யாருக்கு வந்ததிந்த சுதந்திரம்?

இறைவனையும் சமயத்தையும் பராமரிப்பதற்காக வந்த சிலர் செய்யும் குதர்க்கங்களால், ஒட்டுமொத்த சமயமும் சமுதாயமும் தலைகுனிந்து நிற்கின்றது.
Updated on
3 min read

இறைவனையும் சமயத்தையும் பராமரிப்பதற்காக வந்த சிலர் செய்யும் குதர்க்கங்களால், ஒட்டுமொத்த சமயமும் சமுதாயமும் தலைகுனிந்து நிற்கின்றது. செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடர் கே.ஜே. ஜேசுதாஸ். ஐயப்பன் தரிசனத்துக்காக விரதமிருந்து மாலை அணிபவர். குருவாயூரப்பனை உள்ளங்குளிர குளிர, நம் செவிகள் மணக்க மணக்கப் பாடுபவர்.
தேவஸ்தான அறங்காவலர்கள் அவரைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. "ஒருநாளைக்குத் தரிசிப்பேன்' என்று நந்தனார் ஏங்கி நின்றதைப்போல கே.ஜே. ஜேசுதாசனும் ஏங்கி நிற்கின்றார். "ஜாதி மதங்களைப் பாரோம் } உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்' என மகாகவி பாரதி பாடியது, பழங்கனவாய்ப் போயிற்றே!
இவ்வாண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிகளைத் தரிசிக்க வேண்டுமென்று ஏழு முறை தேசிய விருது பெற்ற கே.ஜே. ஜேசுதாஸ், தேவஸ்தான அறங்காவலர்களுக்கு விண்ணப்பித்தார். அறங்காவலர்கள் நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு, அவரைத் திருக்கோயிலுக்குள் நின்று தரிசிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கினார்கள்.
கடந்த நவராத்திரியின்போது ஆலயத்திற்குள் ஒருநாள் தம் கச்சேரியை நிகழ்த்த வேண்டும் என்று ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.
அயர்லாந்தைச் சேர்ந்த மார்க்ரெட் எலிசபெத் நோபிள் என்னும் பெண்ணை சுவாமிஜி விவேகானந்தர் நிவேதிதா தேவி ஆக்கினார். அவரைச் சாரதா அம்மையாருக்குச் சீடராக்கி, அந்த அம்மையாரைப் பராசக்தியாகவே பார்க்கச் செய்தவர், சுவாமிஜி. நிவேதிதா தேவியைத் தம் குருமணியாக ஏற்றவர், மகாகவி பாரதியார்.
மார்க்கிரெட்டுக்குக் கிடைத்த அருட்பார்வையில், ஒரு கடைக்கண் பார்வையாவது கே.ஜே. ஜேசுதாஸ் மீது படக்கூடாதா? அயல்நாட்டு நிவேதிதாவுக்குத் திறக்கப்பட்ட சந்நிதி, ஏன் இந்திய நாட்டு ஜேசுதாசுக்கு மூடப்படுகிறது?
இந்து மதம் எதையும் புறந்தள்ளாதது; தம்பால் வருகின்ற எந்தச் செம்பொருளையும் இருகரம் ஏந்தி ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அதனை "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான்' என்பார், அப்பர் சுவாமிகள்.
சகல தரப்பினரையும் அரவணைப்பவன் சிவபெருமான் என்பதால், மாணிக்கவாசகர் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்றார். "இறைச் சிந்தனையோடு வரும் எவரையும் புறந்தள்ளுபவன் அல்லன் சிவன்' என்பதற்குச் சேக்கிழார் ஓர் அருமையான நாயனார் வரலாற்றைச் சொல்லுவார்.
திருச்சங்கமங்கையிலே சைவக்குடும்பத்திலே ஒரு நாயன்மார் தோன்றினார். அவர் உலகத் துன்பங்களுக்கு ஓர் எல்லை காணப் பெüத்த மதத்திற்குள் புகுந்து, காஞ்சியில் ஒரு பெüத்தராகவே மாறிய காரணத்தால், அவர் சாக்கிய நாயனார் என அழைக்கப்பட்டார்.
