

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி' என்று பெருமிதத்துடன் பேசிக்கொள்கிறோம். வரலாற்றுக் காலங்களிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களிலும் யவனர் முதலான பிற தேசத்தவர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கும் படைகளில் இடம் பெற்றிருந்ததற்கும் சான்றுகள் உள்ளன. யவனம் முதலான தேசங்களில் பாண்டிய தேசத்துத் தூதர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தமிழர் கடலோடிகளாக வாழும் விருப்பம் உடையவர்கள். சங்ககாலம் தொடங்கி வாணிபம் முதலான காரணங்களுக்காக வெளிநாடுகளில் குடியேறி வாழ்ந்திருக்கிறார்கள்.துறைமுகம் பற்றியும் வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது பட்டினப்பாலை.
சுதந்திரப் போராட்ட காலத்திலும் சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற தேசங்களில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்திருந்ததை அவர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்குகொண்டதை வைத்துத் தெரிந்து கொள்கிறோம். வெளிதேசங்களில் இருந்து வந்தவர்கள் இங்கேயே வாழ்ந்தமையும் நம்மவர்கள் வெளிதேசங்களில் பரிவர்த்தனை செய்து கொண்டதையும் வரலாறு நெடுகிலும் காண்கிறோம். இப்படி உலகத்தை ஒரு குடும்பமாகப் பார்த்த விசாலமான பார்வை தமிழர்களுக்கு இருந்தது.
முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதி பாடிய மண்ணில் சொந்த தேசத்தைச் சேர்ந்தவர்களையே அந்நியர்கள் என்று காணும் நிலையில் சிலரது சிந்தனை இருப்பது வேதனைக்குரியது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் குடியேற்ற உரிமையை அங்கீகரிக்கிறது. "ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற சிந்தனையும் இதன் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்கள் இன்றைய மக்களின் வேகமான இடப்பெயர்ச்சியின் விளைவாக அவசியமாகின்றன. போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும் நாளில் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்காக, தொழிலுக்காக இடம்பெயர்தல் சாதாரணமானது.
"வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே இந்தியராக நமக்கான தனிச் சிறப்பு. தமிழராக "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தனித்த அடையாளம். நம்மவர்கள் வெளிமாநிலங்களில் மிகப்பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்பும் வசதியும் மற்றொரு மாநிலத்தில் சாத்தியமாகிறது என்பதனால் இடம் பெயர்கின்றனர். அதே போல வடமாநிலங்களில் இருந்து இங்கே பிழைப்புக்காக வருவோர் அவர்களின் தகுதிக்கேற்ப வேலைகளைத் தேடிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இப்படி வேறு மாநிலங்கள் குறிப்பாக உத்தர பிரதேசம், பிகார், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருவோர் குறித்தான விமர்சனங்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கின்றன. இவர்களை அந்நியர்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்த உழைக்கும் மக்கள் மீதான வெறுப்பு சிலரது மனதில் வேரூன்றியிருக்கிறது. இது அந்த உழைப்பாளர்களின் பிழை அல்ல. அழுக்குப் படிந்த மனநிலையின் வெளிப்பாடு. இத்தகைய சிந்தனைகள் தமிழராக நம் தரத்திற்கு சரியல்ல; நமது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதும்கூட.
வடமாநிலத்திலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களை "பானி பூரிகாரர்கள்' என்று விமர்சிப்பதில் தொடங்கி "வடக்கன்' என்ற ஏளனம் செய்வது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில், "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்ற கருத்து அரசியலுக்காக முன்வைக்கப்பட்டது. அப்பொழுது காமராஜரின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசிய சிந்தனையும் வாழ்வியலும் மக்கள் மனதில் வேர்கொண்டிருந்த காலத்தில் அத்தகைய சிந்தனையை உடைப்பதற்காக இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.
உண்மையில் அந்த காலகட்டத்தில் மத்திய அரசின் வாயிலாக தமிழகம் அடைந்த நன்மைகளின் பட்டியல் மிகப்பெரியது. இந்திய தொழிற்கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.) தொடங்கி பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அந்த அடித்தளம்தான் இன்றளவும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னோடி மாநிலமாக இருப்பதற்குக் காரணம்.
தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ ஆறு லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாக மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்திருக்கிறார். இந்த ஆறு லட்சம் பேரும் ஒன்றாகக் கூடி நம்முடைய உரிமைகளை அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடுவார்கள் என்ற கருத்துகளைப் பரப்ப சிலர் முற்படுகின்றனர்.
இந்த சிந்தனையில் நேர்மை இல்லை. ஏனெனில், தமிழர்கள் பல மாநிலங்களில் பெரிய அளவில் வாழ்கின்றனர். குஜராத், மகாராஷ்டிரத்தில் மும்பை, தலைநகர் தில்லி போன்ற ஊர்களில் தமிழர்கள் வாழும் பகுதிகள் என்றே தனியாக இருக்கின்றன. சில பகுதிகளில் தமிழர்களின் வாக்கு சதவீதம் தேர்தலில் வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் அளவில் இருக்கிறது.
