25.அகல்யாவிற்குள் ஓர் அக்னி நதி!

அகல்யாவிற்கு வயது இருபத்தெட்டு. அவள் வயதுப் பெண்களை விடச் சற்று வாளிப்பாக, சிவந்த மேனியுடன்
25.அகல்யாவிற்குள் ஓர் அக்னி நதி!
Updated on
5 min read

அகல்யாவிற்கு வயது இருபத்தெட்டு. அவள் வயதுப் பெண்களை விடச் சற்று வாளிப்பாக, சிவந்த மேனியுடன் இளமை இன்றாமல் காணப்பட்டாள். அறைக்குள் நுழையும் போது என்ன காரணத்தாலோ தலையை முக்காடு இட்டுக் கொண்டாள். அமரச் சொன்னேன். அலைபாயும் விழிகளுடன் ஒருவிதப் பதற்றத்துடன் அமர்ந்தாள். சேலை முந்தானைக்குள் மறைந்திருந்த கை விரல்களின் நடுக்கம் வெளியே தெரிந்தது. பேசத் துவங்கியபோது உதடுகளும் சொற்களும் நடுங்கின. தயங்கித் தயங்கி பலவீனமான குரலில் தன்னைப் பற்றிய பல விவரங்களைக் கூறி முடித்தாள்.

பதினான்கு வயதிலேயே (பருவம் அடைந்த ஆண்டிலேயே) இருபது வருடம் மூத்த உறவினரை மணம் முடித்தாள். இரண்டு மகன்அலும் ஒரு மகளும் உள்ளனர். சிறு வயது முதலே பயந்த சுபாவம் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன் பயங்கள் அதிகரித்தன. எதைக் கண்டாலும் பயம்…எல்லாவற்றிலும் பயம். பிள்ளைகள் பள்ளி சென்ற பின் வீட்டில் தனிமையில் பயம். பயம் நீங்குவதற்குத் திண்ணையில் வந்து உட்கார்ந்தால், தெருவில் செல்லும் மனிதர்களைக் கண்டு பயம். கடைக்குச் செல்ல பயம். பஸ்ஸில் ஏற பயம். கோவில்களில் கூட்டம், மேளச்சத்தம், ஆரவாரம் கண்டு பயம். பிணம் கண்டு பயம். சவ ஊர்வலம் கண்டு பயம். இருளைக் கண்டு பயம், நீர்நிலை கண்டு பயம். அவளிடம் காணப்படும் பயங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிட முடியாது.

அவளது மனக்குறிகளின் சித்திரத்தில் புதிய புதிய வினோதமான அம்சங்கள் புலப்பட்ட மனத்திற்குள் முந்தியடித்துக் கொண்டுவந்த நின்ற மருந்துகள் தாமாகவே விடைபெற்றுக் கொண்டன. பல்வேறு பயங்களைப் பற்றிச் சொன்ன அகல்யா அவற்றில் முக்கியமான ஒரு பயத்தை அடையாளம் காட்டினாள். ரத்தத்தைப் பார்க்கும் போது ஏற்படும் பயம். ரத்தத்தையே உறைய வைத்துவிடும் என்றாள். ஓரிரு மருந்துகள் வெளிச்சமிட்டன. இருப்பினும் ஊர்ஜிதம் செய்வதற்கு முன் அவளிடம் மேலும் விபரம் வெளிவரக் கூடும் எனக் காத்திருந்தேன். அவளிடம் நிலவிய அமைதியைக் கலைத்து மீண்டும் தொடருமாறு ஏறிட்டுத் தலையசைத்தேன். ரத்தம் பயம் ஏற்படுத்தும் என்பதால், மாதவிடாய் நாட்கள் வந்தாலே மனமெங்கும் பயம் பரவி, நடுக்கம் ஏற்படும். எல்லா மாதவிடாய் நாட்களிலும் ரத்தப் போக்கினால் பயம் அதிகரிக்கும் என்றாள். அகல்யாவின் இந்த அனுபவம் மற்றொரு மருந்தின் பெயரை நினைவூட்டியது. தன் மகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் கூட பீதி ஏற்பட்டு மனநிலை கடுமையாகப் பாதித்துவிடும். ஒரு வேலையும் செய்ய முடியாமல் மூலையில் முடங்கிவிட நேரிடம் என்றால். ஏற்கனவே நினைவில் மின்னிய மருந்தின் பெயர் வெளிச்சம் இழந்து, மறைந்து போனது.