பிற்காலத்தில் சிவநெறியே சிறந்ததென்று எண்ணி, பெüத்த வேடத்திலேயே நின்று மலருக்குப் பதிலாகச் செங்கல்லையே சிவபெருமான் மீது பொழிந்து, அவனருளால் ஆட்கொள்ளப்பெற்றார். அதனைத் தெய்வச் சேக்கிழார், "எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மன்னியசீர்ச் சங்கரன் தாள் மறவாமை' எனப் பாடுவார்.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில், பரதவியா கிராமத்தில், சோமேஸ்வர் ஆலய வாசலில், நவராத்திரி விழாவின்போது விடிய விடிய கோலாட்டம், கும்மி நடனங்களைப் படேல் வகுப்பினைச் சேர்ந்த பெண்கள் நிகழ்த்துவர்.
25.09.2017 அன்று அந்நிகழ்ச்சி நடக்கும்போது, அந்நடனத்தைப் பக்கத்துக் கிராமத்திலிருந்த இரண்டு தலித் இளைஞர்கள் பக்கத்திலிருந்த சுவற்றின்மேல் நின்று பார்த்திருக்கின்றனர். அவர்கள் பார்த்ததை படேல் வகுப்பினைச் சார்ந்த இளைஞர்களும் பார்த்துவிட்டனர்.
உடனே, அந்தப் படேல் இளைஞர்கள் மதில் மீது அமர்ந்திருந்த ஜேயேஸ் சோலங்கி என்ற தலித் இளைஞனைப் பார்த்து, "இந்த நிகழ்ச்சியைப் பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?' எனக் கேட்டனர்.
அதற்கு அந்தத் தலித் இளைஞன் "உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ, அந்த உரிமை எனக்கும் இருக்கின்றது' என்று சொல்லியிருக்கிறான். உடனே படேல் இளைஞர் சமுதாயத்தினர் ஜேயேஸ் சோலங்கி என்ற தலித் இளைஞனைப் பிடித்து இழுத்துச் சுவற்றிலேயே அவன் தலையை மோதி மோதி, அவனை நினைவிழக்கும்படியாகச் செய்திருக்கின்றனர். அதற்குப் பிறகும், அவன் மார்பிலே எட்டி எட்டி உதைத்திருக்கின்றனர்.
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நிலையிலும் ஓங்கி ஓங்கிக் குத்தியிருக்கின்றனர். விடியற்காலை 4.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வைத்து அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அவன் பாதி வழியிலேயே மரணித்துவிட்டான்.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் தாவல் படேல் கலவரப்பட்ட கிராமத்திற்கு வந்து, சோலங்கி என்ற 21 வயது இளைஞனுடைய தாய் மதுபென் அவர்களிடம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை ஆறுதல் தொகையாக வழங்கியிருக்கிறார்.
மகனை இழந்த தாய்க்கு ஓர் உயிரைத் தர முடியாதே! கொலை செய்த படேல் சமூகத்து இளைஞர்கள் இ.பி.கோ. 302-இன்படி கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அதற்கடுத்துச் சில நாட்களில் குஜராத் } காந்தி நகர் பகுதியில், லம்போதரா வட்டாரத்தில் மீசை வைத்துக் கொண்டு போன தலித்துக்களைக் கட்டி வைத்து அடித்திருக்கின்றனர். ராஜ்புத் இனத்தவரும் தர்பார் இனத்தவரும் வாழ்கின்ற வட்டாரத்தில், எந்த இளைஞனும் மீசை வைத்துக்கொண்டோ, டர்பன் அணிந்து கொண்டோ, குதிரை மீது அமர்ந்தோ போகக்கூடாது.
லம்போதரா கிராமத்திலிருந்து ஒரு தலித் இளைஞன் முடிவெட்டிக் கொள்ள முடிதிருத்தகம் செல்ல வேண்டுமென்றால், 8 கி.மீ. நடந்தேதான் செல்ல வேண்டும். தலித்துகளுக்கு எந்த முடிதிருத்துபவராவது முடி திருத்தினால், அவர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்.
நாயன்மார்களில் ஒருவராகிய நந்தனார் (திருநாளைப் போவார்), இன்றும் நாம் வணங்குவதற்குரிய ஒருவராக இருக்கின்றாரே! இன்று நாம் வழிபட்டுக் கொண்டிருக்கும் ஆழ்வார்களில், திருப்பாணாழ்வார் என்பவர், மிகவும் புறக்கணிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராயிற்றே!
