அடிமை விலங்கை உடைத்தெறிந்த மாமேதை டாக்டர் அம்பேத்கர்!

தலையில் ஒரு தலைப்பாகை, கையில் ஒரு தடி, தோளில் ஒரு அழுக்குப் போர்வை, இடுப்பில் ஒரு கோவணம் இதுதான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆண்மகனின் அடையாளம்.மேல்சட்டை அணியாமல்
அடிமை விலங்கை உடைத்தெறிந்த மாமேதை டாக்டர் அம்பேத்கர்!
Updated on
7 min read

தலையில் ஒரு தலைப்பாகை, கையில் ஒரு தடி, தோளில் ஒரு அழுக்குப் போர்வை, இடுப்பில் ஒரு கோவணம் இதுதான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆண்மகனின் அடையாளம்.மேல்சட்டை அணியாமல்,  முழங்காலுக்கு மேலே கட்டப்பட்ட சேலை, காலணிகள் இல்லாத  வெற்றுக்கால்கள் இது தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த  பெண்மகளின்  அடையாளம்.  இவர்கள் யாவரும் வீட்டு விலங்குகளை வளர்க்கவோ, உலோக  அணிகலன்களை அணியவோ, விருப்பமான உடைகளை உடுத்தவோ,  பிடித்த உணவுகளை உண்ணவோ முடியாது.  பொது நீர்நிலைகளைப் பயன்படுத்தவும், கல்விச் சாலைகளில் படிக்கவும்,  கோயில்கள், பொதுவீதிகளில் செல்லவும் இவர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டிருந்தது. மேற்படி மக்களில் ஒருவராக 1891ஏப்ரல் 14ல்  பிறந்தவர் தான் டாக்டர் அம்பேத்கர்.

பெற்றோர் சொல்லிற்கு மதிப்பளித்தவர்

மகர் பிரிவைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோரை இராணுவத்தில் சேர்க்க மறுத்த ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ராம்ஜி மாலோஜி சக்பால் என்பவர் தான் அம்பேத்கரின் தந்தையாவார். தந்தையாரின் இந்தப் போராட்டக்  குணம் அம்பேத்கரின் ரத்தத்துடன் இதயத்திலும் ஆழமாகப் பதிந்திருந்தது.

தீண்டாமையும் பொருளாதார நெருக்கடியும் கொடுமைகளாக இருந்த  அந்தக் காலக்கட்டத்தில் அம்பேத்கரை மிக உயர்ந்த கல்வியாளராக  மாற்றுவதற்கு அவரின் தந்தை மிகக் கடுமையாக உழைத்தார். தனது  நகைகளை விற்றும் அடகு வைத்தும் புத்தகங்களை வாங்கித் தந்தார்.  மகனை விரைவில் தூங்க வைத்துவிட்டு இரவு இரண்டு மணி வரை  விழித்திருந்து அவரை விடியற்காலைக்கு முன்பாக எழுப்பிப் படிக்க  வைப்பார். பிள்ளைக்கு மெத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் வெறும் தரையில் படுப்பார். கால்பந்து விளையாடவும் கிரிக்கெட்  விளையாடவும் கற்றுக் கொடுத்தார்.

தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட விளையாட்டுப் பயிற்சியிலிருந்து  வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனத்திடத்தை  அம்பேத்கர் பெற்றார். துன்பங்களுக்குப் பயப்படாமல் செயல்படும் திறன்,  எடுத்தச் செயலை முடிக்கும் விடா முயற்சி, சமூகத்தின் நலன் பற்றிய  ஆழ்ந்த ஈடுபாடு ஆகிய மூன்று நற்பண்புகளையும் தந்தையாரிடமிருந்து அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.  மது அருந்தாமை,  புகை பிடிக்காமை போன்ற நல்லொழுக்கங்களையும்  தந்தையாரிடமிருந்தே அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.