ரத்தத்தை கண்டு பயப்படும் நிலைமை எப்போதிருந்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்தேன். சற்று யோசித்தாள். மூன்றாம் குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து குடும்பக் கட்டுப்பாட்டு செய்து கொள்ள மருத்துவரிடம் சென்றாள். மயக்க மருந்தினால் எந்த விளைவும் ஏற்படவில்லை என்பதைப் பொருட்படுத்தாமலேயே மருத்துவர் தம் பணியைச் செய்து முடித்தார். அப்போதுதான் முதல்முறையாக ரத்தம் குறித்த பயம் அதிகளவில் ஏற்படத் தொடங்கியது என்று சுட்டிக் காட்டினாள். அப்போதிருந்துதான் வேறு பல பயங்களும் வலைபோல் பின்னி வளைத்துக் கொள்ள ஆரம்பித்தன என்றாள்.

முதல் சந்திப்பு, முதல் பயணம், முதல் கடிதம், முதல் ஆசிரியர், முதல் நட்பு, முதல் தோல்வி, முதல் வெற்றி, முதல் பரிசு, முதல் முத்தம்….என ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறக்க முடியாத சில முதல் நிகழ்வுகள் என்றும் பசுமையாய் இருக்கும். அகல்யா என்ற இந்த அபலைப் பெண்ணின் முதல் பயம் அவள் உள்ளத்தைப் புண்ணாக்கி உருக்குலைத்து விட்டது.

நாட்பட்ட பிணியுள்ளவரைக் குறிப்பாக மனப்பிணியுள்ளவரை ஹோமியோபதி முறைப்படி அணுகி ஆய்வு செய்யும்போது, மருத்துவர் போதுமான நேரம் எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் இதற்கு முன்னர் இவ்வளவு நீண்ட நேரம் வேறு எந்த நோயாளிக்கும் தேவைப்படவில்லை அகல்யாவின் பிரச்னை அப்படி!

அகல்யாவின் மனக் குறிகள் அனுமார் வால் போல நீண்டு கொண்டே சென்றன. அவளது துயரங்களை ஒவ்வொரு பகுதியாய் சொல்லி நிறுத்தும் போதெல்லாம் உரிய மருந்து ஆய்வுக்குச் செல்ல வழி கிடைத்தது போலத் தோன்றும். ஆனால் பிரச்னைகளின் ஆணிவேர் இன்னும் வெளிப்படவில்லை என்பது சில நிமிடங்களில் அவள் தொடர்ந்து பேசும் போது தெரிந்துவிடும்.

ஒரு முக்கியமான தகவல் விடுபட்டு விட்டதாகக் கூறினாள். தற்போது இரண்டு மாதமாகத் தான் வீட்டில் இருப்பதாகவும், அதற்கு முன்பு ஒன்றரை ஆண்டாக மனநோயாளிகள் தங்கியுள்ள தேவாலயம் ஒன்றில்விடப்பட்டிருந்ததாகவும் கண்ணீர் வழிந்தோடத் தெரிவித்தாள். இவ்வளவு நன்றாகப் பேசக் கூடிய பெண்ணை அங்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் ஒன்றரை வருடமாகக் கணவரை, பிள்ளைகளை எப்படிப் பிரிந்து இருக்க முடிந்தது? என்றும் குறிக்கிட்டு விசாரித்தேன்.

சிறிது நேரம் தியானிப்பது போல கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள். மூடிய இமைகளை விலக்கிக் கொண்டு மனத்தின் அழுத்தம் நீராய்க் கசிந்து வெளியேறியது. உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற மாதிரி உதடுகளில் மெல்லிய நடுக்கம். மடி மீது கிடந்த கைகளைக் கும்பிடுவது போல் சேர்ந்திருந்தாள். ஊமையின் கனவை யாரறிவார் என்பார்கள். அகல்யா போன்ற எத்தனை எத்தனையோ அபலைப் பெண்கள் விடும் கண்ணீரின் கதைகளும் அறிந்து கொள்ளப்படாமலேயே காலத்தினுள் அமிழ்ந்து போகிறது.

இமைகள் திறந்தாள், ஈர விழிகளையும், முகத்தையும், சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். யாருக்கும் பயன்படாமல் பிரமை பிடித்தவளாய் மூலையில் முடங்கிக் கிடந்தால், வீட்டிலேயே வைத்துக் கொண்டு அழகு பார்க்கவா முடியும்? அதனால் தான் கணவரும், மாமியாரும் சேர்ந்து தன்னை ஒரு தேவாலயத்தில் கொண்டு போய் விட்டு விட்டார்கள் என்றாள். அங்கே தங்கியிருந்த போது பயம் குறைந்தது. ஓரளவு மன நிம்மதியோடு இருக்க முடிந்தது என்றாள்.

