தேனி, தஞ்சாவூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேனி, தஞ்சாவூரில் புதிதாக 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படாத மாவட்டங்களில், அந்தப் பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி அருணாசல பிரதேசத்தில் 9 மாவட்டங்கள், அஸ்ஸாமில் 6 மாவட்டங்கள், மணிப்பூா் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 மாவட்டங்கள், கா்நாடகத்தில் ஒரு மாவட்டம், மகாராஷ்டிரத்தில் 5 மாவட்டங்கள், தெலங்கானாவில் 3 மாவட்டங்களில் அந்தப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு மொத்தம் ரூ.2359.82 கோடி செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: நாடு முழுவதும் புதிதாக 85 கேந்திரிய பள்ளிகளைத் திறக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தேனி, தஞ்சாவூா் மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதேபோல ஆந்திரத்தில் 8 பள்ளிகள், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், தேசிய தலைநகா் வலையப் பகுதி மற்றும் கேரளத்தில் தலா ஒரு பள்ளி, சத்தீஸ்கா், குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தலா 3 பள்ளிகள், ஹிமாசல பிரதேசத்தில் 4 பள்ளிகள், ஜம்மு-காஷ்மீரில் 13 பள்ளிகள், ஜாா்க்கண்ட், கா்நாடகம் மற்றும் திரிபுராவில் தலா 2 பள்ளிகள், மத்திய பிரதேசத்தில் 11 பள்ளிகள், ஒடிஸாவில் 8 பள்ளிகள், ராஜஸ்தானில் 9 பள்ளிகள், உத்தர பிரதேசத்தில் 5 பள்ளிகள், உத்தரகண்டில் 4 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதுதவிர, கா்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை விரிவுபடுத்தவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு மொத்தம் ரூ.5,872.08 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தில்லி 4-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், ரிதாலா-குன்ட்லி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