தாயார் பீமாபாயைச் சிறுவயதிலேயே  இழந்துவிட்ட போதிலும் அவர்  அடிக்கடிச் சொல்லித் தந்த ‘சுயமரியாதையை எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும்’,  என்ற அறிவுரையை வாழ்நாளின் இறுதிநாள்  வரையிலும் அம்பேத்கர் பின்பற்றி வந்தார்.

தீண்டாமைக் கொடுமைகள்

உயர் ஜாதி மாணவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் மர  இருக்கைகளில் அமர்வார்கள். ஆனால் அம்பேத்கரும் அவரின்  அண்ணனும் பள்ளிக்குச் செல்லும் போது கோணிப்பைகளைத் தனியாகக் கொண்டு செல்வர். தீண்டாமை காரணமாக மற்ற  மாணவர்களுடன் சமமாக உட்காரும் உரிமை தாழ்த்தப்பட்ட  வகுப்பினர்க்கு மறுக்கப்பட்டிருந்தது. நன்றாகப் படிக்கிறார் என்பதற்காகக் கரும்பலகையில் எழுத வருமாறு  ஆசிரியர் ஒருவர் அம்பேத்கரை அழைத்தபோது, மற்ற மாணவர்கள்  கூக்குரல் இட்டுச் சத்தம் போட்டனர். தங்களின் உணவுப்பைகள் தீட்டாகிவிடும் என்று கருதிய அவர்கள், தங்களது உணவுப் பைகளைத் தூக்கிக் கொண்டனர். அம்பேத்கர் அவமானத்தால் கரும்பலகையில் எழுத  முடியாமல் திரும்ப வேண்டியிருந்தது.

கத்திக்கும் தீட்டாகிவிடும் என்று கருதி நாவிதர்கள் அம்பேத்கருக்கு முடி வெட்ட மறுக்கவே, அம்பேத்கரின் சகோதரியே நாவிதராக மாறினார். ஒரு முறை மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்ட போது  அம்பேத்கரையும் அவரின் அண்ணனையும் தாழ்ந்த ஜாதி என்பதை  அறிந்து கொண்ட வண்டிக்காரன் இருவரையும் குப்பைத் தொட்டியில் குப்புறத் தள்ளிவிட்டான்.  தாழ்த்தப்பட்டவர்களை வண்டியில் ஏற்றுவது கேவலமானது என்று  வண்டிக்காரனும் நினைத்திருந்தான்.

உயர்கல்வியைப் படித்து முடித்துப் பரோடா அரசில் இராணுவச்  செயலாளராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டபோதும், அவ்வலுவலகத்தில் வேலை செய்பவர்களும் ஏவலர்களும்தொழுநோயாளியைப் போல்  அம்பேத்கரை நடத்தினர். அங்கு பணியாற்றிய வேலையாட்கள்  படிப்பற்றவர்களாகவும் ஏழைகளாவும் இருப்பினும் கூட, அவ்வலுவலகக் கோப்புகளையும்,தாள்களையும் அம்பேத்கரிடம் நேரில் தராமல்  மேசையின் மீது வீசி எறிந்தார்கள். அவர் புறப்பட எழுந்ததும் அவர் போகும் நடைபாதையில் கிடந்த பாயைச் சுருட்டினர். அவருடையஅலுவலகத்தில்குடிநீர் கூட வைக்கப்படுவதில்லை.

தங்குமிடத்தைக் கூட யாரும் வழங்க முன்வராததால் ஒரு பார்சி  விடுதியில் கூடுதல் கட்டணம் செலுத்தித் தங்கினார். ஆனாலும் கூட  திடீரென ஒரு நாள் ஆயுதங்களுடன் மிரட்டி அவரை விடுதியை விட்டே துரத்திவிட்டனர். இதனால் தனக்குக் கிடைத்த அரசாங்கப் பணியையும் அம்பேத்கர் இழக்க நேரிட்டது. ஆடுமாடுகளை  விட கேவலமாகத் தம் மக்கள் நடத்தப்படுவதை அம்பேத்கர் உணர்ந்தார்.

