

ஏழுமலையானுக்கு துலாபார பிரார்த்தனையை செலுத்த எளிய முறையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழுமலையானுக்கு பலவகையான முறையில் நேர்த்திக்கடன் செலுத்துவது பக்தர்களின் வழிபாடுகளில் ஒன்று. அதில் ஒருமுறை துலாபாரம். பலவகையான பொருள்களைக் கொண்டு வேண்டிக் கொள்பவர்களின் எடைக்கு எடை கொடுப்பது வழக்கத்தில் உள்ள பிரார்த்தனை. முன்பு துலாபாரம் போடுபவர்கள் அவர்கள் வேண்டிக்கொள்ளும் பொருள்களை தாமே தம் ஊர்களிலிருந்து சுமந்து வருவார்கள். இல்லையென்றால் திருமலையில் இடைத்தரகர்கள் மூலம் அதிகப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் நிலவியது. அதை அறிந்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் நன்மையை நினைவில் கொண்டு அவர்களே கோயிலுக்குள் முன் வாசலை அடுத்து துலாபார கவுன்ட்டர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இது 24 மணிநேரமும் இயங்கும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தியன் வங்கியும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சிண்டிகேட் வங்கியும் துலாபார கவுன்ட்டரை இயக்கும். இங்கு பக்தர்கள் துலாபாரம் போட வேண்டியவர்களின் எடையைப் போட்டு எந்தப் பொருளை துலாபாரம் போட வேண்டுமோ அந்தப் பொருளுக்குச் சமமான பணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பின் கொடுக்கபட்ட ரசீதை ஏழுமலையான் உண்டியலில் செலுத்திவிடலாம். இம்மாதிரி செய்வது நேர்த்திக்கடன் செலுத்தியதற்குச் சமமாகும். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 25லிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
துலாபார விலைப் பட்டியல் 1 கிலோவுக்கு: 10 பைசா நாணயங்கள் ரூ.50, 25 பைசா நாணயங்கள் ரூ.85, 50 பைசா நாணயங்கள் ரூ.137, 1 ரூபாய் நாணயங்கள் ரூ.202, 2 ரூபாய் நாணயங்கள் ரூ. 332, 5 ரூபாய் நாணயங்கள் ரூ.555, சர்க்கரை ரூ.34, வெல்லம் ரூ.27, அரிசி ரூ.27, கற்கண்டு ரூ.30 (இதன் விலை நிர்ணயம் உள்ளுர் சந்தையின் விலையைப் பொருத்தது)
இனி பக்தர்கள் துலாபாரம் போடும் பொருள்களை சுமந்து வரும் சிரமம் இல்லை. இந்த வழிமுறையை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.