

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியுற்றார். அவ்வளவாக அறிமுகமில்லாத டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார்? அவர் பெயரிலேயே பதிலும் உள்ளது. ஆங்கிலத்தில் "டிரம்ப்' என்றால் "துருப்புச் சீட்டு' என்று பொருள். தேர்தலில் வெற்றி பெற அவர் வைத்த துருப்புச் சீட்டு, "உலகமயமாக்கலுக்கு ஒரு வேட்டு.'
குளோபலிசம் என்று சொல்லப்பட்ட உலகமயமாக்கலால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறி போயிற்று என்றும், மலிவான சீனத்துச் சரக்குகளின் குவியலிடமாக அமெரிக்கா மாறிப் போனது என்றும், இப்படிப்பட்ட குளோபலிசத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு "அமெரிக்கனிசத்தை' முதன்மைப்படுத்துவதே எனது குறிக்கோள் என்ற பிரசாரம் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தை மிகவும் கவர்ந்துவிட்டது.
அமெரிக்காவின் தனிச்சிறப்பு அந்நியர்களின் புகலிடமாயுள்ளதுவே. புது உலகமான அமெரிக்காவின் அசலான குடிமக்கள் செவ்விந்தியர்கள் மட்டுமே. பின்னர் வந்தவர்கள் ஸ்பானியர்கள். காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிற ஐரோப்பியர்கள் வந்தனர். தோட்ட வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்ட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பு மக்களும் உடன் வந்தனர். ஐரோப்பிய உலகிலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள் வந்தனர். பின்னர் இஸ்லாமியர் வந்தனர்.
இன்றைய காலத்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் இந்தியர்கள், சீனர்கள், இதர கிழக்காசிய நாட்டினர் அமெரிக்கப் பிரஜைகளாயினர். புவியில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட அமெரிக்கா வந்தேறிகளை வாழவைத்த நாடு என்பதால் "அமெரிக்கனிசம்' என்பது கூட மொழி, இனம், நிறம், மதம் கடந்த தேசியமே.
இருப்பினும் ஒரு குறுகிய தேசப்பற்றைப் பூசிக் கொண்டு தேர்தல் சமயத்தில் இடதுசாரிகளின் சோஷலிச கோஷத்தை முழக்கிய டிரம்ப், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் இல்லை. உலகமயமாக்கலால் ஆதாயம் பெற்ற கார்ப்பரேட், மாபெரும் மனைவணிக அதிபர்.
டிரம்ப் வெற்றியால் உலகமயமாக்கல் என்னவாகும்? இந்தியர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் என்னவாகும்? உலகம் வெப்பமய மாதலைத் தவிர்த்து அதைக் கட்டுக்குள் வைக்க முடிவு செய்யப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை என்னவாகும்? பொருளியல் - சூழலியல் நிபுணர்கள் இவை பற்றித் தெரிவிக்கும் சில கருத்துரைகளை கவனிப்போம்.
உலக வர்த்தகத்தில் "ஒரே உலகம்' என்ற கோட்பாட்டில் குறுகிய தேசிய உணர்வுகளைப் புறந்தள்ளி "வாழு - வாழ விடு' என்ற அடிப்படையில் உருவான குளோபலிசமே உலகமயமாக்கல்.
ஆர்தர் டங்கல்(Arthur Dunkol) என்ற ஜெர்மானியப் பொருளியல் மேதை வகுத்தளித்த இந்த திட்டத்தை 1986-இல் உருகுவேயில் நடந்த எஅபப ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது காட்டின் டைரக்டர் ஜெனரல் என்ற முறையில் சமர்ப்பித்தார். 1986-லிருந்து 1993 வரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 15.12.1993-இல் உலக நாடுகள் ஒப்புக்கொண்டு உலகமயமாக்கல் வழிக்கு வந்தது.
1980 - காலகட்டத்தில் உலக வர்த்தகம் படுபாதாளத்தில் இருந்தது. வளரும் நாடுகளில் ஏற்றுமதி குறைந்திருந்தது. அரசு மூலதனம், சோஷலிசம் தோற்று தொழில் நஷ்டம், தொழில் மூலதனம் இல்லை. வளர்ச்சியுற்ற நாடுகளில் மூலதனம் தேக்கமுற்றிருந்தது.