திருப்புமுனை

பள்ளியில் படிக்கும் போது நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளால்  அம்பேத்கர் மனம் உடைந்தார். பள்ளிக்குச் செல்லத் தயங்கினார்.  விளையாட்டிலும் தோட்ட வேலைகளிலும் ஆர்வம் காட்டினார். தொடர்வண்டி நிலையத்தில் துப்புரவு, கழுவதல் போன்ற  வேலைகளிலும் ஈடுபட்டார். தனக்குக் கிடைக்கும் காசைக் கொண்டு செடி வாங்கி நடுவதில் ஈடுபாட்டுடன் இருந்தார்.தந்தையாருடன் கருத்து  வேறுபாடு கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி பம்பாய்க்குச் சென்று  வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.  இதற்காகத் தேவைப்படும் பயணச் செலவிற்காக தனது அத்தையின் பணப்பையைத் திருடத்  திட்டமிட்டார். 3 நாட்கள் திருட முயற்சி செய்து முடியாமல் நான்காம் நாள் அந்தப் பையத்திருடிவிட்டார். அந்தப் பையைத்திறந்து பார்த்த போது அவருக்கு  அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அந்தப் பையில் இருந்தது வெறும்  அரையணா மட்டுமே.

இது குறித்து அவர் பின்னாளில் அம்பேத்கர் குறிப்பிடும்போது, ‘நான்கு இரவுகளும் நான் திருடும் முயற்சியில் ஈடுபட்டபோது என் உடல் பயத்தால் நடுங்கியது. எனவே வெட்கக்கேடான அந்தத் தன்மையில் இனி பணத்தைச் சேர்ப்பதில்லை என்று  முடிவெடுத்தேன். வேறொரு நேர்மறையான முடிவுக்கு வந்தேன். இந்த  முடிவு தான் என் வாழ்ந்ளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்குச் செல்லாமல் பொழுதுபோக்கித் திரிகின்ற  செயலைக் கைவிட்டுவிட்டு இனி கடுமையாக உழைத்துப் படித்துத்  தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் சுயமாகச் சம்பாதித்தத் தந்தையின் சார்பு இல்லாமல் வாழ முடியும் என்று முடிவு செய்தேன்.’

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அம்பேத்கரின் கல்வி வரலாறு  தொடங்கியது. வீட்டில் படுக்கக் கூட வசதி இல்லாதபோதும் ஆட்டுக்குட்டிக்கும் தானிய மூட்டைக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு படிப்பார். கண்ணாடி இல்லாத காலத்தில் மண்ணெணெயின் அசைந்தாடும் ஒளியில் இரவு பகல் பாராது கண்விழித்துப் படித்தார்.

கல்வியில் சாதனைகள்

ஆறாவது படிக்கும் போது அவரின் இயற்பெயரான பீமாராவ் ராம்ஜி  அம்பேவடேகர் என்ற பெயர் அம்பேத்கர் என்று அவரின் ஆசிரியரால்  மாற்றம் செய்யப்பட்டது. நடுப்பள்ளி வரைஅரசுப் பள்ளியில் பயின்ற அம்பேத்கர் தனது உயர்நிலைக் கல்வியை  இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக கருதப்பட்ட எல்பின்ஸ்டன்  பள்ளியில் பயின்றார். தாழ்த்தப்பட்டவர்களில் யாரும் சாதிக்காத அளவிற்கு மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக  மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் காரணமாக கெலுஸ்கர்  என்பவர் அம்பேத்கரைப் பாராட்டிக் கௌதம புத்தரின் வரலாறு என்ற புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்.  இந்தப் புத்தகம் தான்  பின்னாளில் அம்பேத்கர் புத்தமதம் சேர்வதற்குக் காரணமாக அமைந்தது.

