ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதி ஒருவர் ஆயுதங்களுடன் சரணடைந்தார்.
அவர் சரணடைய முன்வந்தது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சோபியான் மாவட்டத்தின் இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியை சனிக்கிழமை மாலை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது, ஒரு வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, நாங்களும் பதிலடி கொடுத்தோம். இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை ஞாயிற்றுக்கிழமை விடியும் வரை நீடித்தது. பயங்கரவாதிகளில் சிலர் வீரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடிவிட்டனர்.
2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதியை மட்டும் சுற்றி வளைத்து சரணடையுமாறு எச்சரித்தோம். கொல்லமாட்டோம் என்று உறுதி அளித்ததை அடுத்து அந்த பயங்கரவாதி ஆயுதங்களுடன் முன்வந்து சரணடைந்தார்.
அவரது பெயர் ஆதில் ஹுசைன் என்பதும், சோபியான் மாவட்டம், சிதிபோரா பகுதியைச் சேர்ந்தவரான அவர் கடந்த மே மாதம் பயங்கரவாத அமைப்பில் இணைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரின் பெயர் தாரிக் அகமது பட் என்பது தெரியவந்துள்ளது. தாரிக் பல்வேறு பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் ஆவார். இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள இளைஞர்கள் காவல் நிலையத்தில் சரணடையலாம்; அவர்களுக்கு அரசு மறுவாழ்வு அளிக்கும்' என்று ஜம்மு}காஷ்மீர் காவல் துறை டிஜிபி எஸ்.பி.வைத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.