

மஜீன்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் பக்தர்களின் தரிசனத்துக்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழுமலையான் கோயில்களை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஜம்முவின் புறநகரான மஜீன் பகுதியில் ஏழுமலையான் கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை மந்திர முழக்கத்துக்கு இடையே ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்தனர்.
ஷிவாலிக் வனப் பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறையில் வழிபாடு மேற்கொண்ட பின், கோயிலை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் துணை நிலை ஆளுநரும் மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடாசலபதி வீற்றிருக்கும் இக்கோயிலின் திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் திறப்பு விழாவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது:
ஜம்மு}காஷ்மீர் மற்றும் நாட்டின் சனாதனப் பயணத்தில் இது வரலாற்றுத் தருணமாகும். இக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழா ஜம்மு-காஷ்மீரில் மதச் சுற்றுலாவை வலுப்படுத்தும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரேதசத்தில் பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க இக்கோயில் உதவும். வேத கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் மேம்படுத்த மாதா வைஷ்ணவதேவி வாரியம், ஸ்ரீகைலாஷ் ஜோதிஷ வேத சம்ஸ்தான் உள்ளிட்ட அமைப்புகள் பங்களித்து வருகின்றன. இங்கு ஒரு வேத பாடசாலையையும் சுகாதார மையத்தையும் அமைப்பதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இன்றைய விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்ள இருந்தார். எனினும் தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக அவரால் வர இயலவில்லை. அவர் கோயில் திறப்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஜம்முவில் தனது எதிர்கால நிகழ்ச்சியானது ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளப்பட்ட பிறகே தொடங்கும் என்று அவர் என்னிடம் கூறியுள்ளார் என்றார்.
திறப்பு விழாவையொட்டி கோயிலில் நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷண விழாவில் துணை நிலை ஆளுநர், மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஜி.கிஷன் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசுகையில் , ஜம்மு-காஷ்மீர் மக்கள், நிர்வாகம், பக்தர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். "ஜம்முவில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றே என்ற தகவலை உலகத்துக்கு அளிக்கும். ஆன்மிகம் மற்றும் சனாதன பாரம்பரியங்களின் மையமாக இக்கோயில் திகழும்' என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில் "ஒற்றுமை, பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கான கொண்டாட்டம் இது. மதம், கலாசாரம் ஆகியவை எதுவாக இருந்தாலும் நமது நம்பிக்கை, இதயங்களின் தூய்மை ஆகியவை ஒன்றுதான். ஜம்மு}காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் புதிய மைல் கல்லாகும்' என்றார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பேசுகையில், "ஜம்மு-காஷ்மீரில் இக்கோயில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தற்போது ஜம்முவில் இருந்தபடி திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வரரை வழிபடலாம். மாதா வைஷ்ணவதேவி கோயிலுக்குச் செல்பவர்கள் இங்கு தரிசனம் செய்ய முடியும்' என்றார்.
62 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஜம்மு பிராந்தியத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு வெளியே கட்டப்பட்டுள்ள ஆறாவது ஏழுமலையான் கோயில் இதுவாகும்.
ஜம்முவில் வியாழக்கிழமை திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற ஜம்மு}காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஜி.கிஷன் ரெட்டி உள்ளிட்டோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.