1908ல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பட்டப்படிப்பிற்காகச் சேர்ந்தார். இதற்காகப் பரோடா மன்னர் கெய்க்வாட் அவர்களைச் சந்தித்து உதவி  கேட்டார். தாழ்த்தப்பட்ட மக்களின்முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டிய  பரோடா மன்னர் 25 ரூபாயை நன்கொடையாக அளித்தார்.  இதனால்  பி.ஏ. பட்டத்தை வெற்றிகரமாகப் பெற்றார். கொலம்பியா  பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை அளித்த பரோடா மன்னர் முன் வந்ததால் அம்பேத்கர் கொலம்பியா சென்று எம்.ஏ, படித்துப் பட்டம்  பெற்றார். முதன்மைப் பாடமாகப் பொருளாதாரத்தையும் துணைப் பாடங்களாகச் சமூகவியல், வரலாறு,  தத்துவம், மானிடவியல், அரசியல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தார்.

கொலம்பியாவில் பிஎச்டி படிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் பரோடா மன்னரின் உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவிலிருந்து  திரும்ப நேர்ந்தது. பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.  தனது  வாழ்க்கைக்குத் தேவையான  ஊதியம்  அங்கு அவருக்குக் கிடைக்கப் பெற்றது. ஆனால் சமுதாய  முன்னேற்றத்திற்குத் தனது கல்வியறிவு மேலும் தேவை என்று நினைத்த அம்பேத்கர் தனது  பணியைத் துறந்துவிட்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலுக்கான கல்வி நிறுவனத்திலும், கிரேஸ் இன் சட்டக்கல்லூரியிலும் சேர்ந்தார்.  கல்வியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை இதிலிருந்தே அறிந்து  கொள்ளலாம்.

அம்பேத்கரின் ரூபாயின் சிக்கல் என்ற ஆய்வுக் கட்டுரைக்காக லண்டன்  பல்கலைக்கழகம் அவருக்கு ‘Doctor of Science’  என்ற உயர்பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

தனது மனைவி குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உணவிற்காகவும்  மருத்துவத்திற்காகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சூழலிலும் அவர்  தனது கல்வி மேம்பாட்டிலேயே அதிகம் செலுத்தினார். பிள்ளைகள் நோய்வாய் பட்டு மருத்துவச் செலவிற்குப்  பணம் இல்லாத சூழலிலும் அம்பேத்கரின் துணைவியார் ரமாபாய்,  பல்வேறு வீடுகளில் பாத்திரம் கழுவிச் சம்பாதிக்கும் பணத்தை  அம்பேத்கரின் படிப்புச் செலவிற்கு அனுப்பி வைத்தார். கணவரின் கல்விச் செலவிற்கு உதவிய அந்த அம்மையார் தனது பிள்ளைகளையும்  தன்னையும் சரியாகக் கவனித்துக் கொள்ளாததால் விரைவில் உயிரிழக்க நேர்ந்தது. இந்த அம்மையாரின்  தியாகம் தான் அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவனை இந்தியாவிற்கு  வழங்கியது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அம்பேத்கரின் சமூகப்பணிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக மூக்நாயக்  (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழையும், பகிஷ்கிரத் பாரத் என்ற மாதமிரு முறை இதழையும் தொடங்கினார். பகிஷ்கிரித்ஹித்தகாரனி சபாஎன்ற அமைப்பைப் பம்பாயில் தொடங்கினார். இந்த அமைப்பு  தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கல்வி விடுதி ஒன்றைத் தொடங்கியது.