பயமும், பதற்றமும் குழப்பமும் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். தினமும் பல தடவை கும்பிடுவாள். ஒவ்வொரு முறையும் அதிக நேரம் பிரார்த்திப்பாள். அவள் நிலை ஓரளவு தெளிவாகி விட்டதாகக் கருதி, ஆலயத்திலிருந்து வீட்டுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. கணவர் வந்து அவளை அழைத்துச் சென்றார். அதுவரை சற்று மங்கியிருந்த பிள்ளைகள் மீதான பாசம் வெளிப்படத் துவங்கியது. எல்லாம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

மீண்டும் மனம் நிலை கொள்ளாமல் தவித்தாள். அமைதி இழந்தாள். தூக்கம் அவளை நெருங்கவில்லை. இரவும் நிலவும் அவளுக்குக் கவிதையும் சுகமும் தருவதற்குப் பதிலாக ஆறிவரும் காயஙக்ளை கீறிக் கொண்டிருந்தன. இரவு முழுவதும் விழிப்பு, பகல் முழுவதும் திகைப்பு, தன் நிலையை எண்ணி எண்ணி சோகம் கொப்பளிக்க அழுவாள். பிள்ளைகளைக் கவனிக்காமல், வீட்டு வேலை செய்ய முடியாமல், மனத்தில் நிம்மதியில்லாமல் வாழ்வதைவிட செத்துப் போவது மேல் என்று தோன்றும்.

அவல நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே தேம்பினாள். சிரமப்பட்டுத் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சில நிமிடம் அமைதியானாள். அறையின் கதவருகே வெளியே யாரும் இருக்கிறார்களா என்பதை அவதானித்து, யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, நடுங்கிய குரலில் பேசினாள். அவள் உதடுகள் உதிர்த்த சொற்களின் பின்னே, உள்ளத்தில் குற்ற உணர்ச்சியும், அதிருப்தியும் நிறைந்திருப்பதை உணர முடிந்தது. அகல்யா மீதான கருணையும் அனுதாபமும் அதிகரித்தது. அவளை மீட்பதற்கு, அவளது மன ரணங்களை ஆற்றுவதற்கு ஹோமியோபதி தவிர்த்து வேறெந்த மருத்துவத்தாலும் முடியாது என்பதை மனப்பூர்வமாக உணர முடிந்தது. அவள் இப்போது சொன்ன விவரம் அவளுக்கான மருந்தைத் தேர்ந்தெடுக்க உதவியது.

பருவமடைந்த காலம் முதல் அவளுக்கு பாலியல் வேட்கை அதிகம். மண வாழ்க்கையின் தாம்பத்தியம் இனிக்கவில்லை. உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவு தரவில்லை. தன்னைத் தின்று தீர்க்கும் நெருப்பு உணர்வுகள் பற்றிக் கணவரிடம் மனம் விட்டுப் பேசிப்பார்த்தாள். அவளுக்கு ஏதோ மனநோய் என அவர் அலட்சியம் செய்தார். சந்தேகப்படவும் தொடங்கினார். அகல்யா தன்னை அடக்கிக் கொள்ள போராடினாள். அவள் நிலையும், அவள் நிகழ்காலமும், அவள் சூழலும் பலவித பயங்களை உண்டாக்கி, வளர்த்தன.

பயங்கள் ஒரு நேரமும், காமத்தீயின் வெப்பம் மற்றொரு நேரமுமாய் மாறி மாறித் தொடுத்த தாக்குதல்களால், அவள் நிலை மோசமாகிக் கொண்டே போனது. ஆணின் ஸ்பரிசம் பட்டாலே உடலில் அக்னி நதி ஒன்று கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிடும். கோவில் என்றாலும், பேருந்து என்றாலும், வீடு என்றாலும், வீதி என்றாலும் ஆண் அருகில் வந்து நின்றாலே போதும். பருவ உணர்ச்சிகள் அலையலையாய் எழுந்து அலைக்கழிக்கும்.

இவ்வளவு உணர்ச்சிகளையும் எப்படித் தாங்கிக் கொள்ள முடிந்தது; எப்படித் தணித்துக் கொள்ள முடிந்தது என்று வினவினேன். பொங்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், எந்தத் தவறும் நிகழ்ந்து விடாமல் தடுத்துக் காப்பாற்றவும் நீண்ட நேரம் கண்களை இறுக மூடிக் கொண்டு ஆண்டவனிடம் வேண்டுவாள். இதனால் ஓரளவு ஆசுவாசம் பெறுவாள். ஆண் மீதான ஆசை அடக்க முடியாத அளவு ஏற்பட்டாலும், கணவரைத் தவிர எந்த ஆணையும் தொடும் பாவத்தைச் செய்ததில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். இருப்பினும் தனக்கு ஏன் இப்படித் தண்டனை? தினமும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டுமா? தனக்கு விமோசனமே கிடையாதா? என்று மருகி மருகி உள்ளூற அழுது கொண்டிருந்தாள்.

