புண் விரைவில் குணமாக...!

அறுவை சிகிச்சை செய்த பின் புண் புரையோடாதிருக்க ஆயுர்வேத மருத்துவத்தில் வழிகள்
புண் விரைவில் குணமாக...!
Updated on
2 min read

என் வயது 46. காலில் புண் ஏற்பட்டு புரையோடிப் போனதால் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சையின் மூலம் சீழ் மற்றும் கெட்டுப்போன ரத்தம், சதை எல்லாம் அகற்றி, கட்டுப் போட்டுள்ளனர். ஆனாலும் எனக்கு அவ்விடத்தில் வலியும் எரிச்சலும் அடங்கவில்லை. அறுவை சிகிச்சை செய்த பின் புண் புரையோடாதிருக்க ஆயுர்வேத மருத்துவத்தில் வழிகள் உள்ளனவா?

-கனகசபாபதி, கோவை.

அறுவை சிகிச்சைக்குப் பின், மறுபடியும் புண் மற்றும் சீழ்கட்டாதிருக்க, ஓரிலைத்தாமரை, ஓரிலை மூவிலை, ஜடாமாஞ்சி, பிராம்மி, வசம்பு, சதகுப்பை, காட்டு சதகுப்பை, அருகம்புல், வெண்கடுகு ஆகியவற்றை தலையில் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விநோதமான அறிவுரையை ஆயுர்வேதம் கூறுகிறது. இதன் மூலம் அணுக்கிருமிகளின் தாக்கம் உடலில் ஏற்படாது. தற்காலத்திய நவீன ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மாற்றாக இதுபோன்ற சிகிச்சை முறைகள் அந்தக் காலத்தில் பிரசித்தமாக இருந்தது என்பது தெளிவாவதுடன் இவை அனைத்தும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் மிகச் சிறந்த ஆன்டிபயாடிக் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் நீர்த்ததும், சூடானதும், கபத்தை இளக்காததும், அதிக எண்ணெய் சேர்க்காததும், ஒவ்வாமை உணவு சேராததுமான உணவு வகைகளைக் குறைந்த அளவே உண்ண வேண்டும். வெந்நீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டும். பெண் சேர்க்கை கூடாது. இரவில் உரிய நேரத்தில் உறங்க வேண்டும். இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர், பசி, தாகம், உறக்கம், கொட்டாவி, வாந்தி, ஏப்பம், கீழ்க்காற்று போன்றவற்றை அடக்கக் கூடாது. உடற்பயிற்சி, கோபம், வருத்தம், பனி, வெயில், பெருங்காற்றுக்கு எதிரில் செல்லுதல், வாகன சவாரி, அதிக நடை, பேச்சு, அதிகம் அமர்ந்திருத்தல், நிற்பது, மிகவும் உயர்ந்த அல்லது தாழ்ந்த தலையணையை உபயோகிப்பது, பகல் தூக்கம், புகை, புழுதி போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பகல் தூக்கத்தினால், புண்ணில் அரிப்பு, சிவப்பு நிறம், வலி, வீக்கம், சீழ் ஆகியவை உண்டாகும் என்கிறார் வாக்படர் எனும் முனிவர்.

புண் விரைவில் ஆற பார்லி, கோதுமை, அறுபதாங்குறுவை, காராமணி, பயறு, துவரை, ஊசிப்பாலைக்கீரை, ஆரைக்கீரை, இளம் முள்ளங்கி, கத்திரிக் காய், சிறுகீரை, வாஸ்துக்கீரை, பாகல், புடல், சுரை, இந்துப்பு, மாதுளை, நெல்லிக்காய், நெய், காய்ச்சி குளிராக்கப்பட்ட நீர், பழைய அரிசி, நெய்ப்பசையுடன் கூடிய சிறிது சூடான உணவு வகைகளைக் குறைந்த அளவில் உபயோகிக்கவேண்டும். அதிக அளவில் குடிநீர் அருந்த வேண்டும். முயல், கோழி, கிளி, மாடப்புறா, கெüதாரி போன்றவற்றின் மாமிசத்தை உணவாக்க விரைவில் புண் ஆறிவிடும். ஏதேனும் காரணத்தினால் அறுவை சிகிச்சைக்குப் பின் அஜீரணம் உண்டானால் வாயு முதலிய தோஷங்களின் கலக்கம் அதிகமாகும். அதனால் வீக்கம், வலி, அழற்சி, எரிச்சல், ஆகியவை உண்டாகும். அதனால் உரியநேரத்தில் அளவுடன் பத்தியமான உணவை உட்கொண்டால், சுகமாக ஜீரணமாகும்.

புண் உள்ளவர் - புதிய தானியம், எள், உளுந்து, மதுபானம், மேற்குறிப்பிட்ட மாமிசத்தைத் தவிர மற்ற மாமிசங்கள், பால் மற்றும் கரும்புச்சாற்றினால் தயாரிக்கப்பட்டவை, புளிப்பு, உப்பு, காரம் ஆகியவற்றை விலக்க வேண்டும். வயிற்றுப் பொருமல் உண்டாக்குவதும், புளித்த ஏப்பத்துடன் காந்தல் செய்வதும் எளிதில் செரிக்காததும், குளிர்ந்ததுமான உணவு கூடாது. இவை அனைத்தும் உடலிலுள்ள எல்லா தோஷங்களையும் கோபமடையச் செய்யும்.

விலாமிச்சை வேர் விசிறியால் புண் உள்ள இடத்தை வீசி காற்றுபடும்படி செய்ய வேண்டும். புண்ணைத் தட்டுவது, குத்துவது, சொறிவதோ கூடாது. வேலை செய்யும் போது அதிர்ச்சியுண்டாகாவண்ணம் பாதுகாக்க வேண்டும். நண்பர், வயோதிகர், மறையோர் ஆகியோர் கூறும் மனதிற்கு பிரியமான கதையைக் கேட்பதுடன் புண் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் விரைவில் புண் குணமாகிவிடும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com