மகத் நகரில் சவுதார் என்ற குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர்  குடிக்க உரிமை கோரி 20.3.1927ல் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். அப்போது அவருடன் வந்த போராட்டக்காரர்களை உயர்ஜாதி என்று  சொல்லிக் கொண்டவர்கள் கடுமையாகத் தாக்கினர். குளத்திற்குத் தீட்டுக் கழிக்க உயர்ஜாதியினர் சடங்குகளை நடத்தினர். அம்பேத்கர் திரும்பவும்  தண்ணீர் எடுக்கும் உரிமையைப் பெற அறவழிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதற்காக மகத் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த மாநாட்டிற்குக் காவல் துறையும் நீதித்துறையும்அனுமதிக்க மறுத்தன. தாழ்த்தப்பட்ட  மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமையையும் நீதி மன்றம் மறுத்தது. இதனால்கடல் வழியாக மகத் மாநாட்டிற்கு வந்து சேர்ந்த அம்பேத்கர், ஜாதி இழிவிற்குக் காரணமாக இருப்பதாக மனு சாஸ்திரத்தைத் தீயிட்டுக்  கொளுத்தினார்.

தீண்டப்படாத மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமைகள்  குறித்து சைமன் குழுவிடம் தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.  இந்திய ராணுவத்தில் மகர் ஜாதியினர் புறக்கணிக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று பம்பாய் மாகாண  சட்டமன்றத்தில் முன்மொழிவைக் கொண்டுவந்தார். பம்பாய் சட்ட மன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 இடங்கள் ஒதுக்கவேண்டும்  என்று கோரிக்கை வைத்தார்.சித்தார்த்தர் கல்லூரியைத் தொடங்கி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மேம்பாட்டிற்கு வழிகோலினார். வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை முறை, அரசியல் உரிமைகள் குறித்துவிவாதம் செய்தார். இரட்டைமலை சீனிவாசனும் அம்பேத்கருக்குப்  பக்க துணையாக இருந்தார்.

இந்த நிலையில் அம்பேத்கர் கோரிய இரட்டை வாக்குரிமை முறையுடன் கருத்து வேறுபாடு கொண்ட காந்தியடிகள் பூனாவில் உயிர்விடும் வரை பட்டினிப் போராட்டம் என அறிவித்தார். காந்தியடிகளுக்கு ஏதாவது உயிர் பாதிப்பு வந்தால்  தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக இந்தியாவில் கலவரங்கள் வெடிக்கக்  கூடும் என்பதால் அம்பேத்கர் தனது இரட்டை வாக்குரிமைமுறையைக் கைவிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்கு ஒரே வழி கல்வி,  அரசியல், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு பெறுவதே  என்பதில் உறுதியாக இருந்த அம்பேத்கர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தன்னால் முடிந்த அனைத்து  வாய்ப்புகளையும் பயன்படுத்திப் போராடினார்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச்  சார்ந்த பிரிவினரைப் பட்டியல் வகுப்பினர் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Caste / Scheduled Tribes )  என்ற பெயரிலேயே     அழைக்க வேண்டும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.

1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் லட்சக்கணக்கில் கொல்லப் பட்டனர். தத்தமது மதங்களுக்கு மாறச்சொல்லிக் கட்டாயப்படுத்தப்  பட்டனர். பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், இந்தியாவிலிருந்து  முஸ்லீம்களும் விரட்டப்பட வேண்டும் என்ற மதவெறிக் கூச்சல்  எழுப்பப்பட்டது.பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் யாவரும்  வெளியேற்றப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் தங்களுக்குப்  பணியாளர்களாக இருக்க வேண்டி அங்கேய தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில்  அனைவரையும் அம்பேத்கர் மீட்டுவந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பணியில் அம்பேத்கர்

1947ல் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிவிடலாம் என்று  ஆங்கிலேயர்கள் முடிவு செய்தபோது, இந்தியாவிற்கான அரசியலமைப்புச்சட்டத்தை எழுதக் குழு அமைக்க திட்டமிடப்பட்டது.  அதன்  அடிப்படையில் அனைத்து மாகாணங்களிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியலமைப்பு வரைவுக்குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று அம்பேத்கர்  மன்றாடினார்.அம்பேத்கரைப் பிரதிநிதியாக அனுப்ப அவர் சார்ந்த பம்பாய் மாகாணம் மறுத்துவிட்டது.ஆனால் வங்காள மாகாணம் அம்பேத்கரைப்  பிரதிநிதியாகத் தேர்வு செய்தது,

