிக்கைக்காக தனி நாடு வேண்டும் என்று தமிழர்கள் பொதுஜன வாக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இரு தேசம் ஒரு நாடு என்ற நடைமுறையாவது வரவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கையில் தமிழர்கள் வைத்துள்ளனர்.

உலக அளவில் பொதுஜன வாக்கெடுப்பு என்கிற பிளெபிசிட்டி, மக்கள் முயற்சி என்ற இனிஷியேட்டிவ் என்பவை மக்களுக்கு வழங்கப்படுகின்ற அடிப்படை உரிமைகள். மக்களும் நாட்டை வழிநடத்துவதில் பங்கேற்று, அதன்மூலம் ஆரோக்கியமான அரசியல், ஜனநாயகம் மேம்பட இந்த கோட்பாடுகள் அவசியம். ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தில் இதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி தனி மாநிலமாக அங்கீகாரம் பெற பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்தியாவில் காஷ்மீர் பிரச்னை, நதிகள் இணைப்பு, மத்திய - மாநில உறவுகள் போன்ற பல விடயங்களில் பொதுஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் நடைமுறைப்படுத்த இங்கு வழி வகை இல்லை.

வடகிழக்கு மாநிலங்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடும்பொழுதும் இதே கோரிக்கைகள் எழுந்தது.

நாகாலந்து மக்கள் தங்கள் தேசிய இன அடையாளத்தை மீட்டெடுக்க 50 ஆண்டுகளாக போராடுகின்றனர். இது ஆயுதப் போராட்டமாகவும் உருவெடுத்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தனிநாடு கேட்டுப் போராடிய ஐசக் - மொய்வா தலைமையிலான நாகா தேசிய சோசலிச கவுன்சில் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்போது இந்திய அரசு நடத்தி வந்த அமைதி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, நாகாலாந்து மக்களுக்கு தனி கொடியும், தனி கடவுச்சீட்டும் ஏற்படுத்திக்கொள்ள இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாசாரங்கள், பண்பாடுகள், தட்பவெப்பநிலைகள் இருக்கும் நிலையிலும் பன்மையில் ஒருமை என்ற கொள்கைப்படி ஒருமைப்பாடு என்ற கண்ணியத்தை காத்து வருகின்றோம். மக்களின் அபிலாஷைகளுக்கேற்ற வகையில் தீர்வுகள் கிட்டவேண்டும்.

மக்கள்தொகையும் பெருகி வருகின்றது. பிரச்னைகளும் தேவைகளும் அதிகரிக்கின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பொதுஜன வாக்கெடுப்பு போன்ற முறைகள் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கலாம். அந்த சிரமங்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் குடியாட்சியில் பங்கேற்கும் வகையில், இங்கு பொதுஜன வாக்கெடுப்பு முறை வரவேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த முறையை இடம்பெற செய்யவேண்டும். குடியாட்சியை வலுவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

கட்டுரையாளர்:

வழக்குரைஞர்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com