மும்பை வாழ் தமிழ் நாடார் பெருமக்கள் அங்கே சங்கம் அமைத்துள்ளனர். சமீபத்தில் அந்த சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அதில் காணொலி வாயிலாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு வாழ்த்துகிறார். காமராஜரின் புகழ் பாடுகிறார்.
இது ஓர் உதாரணம் மட்டுமே. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இது போல சங்கங்கள் இருக்கின்றன. அங்கே வாழும் தமிழர்கள் சிறப்பாகவே வாழ்கின்றனர். இதுதான் இந்தியா. நம்முடைய மக்கள் வேறு மாநிலங்களில் வாழ்வதைப் பெருமையோடு சொல்லிக்கொள்வதும் பிற மாநிலத்தவர்களை இங்கே இழிவாக நடத்துவதும் முதிர்ச்சியின்மை அல்லது நேர்மையின்மை என்பதன்றி வேறில்லை.
வடமாநிலத்தவர்களை அந்நியர்கள் என்று பிரிவினை பேசுவோர் பிற நாடுகளில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் அண்டை நாடுகளுக்குள் நுழைவோரோடு, சொந்த நாட்டுக்குள் வேலை தேடி இடம்பெயர்வோரை ஒப்பிடுவதன் உள்நோக்கம் என்ன? பிரிட்டன் அரசு தங்கள் நாட்டுக்குள் ஆவணம் ஏதுமின்றி நுழையும் சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் அகதிகள் கொள்கையை விமர்சிக்கிறார்கள். அத்தகைய அகதிகளுக்காகக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் சொந்த தேசத்தவரை "அந்நியர்கள்' என்று பேசுவதற்குப் பின் ஒளிந்திருக்கும் அரசியல் யாது? சிந்திக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் வடமாநில சகோதரர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். பணியிடத்தில் உழைப்புக்குக் கணக்குப் பார்ப்பதில்லை. கிடைக்கும் ஊதியத்தை சிந்தாமல் சிதறாமல் சிக்கனமாக இருந்து குடும்பத்திற்கு அனுப்புகின்றனர்.
சமீபத்தில் இந்தச் சகோதரர்கள் தங்களுக்கு வேலை தரும் முதலாளியின் இல்ல விழாவில் சகோதரர்கள் செய்ய வேண்டிய சீர்வரிசையை செய்து மகிழ்ந்தனர். இப்படி எல்லாரும் கூடி மகிழ்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் பொழுது எதிர்மறை சிந்தனையை விதைக்க வேண்டிய அவசியம் என்ன? அதன் பின்னிருக்கும் அரசியல் யாது?
இந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வந்த இடத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி சிந்திக்க வேண்டியது தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும்தான். இப்படி வரும் சகோதரர்களை அந்நியர் படையெடுப்பாகவும் ஆக்கிரமிப்பாகவும் பார்ப்பவர்கள் தங்களை மண்ணின் மைந்தர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது துரதிருஷ்டவசமானது.
சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! கிளியே!
செம்மை மறந்தாரடீ
என்று பாரதியார் பாடியது இவர்களை எண்ணித்தான் போலும்.
வடமாநில சகோதரர்கள் கட்டடத் தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள், செங்கல் சூளைகள், கடைகள், அழகு நிலையங்கள், விவசாயக் கூலிவேலை வரை அனைத்து உற்பத்தித் துறை, சேவைத் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். இத்தகைய கடினமான வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. மேம்பாலங்கள் அமைத்தல், ரயில்வே பாதை அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்று நம்மவர்கள் நினைத்தும் பார்க்காத வேலைகளை அவர்கள் உற்சாகத்துடன் செய்கின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் இல்லாவிடில், அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளை செய்வதற்கு நம்முடைய தமிழ் இளைஞர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? தமிழர்கள் சிறு தொழில் செய்தேனும் வளத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்பவர்கள் என்றால் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் கடின உடல் உழைப்பைச் செலுத்தித் தங்கள் குடும்பங்களைக் காக்க முற்படும் தன்மை கொண்டவர்கள். இருதரப்பும் புரிதலோடு இணைந்து பணியாற்றும் பொழுதே இரு தரப்பிற்கும் வளர்ச்சி சாத்தியமாகும்.
அரசு இத்தகைய பிரிவினை சிந்தனையை அனுமதிக்கக் கூடாது. சொந்த சகோதரர்களை அந்நியர்கள் என்ற மனோபாவத்துடன் காண்பது நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய பிரிவினை சிந்தனை தேசத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தமிழர்களின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
சிந்தனைத் தெளிவும் நேர்மையும் கொண்ட பெரியோர்கள் தேசத்தின் ஒற்றுமைக்கான தேசிய சிந்தனையை விதைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.