அரசியலமைப்புக் குழுவில் இருந்த உறுப்பினர்களில் கல்வித்திறன்,  அறிவுக்கூர்மை, உழைக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒப்பிடும் போது  அம்பேத்கருக்கு ஈடாக யாரும் இல்லை என்பதால் திறமையின் அடிப்படையில் அவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் எவ்வாறு கடுமையாக உழைத்தார், அவர் ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டச் சிற்பி என்று  அழைக்கப்பட்டார் என்பதை இந்த அவையில் உறுப்பினராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆற்றிய பின்வரும் உரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

‘7 பேர் கொண்ட வரைவுக் குழுவிலிருந்து ஒருவர் விலகிவிட்டார்.  இன்னொருவர் இறந்துவிட்டார். மற்றொருவர் மாகாணங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு விட்டார். மற்ற உறுப்பினர்கள் தில்லியிலிருந்து தொலைவான இடங்களில் உள்ளனர்.  இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக எழுதி முடிவெடுக்க வேண்டிய பெருஞ்சுமையைஅம்பேத்கரே ஏற்க வேண்டியதாயிற்று.’

இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கத்திற்குத்  தனியொருவனாக உழைப்பைத் தந்த அம்பேத்கர் கடுமையாக நோய் வாய்பட்டார். பிறர் உதவியில்லாமல் வாழ முடியாது என்பதைஉணர்ந்து  தனக்குத் துணையாக சவீதா அம்மையாரை இரண்டாவது திருமணம்  செய்து கொண்டார்.

அம்பேத்கர் தனது ஜாதியினருக்காக மட்டும் உழைத்தவரல்ல.  நாட்டுக்காகவும் உழைத்தவர் என்பதை இதன் மூலம் அறிந்து  கொள்ளலாம்.தான் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு, பிற்படுத்தப்படுத்தப்பட்டோருக்கும்  உள்ளடக்கிய இடஒதுக்கீடு, பெண்களுக்கான சம உரிமை, தொழிலாளர்  நலன், குடும்பக் கட்டுப்பாட்டின் தேவை போன்ற அடிப்படைக் கொள்கைகளைச் சட்டமாக்கினார்.

தீண்டப்பபடாதவர், அணுகக்கூடாதவர், காணக்கூடாதவர் என்று  முப்பிரிவினராகத் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டிருந்த காலம்  ஒழிக்கப்பட்டது.  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் கோலோச்சியிருந்த தீண்டாமைச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, அம்பேத்கர் எழுதிய சமத்துவச் சட்டம் அரியணை ஏறியது.

மதமாற்றம்

ஜாதிக் கொடுமைகள் தாழ்த்தப்பட்டவர்களைப் பெரிதளவில்  பாதிப்புள்ளாக்கி வருகின்றன. எனவே இந்து மதத்திலிருந்த விலகப்  போவதாக 1935ல் அறிவித்திருந்தார் அம்பேத்கர்.ஆனால் 21 ஆண்டுகள் பொறுமை காத்திருந்தார். இந்து மதத்திலிருந்து விலகினால் வேறு எந்த  மதம் சிறந்த மதம் என்பதைத் தீர்மானிக்க 21 ஆண்டுகளாக அவர் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள்  யாவரும் அம்பேத்கரைத் தொடர்பு கொண்டு வந்தனர். கோடிக்கணக்கில்  பணம் தரவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

சமுதாயச் சீர்திருத்தம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சம உரிமை,  பெண்களுக்கான சம உரிமை, சுயமரியாதை போன்ற முதன்மைக்  கொள்கைகளில் அம்பேத்கருடன் ஒப்பிடும் போது ஒரு நாணயத்தில்  இரு பக்கங்களில் ஒரு பக்கமாகக் கருதப்படக் கூடிய தந்தை பெரியார்  1954ல் ஈரோட்டில் பௌத்த மாநாட்டைக் கூட்டி புத்த நெறிக்குத் தனது  ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

கி.வீரமணி எழுதிய அம்பேத்கர் பௌத்தம் தழுவியது ஏன்? என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வரிகள் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.