இதைப் போக்க டங்கல் திட்டப்படி உலக வர்த்தகத்தில் இறக்குமதி வரி நீக்கப்பட்டுக் கட்டுப்பாடற்ற சுதந்திர வணிகம் செயலாற்றியது. வளரும் நாடுகளில் அந்நிய மூலதனம் வந்தது. அந்நியர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
"காட்' உறுப்பு நாடுகள் உலகில் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்ய உரிமை பெற்றனர். இப் புதிய முயற்சியால் உலக வர்த்தகம் மீண்டெழுந்தது. நியோ முதலாளித்துவப் பொருளியல் வளர்ச்சி அலகு ஜி.டி.பி. எனப்பட்டது. இது தனிநபர், தேசிய வருமானத்தை வைத்துப் பேசும் அலகு.
இந்த அலகின்படி "காட்' உறுப்பு நாடுகள் எல்லாமே வளர்ச்சி பெற்றன. குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் 2001-15 காலகட்டத்தில் ஜி.டி.பி. 14 சதவீதம் வளர்ச்சி இருந்தது. அதேசமயம் தொழிலாளர் ஊதிய வளர்ச்சி 2 சதவீதமே. அமெரிக்காவில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு உச்சமாயுள்ளது.
கார்ப்பரேட்டுகள் கோடி கோடியாகப் பணம் குவித்தனர். சாமானிய அமெரிக்கன் வாழ்க்கையை ஓட்ட நிறைய ஓவர் டைம், பார்ட் டைம் வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்திய ஏற்றத்தாழ்வில் எலைட் வர்க்கம் (படிப்பாளிகள்) பாதிப்புறவில்லை. அமெரிக்க எலைட் ஓட்டு டிரம்ப்புக்கு விழுந்துள்ளதில் வியப்பில்லை.
நிபுணர்களின் கருத்துப்படி 2008-இல் ஏற்பட்ட நிதி நெருக்கடி நடுத்தர வர்க்கத்தை பாதித்துள்ளது. பற்பல அமெரிக்க வங்கிகள் திவாலாயின. திவாலான தனியார் வங்கிகளுக்கு நோட்டுகள் பில்லியன், ட்ரில்லியன் கணக்கில் மக்களின் வரிப்பணம் வழங்கப்பட்டு அவை தூக்கி நிறுத்தப்பட்டபோது 100 டாலர் சம்பாதிக்க இயலாமல் மில்லியன் மில்லியனாகத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். உலக வர்த்தகத்தில் 20 சதவீத வீழ்ச்சியும் உலக உற்பத்தியில் 13 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம். இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி இல்லாமல் கிரீஸ் திவாலானது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியது. உலகமயமாக்கலில் ஏற்பட்ட சறுக்கல்களை மறுப்பதற்கில்லை.
டிரம்ப் பதவியேற்றதும் தான் தெரிவித்தபடிNAFTA அ என்று பேசப்பட்ட யு.எஸ்., மெக்சிகோ, கனடா அடங்கிய வட அமெரிக்க சுதந்திர வணிக ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தொழில் உற்பத்தித் துறையிலும், கப்பல் தொழிலிலும் அமெரிக்கர்களுக்கு வேலை கிட்டக்கூடும்.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஜி.டி.பி. வளர்ச்சியில் சர்வீஸ் செக்டாரே முன்னிலை. கணினி மென்பொருள் பணி சர்வீஸ் செக்டார் என்பதால் அதற்கு ஆக்கமாயிருப்பது இந்திய, சீன மென்பொருள் பொறியியல் நிபுணர்களே.
அமெரிக்க - ஐரோப்பிய மென்பொருள் பணிகளுக்குத் தேவையான நிபுணர்கள் மிகக் குறைவு என்பதுடன், உள்ளூர் நிபுணர்கள் கேட்கும் சம்பளம் சக இந்திய - சீன நிபுணர்களின் சம்பளத்தைவிட மூன்று பங்கு அதிகமாம். லாபத்தைக் கருத்தில் கொள்ளும் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் டிரம்ப்பின் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒத்துழைப்பது கடினம். எனினும் கிரீன் கார்டு (அமெரிக்கக் குடியுரிமை) பெறுவதில் வேகத்தடை இருக்கும்.
அமெரிக்க அரசியல் ஆதாயத்திற்காக டிரம்ப் தேசியம் பேசலாம். உலக அளவில் சமாதானம், அமைதி, சுற்றுச்சூழல், உலக நிதி, உலக வர்த்தகம் போன்ற பல விஷயங்கள் ஐ.நா. தலைமையில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். உலக வர்த்தகத்தில் உலகமயமாக்கலுக்குரிய ஒரு பண்பான பன்முக உறவு (Multilateralism) தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுப் பழைய இருமுக உறவு(Bilateralism) தொடரும்.