எதிர்பாராமல் உணர்ச்சிகள் பீறிட்டால், சாமி படத்தின் முன் நின்று கும்பிடுவாள் அல்லது வீட்டை வாசலைச் சுத்தம் செய்வாள். பாத்திரங்களை கழுவுவாள். தண்ணீர்க் குழாய்க்குச் சென்று தொடர்ந்து தண்ணீர் எடுத்துவ் அருவாள். அல்லது ஏதாவது ஒரு வேலையை ஏற்படுத்திக் கொள்வாள். அப்படியில்லாவிட்டால் உணர்ச்சிகள் பெருகி உயிரையே குடித்துவிடும்.

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தபின், இந்த இரண்டு மாதங்களாக இந்தப் பிரச்னை அதிகமாக ஆட்டிப் படைக்கிறது. இரவிலும் உறக்கமில்லை, பகலிலும் உறக்கமில்லை. உடல் மிகவும் பலவீனமாக உள்ளது.

பயங்களால் முடங்கிக் கிடக்கும் பெண்ணும் அவள் தான். பரபரப்பாய் இயங்கும் பெண்ணும் அவள் தான். அவளுக்கான மருந்துத் தேர்வு சரியானதுதானா? என்பதை பல மெட்டீரியா மெடிக்காக்களைப் புரட்டிய பின் இறுதி செய்தேன். உயர் வீரியத்தில் காலை, இரவு இரண்டு வேளை மருந்துடன் தொடர் மருந்துகளும் கொடுத்து, விரைவில் நலம் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி அனுப்பி வைத்தேன். அன்று பிற்பகலில் இரண்டு மணி நேரமும், இரவு முழு நேரமும் நன்றாகத் தூங்கி விட்டாள். அடுத்த நாள் விடியல் அவள் வாழ்வின் புதிய விடியலாய் அமைந்தது.

விஷப் பூச்சிகளாய் அவள் இதயத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்த வழக்கமான பயங்களின் அழுத்தம் குறைந்திருந்ததை உணர்ந்தாள். பிள்ளைகளை கனிவோடு உபசரித்தாள். வீடு தேடி வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்றாள். முன்பு போல பரபரப்பாக வேலை செய்வதில்லை. போதுமான வேகத்தோடு, பொறுப்புணர்ச்சியோடும் பணிகளில் ஈடுபட்டாள். ஒவ்வொரு நாளும் அவள் அடைந்த நிவாரணமும், நலமும் மனநிலை மாற்றமும் அதிகரித்துக் கொண்டே வந்தன. மருந்துகள் தீர்ந்த இறுதி நாளில் பதினைந்தாம் நாளில் மீண்டும் பொலிவோடு வந்தாள். தான் வணங்கும் கடவுள் தன்னைக் கைவிடவில்லை என்று கூறி மருந்து சாப்பிடத் துவங்கிய நாள் முதல் இன்று வரை அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களை விவரித்து, நன்றிப் பெருக்கில் கண்ணீர் வடித்தாள். அவளுக்கு மீண்டும் அதே மருந்தை ஒரு வேளை மட்டும் கொடுத்து வேறு பிரச்னைகள் இருந்தால் வந்து பார்க்குமாறு கூறி அனுப்பினேன். அவள் முழு நலம் பெற்றுவிட்டாள்.

அகல்யாவிற்கு அருள்பாலித்த மருந்து லில்லியம் டிக்ரினம்.

Allen’s key notes-; லில்லியம் டிக்ரினம்

  • Fears : being alone, insanity fears she is incurable
  • Timid, fearful and weeps much
  • Tormented about her salvation
  • Must keep to repress sexual desires

என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

The soul of remedies நூலில் லில்லியம் டிக்ரினம் பற்றி டாக்டர்.ராஜன் சங்கரன் ‘இது தாவர வகை மருந்தென்ற போதிலும், தாவர குணமும் மிருக குணமும் கலந்துள்ளது. கற்பு, தூய்மை, மத உணர்வு என்ற மென்மையான தன்மைகளும், மிகையான மோக எழுச்சி என்ற மூர்க்கத் தன்மையும் இம்மருந்தில் அமைந்துள்ளன. இம்மருந்திற்குரியவர் அதிக மதப்பற்று, ஆன்மீக ஈடுபாடு காரணமாக பாலியல் விருப்பத்தைப் பாவமாகக் கருதி வேறு பணிகளில் சுறுசுறுப்பாக எந்நேரமும் ஈடுபடுவதன் மூலம் பாலுணர்வுக் கிளர்ச்சியை அடக்கிக் கொள்வார்’ என்று விவரித்துள்ளார்.

லில்லியம் டிக்ரினம் அகல்யாவின் மனச்சிக்கல்களைத் தீர்த்து, நலமறித்து இயல்பான குடும்பப் பெண்ணாக மாறி ஹோமியோபதியின் அற்புத ஆற்றலை நிருபித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com