‘கிருஸ்துவ மதம், முஸ்லீம் மதம் ஆகியன கடவுள், மூடநம்பிக்கை,  ஆத்மா, பேய், பிசாசு, முற்பிறவி, அடுத்தபிறவி, சொர்க்கம், நரகம் போன்ற அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைக்கொண்டிருந்தன. ஏசு தன்னைக்  கடவுளின் வாரிசு என்று சொல்லிக் கொண்டார். முகமது நபி தன்னை  இறைத்தூதர் என் அறிவித்துக் கொண்டார். ஆனால் புத்தர் ஒருவர்தான்  கடவுள் இல்லை  என்றும்  சாதாரண  மனிதன்  என்றும்  தன்னை  அடையாளப்படுத்திக் கொண்டார். கடவுள், மூடநம்பிக்கைகள், ஆத்மா,  பேய், பிசாசு, பிறவி, சொர்க்கம், நரகம் எதையும் அவர் நம்பவில்லை.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது அரசர் பதவியையே துறந்தார். பொய் சொல்லாமை, கொல்லாமை, திருடாமை, மது அருந்தாமை, அன்பு செலுத்துதல் போன்ற நல்லொழுக்கங்களை  மக்கள்  மத்தியில்  பரப்பினார்  எனவே அம்பேத்கர் புத்த நெறியைத் தேர்வு செய்தார்.’

கிருஸ்துவ மதத்திற்குச் சென்றால் நாம் போப்பாகிவிட முடியாது.  முஸ்லீம் மதத்திற்குச் சென்றால் நம்மை முல்லாக்கிவிட மாட்டார்கள்.  எனவே புத்த மார்க்கம் தான் சிறந்தது என்றுஉறுதியுடன் முடிவு செய்த அம்பேத்கர் 14.10.1956ல் புத்த மதத்திற்கு லட்சக்கணக்கான  தொண்டர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

கல்வியறிவு ஒன்று மட்டுமே தனது எண்ணத்தை நிறைவேற்றிடும்  ஆயுதமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்திருந்த அம்பேத்கர்  அதற்காகத் தனது குடும்பத்தைத் தியாகம் செய்தார்.தனக்கு ஊதியம்  ஈட்டித்தரும் வேலைகளைப் பல்வேறு நேரங்களில் தூக்கி எறிந்தார். தனது முதல் துணைவியார் ரமாபாய் அம்மையாரை இழந்தபோது கண்ணீர் விட்டு அழுத அம்பேத்கர்,6.12.1956ல் உயிரிழந்தபோது தனது இரண்டாவது மனைவி சவீதா அம்மையாரின் கண்ணீரைக் காண முடியாமலேயே  மறைந்து போனார். அவரின் உடலுக்கும் உயிருக்கும் மட்டுமே அது மறைவு. ஆனால் அவரின் கடும் உழைப்பு இந்தியத் திருநாட்டின் மறு மலர்ச்சியின் விடியலுக்குத் தொடக்கமே என்றால் அது மிகையாகாது.

உயிரிழந்த வீட்டுக் கால்நடைகளைச் சமைத்து உண்பதையும் மது  அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பது அம்பேத்கரின்  அறிவுரைகளில் முக்கியமானதாகும். ஆடுகளைத் தான்பலியிடுவார்கள்  சிங்கங்களை அல்ல என்று அறைகூவல் விடுத்த அம்பேத்கரை ஒரு ஜாதித்தலைவராகப் பார்க்காமல் இந்தியத் தலைவராகப் பார்ப்பது தான் அவரின்  125-வது பிறந்த நாளில் அவருக்கு நாம்  செய்யும்  மரியாதையாக     அமையும்.

- சி.சரவணன் (தொடர்புக்கு - 9976252800 senthamizhsaravanan@gmail.com)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com