இன்று மிகவும் கவலைக்குரிய விஷயம், 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை மீறும் வழியில் டிரம்ப் வெளிப்படையாகப் பேசுவதுதான். வளரும் நாடுகளோடு சமஉரிமை கோருகிறார். அமெரிக்காவின் நிலக்கரிச் சுரங்க முதலைகளை உசுப்பி விடுகிறார்.
சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்று எரிசக்தி உற்பத்தி வளர்ச்சியில் அவர் அக்கறை காட்டுவதாயில்லை. எனினும், மக்காச்சோளத்திலிருந்து எடுக்கப்படும் ஆல்கஹால் கலந்த பயோ - பெட்ரோல் உற்பத்தியில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இது ஜின் பெட்ரோல். இதைப்போல் கரும்புச் சாறிலிருந்து ரம் - பெட்ரோல் (எத்தனால்) உற்பத்தியில் பிரேசில் முன்னிலை.
பாரிஸ் 2015 புவிமகாநாட்டின் தனிச்சிறப்பு இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடியின் பங்கேற்பு. பிரான்ஸ் ஜனாதிபதி ஃப்ராங்க் ஹாலண்டும், மோடியும் இணைந்து அனைத்துலக சூரிய மின்சக்தி உடன்படிக்கை மேற்கொண்டனர். 100 பில்லியன் டாலர் நிதி உதவி திரட்ட 20 நாடுகள் முடிவெடுத்தன.
சூரிய மின்சக்திப் பயன்பாட்டில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று கூறியதுடன், எல்லா மாநிலங்களிலும் மைய அரசு உதவியுடன் சூரிய மின் உற்பத்திக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் இப்போது செயல்படுகின்றன. சூரிய மின் உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிக்கிறது.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழியில் பசுமையக நச்சுவாயுக்களை ஏற்படுத்த நீடித்த பண்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பதே வளரும் நாடுகளின் முக்கியப் பிரச்னை. இதற்கான செலவு மதிப்பு 2030 வரை ஆண்டுதோறும் 1 ட்ரில்லியன் முதல் 3 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகை உலக வங்கியிலிருந்து பன்முக உலக வளர்ச்சி வங்கிகள் (Multilateral Development Banks) பிரிக்ஸ் வங்கி, சீனா தோற்றுவித்துள்ள ஆசிய வளர்ச்சி வங்கி, உள்ளூர் வளர்ச்சி வங்கிகளுக்கு வந்து செலவாக வேண்டும். ஆனால் இம்முதலீட்டை வளர்ச்சியுற்ற நாடுகள் உலக வங்கிக்கு வழங்க வேண்டும்.
முதல் இருந்தும் முதலீடு செய்ய வளர்ச்சியுற்ற நாடுகள் தயங்கும் காரணம் மாற்று எரிசக்தித் தொழில்நுட்ப சாதனங்களை தனியார், கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. உலக வங்கி மூலம் தனியார் நிறுவனங்களிடம் வாங்கும் திட்டத்தை வளரும் நாடுகள் வழங்கவில்லையாம். இந்தப் பிரச்னையில் ஒரு சமரசம் தேவை. உலக வங்கிக்கு வழங்கப்படும் முதல் தனியார் லாப வேட்டைக்கு வித்திடாமல் வளரும் நாடுகளின் வாங்கும் சக்திக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இன்று எ20-இன் தலைமை ஜெர்மன் அதிபரிடம் உள்ளதால் அவர் அமெரிக்காவிடம் சமரசம் பேசும் வாய்ப்பு உண்டு. வளரும் நாடுகளின் தொழில் வளர்ச்சிக்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளதால் அவற்றின் ஏற்றுமதி உயரும்போது உலக வர்த்தகம் உய்வு பெறும்.
அமெரிக்காவுடன் வர்த்தக நட்புள்ள சீனா, மெக்சிகோ, மற்ற போட்டி நாடுகளுடன் மோதினால் அமெரிக்கா மேலும் ஏழ்மையாகும். வளர்ச்சியுற்ற வடக்கு நாடுகளில் மிக ஏழை நாடு என்று டிரம்ப் பேசியுள்ளார்! நட்பு நாடுகளுடன் மோதாமல் நல்ல ராஜதந்திரத்தை டிரம்ப் கடைப்பிடித்தால்தான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
உலக அரங்கில் உலகமயமாக்கல் அவ்வளவு எளிதாக விடை பெறாது. அமெரிக்காவும் பிரிட்டனும் வேகத்தடை போட்டுள்ளன. இந்த வேகத்தடை நீக்கம் பெற்று, உலகம் பயங்கரவாதத்திலிருந்தும், காலநிலை மாற்றத்திலிருந்தும் விடைபெறுமா என்பது விரைவில் தெரியும்.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.