கட்டுப்பாடின்றித் தொடரும் புகையிலைப் பொருள்கள் விற்பனை!

அபராதத் தொகையை 5 மடங்கு உயர்த்தியும்கூட தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறையவில்லை.
கட்டுப்பாடின்றித் தொடரும் புகையிலைப் பொருள்கள் விற்பனை!
Updated on
2 min read

~ஆ.நங்கையார்மணி

அபராதத் தொகையை 5 மடங்கு உயர்த்தியும்கூட தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறையவில்லை. மாநில எல்லைகளில் காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கடத்தலை முழுமையாகத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மெல்லும் புகையிலைக்கு தடை அமலில் இருந்தாலும், அதன் பயன்பாடு குறிப்பாக,

இளைய சமுதாயத்தினரிடையே அதிகரித்து வருகிறது. புற்றுநோய்க்கு காரணமான நிகோடின் என்ற வேதிப் பொருள் புகையிலைப் பொருள்களில் இருப்பதாலேயே மதுபானங்களைவிட ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவு 30}இன்படி, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள உணவுப் பொருள்களை மாநில அரசுகள் ஓராண்டுக்குத் தடை செய்ய வழிவகை செய்யப்பட்டது. 2013}ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம், தமிழகத்தில் புகையிலைப் பொருள்களுக்கான தடை ஒவ்வோர் ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

5 மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம்: புகையிலைப் பொருள்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், கொண்டு செல்லுதல், விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடையை மீறி முதல் முறையாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க முடியவில்லை.

புகையிலைப் பொருள்கள் விற்பனையை தீவிரமாகத் தடுக்கும் வகையில், அபராதத் தொகை 5 மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.25 ஆயிரம் வசூலிப்பதற்கான சட்டத் திருத்தம் கடந்த ஜனவரி 4}ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, முதல் முறையாக

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்துடன், கடைக்கும் 15 நாள்கள் "சீல்' வைக்கப்படுகிறது.

2}ஆவது முறையாக விற்பனை செய்வோருக்கு அபராதம் ரூ.50 ஆயிரமும், கடைக்கு 30 நாள்கள் "சீல்' வைப்பதுடன் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது. 3}ஆவது முறையாக புகையிலை விற்பனையில் ஈடுபடுவோருக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம், கடைகளை 90 நாள்களுக்கு "சீல்' வைக்கவும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த வகையில், கடந்த ஜன.22 முதல் பிப்.4}ஆம் தேதி வரையிலான 12 நாள்களில் மட்டும், தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு, 752 கடைகள் பூட்டி "சீல்' வைக்கப்பட்டன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

விற்பனை 20 சதவீதம்கூட குறையவில்லை: ஹரியாணா மாநிலம் புகையிலைப் பொருள்களுக்கான மிகப் பெரிய மையமாகச் செயல்பட்டாலும்கூட, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் வழியாகவே தமிழகம் முழுவதும் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.

சரக்கு வாகனங்கள் மட்டுமன்றி, கார்களிலும் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க தமிழக காவல் துறை தீவிர கவனம் செலுத்தவில்லை. கடத்தலை முழுமையாகத் தடுத்திருந்தால், விற்பனைக்கு வாய்ப்பில்லாத சூழலை உறுதிப்படுத்தியிருக்க முடியும்.

தொழிலாளர்கள் மத்தியில் மட்டும் பரவலாக பயன்பாட்டில் இருந்த புகையிலைப் பொருள்கள், தற்போது மாணவர்கள் சமுதாயத்தையும் அடிமைப்படுத்தி வருகிறது. வெவ்வேறு பெயர்களில் 10}க்கும் மேற்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தினாலும் எளிதில் கண்டறிய முடியவில்லை.

தற்போது அபராதத் தொகையை

5 மடங்கு உயர்த்தியும்கூட, புகையிலைப் பொருள்கள் விற்பனை 20 சதவீதம்கூட குறையவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புத் துறை, காவல் துறையினரின் கூட்டு நடவடிக்கையின் மூலம், கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.1.10 கோடிக்கும் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டு, சுமார் 800 கடைகள் வரை "சீல்' வைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மட்டுமே தனியாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது. காவல் துறையினரின் பாதுகாப்பு கிடைக்காததால், சில இடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மீது புகையிலைப் பொருள்கள் வியாபாரிகள் தாக்குதல் நடத்தினர். அபராதத் தொகை உயர்த்தப்பட்டு, "சீல்' வைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும், புகையிலைப் பொருள்கள் விற்பனை எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

தடை உத்தரவு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டும், கடந்த 10 ஆண்டுகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல, அபராதம் 5 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலமாக மட்டும் புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது.

மாநில எல்லையில் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து, தமிழகத்துக்குள் புகையிலைப் பொருள்கள் நுழைவதைத் தடுக்கவும் வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com