கொழுந்துவிட்டு எரியும் அசுரன் படம் கிள்ளிப்போட்ட பஞ்சமி நிலத் தீ! அது என்ன பஞ்சமி நிலம்??

பஞ்சமி நிலம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின்,  பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
அது என்ன பஞ்சமி நிலம்?
அது என்ன பஞ்சமி நிலம்?
Updated on
2 min read

பஞ்சமி நிலம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின்,  பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாகக் கொண்ட அசுரன் திரைப்படம், படம் அல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்ய, அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பதிலடி கொடுத்தது, தமிழக அரசியலில் தற்போதைய சென்சேஷன் செய்தி. 

அசுரன் திரைப்படம் கிள்ளிப்போட்ட பஞ்சமி நிலத் தீ, அரசியலில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பஞ்சமி நிலம் என்றால் என்ன என்ற கேள்வி இங்கு பிரதான பேசு பொருளாகியுள்ளது. 

பஞ்சமி நிலம் (Depressed Class Land)
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக,  தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில், கொத்தடிமைகளாக வேலை செய்தவர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். 

இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை மேம்படவும், சம உரிமைக்கிடைக்கவும், நிலம் அவர்களின் கைகளில் சேர வேண்டும் என்ற உரையாடல், 1890களில் ஏற்பட்டது. குறிப்பாக,  விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டு, மனிதாபிமானமே இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பஞ்சம மக்கள் வாழ்கின்றனர் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே.ஹெச்.ஏ.ட்ரமென்ஹீர் ஹெரே 1891-ல் பிரிட்டிஷ் அரசுக்கு 17 பகுதிகள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார்.

ஜே.ஹெச்.ஏ.ட்ரமென்ஹீர் ஹெரேவிற்கு முன்பாகவே, திராவிட மகாஜன  சபை நிறுவனரும், ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ஆசிரியருமான அயோத்திதாச பண்டிதர், கிறிஸ்துவ மிஷனரி Free of Scotland  சபையை சார்ந்த ஆடம் ஆண்ட்ரு மற்றும் வெஸ்லியன் சபையை சார்ந்த வில்லியம் கௌடி போன்றோரும்  ஒடுக்கப்பட்ட பஞ்சமர்கள் குறித்து பல அறிக்கைகள், மாநாடுகள் வாயிலாக பஞ்சமி நிலம் குறித்து ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட கோரிக்கைகளும் உரையாடல்களுமே பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தது. இதன் எதிரொலியாக, 1891ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொடங்கியது. 

இந்திய விவகாரங்களுக்காக இங்கிலாந்தில் துணைச் செயலாளராகப் பொறுப்பில் இருந்த ஜார்ஜ் நத்தானியேல் கர்சன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வெளியுறவுத் துறைச் செயலரும் மதறாஸ் மாகாண அரசும் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள் என்ற அறிக்கையின் தொடர் நடவடிக்கையாகத் தான் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது.  

இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், பட்டியலின மக்களுக்கு நிலங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.  இந்த நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம். முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச் சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது.[7] மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது என்று ஆதி திராவிட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற காரணத்தால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய அரசின், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், தரிசு நிலம் என்று வகைப்படுத்தியுள்ளது.

1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste  பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.

அதன்படி, பட்டியல் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, முதல்  பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது என்பது விதி. 

இந்த பஞ்சமி நிலங்கள் தொடர்பாகத் தான் தற்போது  ஸ்டாலின் - ராமதாஸ் இடையே வார்த்தைப்  போர் மூண்டுகொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com