திருப்பாணாழ்வார் தாழ்வு மனப்பான்மையினால் திருவரங்கம் கோயிலுக்குள் நுழையாமல் காவிரிக்கரையில் நின்றவண்ணம் சேவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தாழ்வுமனப்பான்மையைப் போக்க ரெங்கநாதர் தம்மைப் பூசிக்கும் பட்டர்பிரான் உலோக சாரங்கரைவிட்டு திருப்பாணாழ்வாரை அழைத்துக்கொண்டு வரச்சொன்னார்.
உலோக சாரங்கர் வேண்டியும் திருப்பாணாழ்வார் திருவரங்கம் மண்ணைத் தாம் மிதிக்க முடியாதென்றார். ஆனால், உலோகசாரங்கர் விடாப்பிடியாக அவரைத் தம் தோளில் அமர்த்தி, ரெங்கநாதர் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்தினார். "வம்பவிழ் தார் முனிதோளில் வந்தபிரான் வாழியவே! வைத்த கண்ணை மற்றொன்றில் வையாதான் தாள் வாழியவே' என்பது அகச்சான்றாகும்.
இவற்றையெல்லாம் படிக்காத காரணத்தால்தான், குஜராத்தில் சுவற்றில் மோதியே கொல்கிறார்கள் போலும்!
இந்த நாட்டிற்கு விடுதலை வருவதற்கு முன்பேயே அமரத்துவம் அடைந்த மகாகவி பாரதி, எத்தனை பெரிய இலட்சியத்தோடு, இந்த நாட்டினுடைய விடுதலையை வரவேற்றுப் பாடினார். "பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை' என்றானே, அந்த எரிமலைக் கவிஞன்! தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்ட இனத்தவருக்கு மட்டுமன்றி, கேரளத்து ஈழவர்களுக்கும் (தீயர்) சேர்த்தல்லவா விடுதலையை வேண்டினான்!
வந்த சுதந்திரம் யாருக்கு வந்தது? கச்சத்தீவு வரை மீன்பிடிக்கும் மீனவர்களுக்கும் சேர்த்துத்தானே விடுதலையை வேண்டினான்! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை வந்திருக்குமானால், சுவற்றில் மோதிக் கொல்லப்படுவார்களா? எந்த முயற்சியுமின்றி வளருகின்ற மீசைக்கும் கட்டுப்பாடு என்றால், அந்த இளைஞனுடைய சுதந்திரத்தை யார் திருடியது?
"150 ஆண்டுகள் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அடிமை நிலையில் இருந்ததற்காகப் போராடிச் சுதந்திரம் கேட்கிறீர்கள். ஆனால், 2,500 ஆண்டுகளாக நாங்கள் உங்களிடம் அடிமைகளாயிருக்கிறோமே, எங்களுக்கு எப்போது சுதந்திரம்?' என டாக்டர் அம்பேத்கார் எழுப்பிய கேள்வி, இன்னும் பதில் இல்லாமலே நிற்கின்றதே!
அடிமை இந்தியாவில் கேரளத்தில் நிலவிய சாதி இழிவுகளைப் பார்த்து சுவாமி விவேகானந்தர், "இதுவொரு பைத்தியக்காரர்களின் சரணாலயம்' என்றாரே. அந்த சுவாமி இன்றிருந்தால் குஜராத்தில் நிலவுகின்ற சாதி வெறியைப் பார்த்து, குஜராத்தையும் அப்பட்டியலில் சேர்த்திருப்பார்.
"நாடு சுதந்திரம் அடைவதற்கு எதிராக நாங்கள் என்றுமே இருந்ததில்லை. ஆனால், ஒரு கேள்விக்கு எங்களுக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். இவர்கள் சுதந்திரம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால், எங்கள் நிலை எப்படியிருக்கும்? எங்கள் துன்பங்கள் தீருமா?
எம் குழந்தைகள் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டுமா? சுதந்திர இந்தியாவில் சுதந்திர மக்களாக நாங்கள் வாழ முடியுமா? சுரண்டுவதும் ஒடுக்குவதும் ஓயுமா? எம் தாய்மார்களின் மானம் மதிக்கப்பெறுமா?' என வாழும்போது டாக்டர் அம்பேத்கார் எழுப்பிய குரல், இன்றும் அவருடைய கல்லறையிலிருந்து ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com