

இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், கரோனா காலத்தில் ஆட்சேர்ப்பு பணி நிறுத்திவைக்கப்பட்டதால் இந்த சிக்கலை சந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை இந்திய ராணுவம் கையாண்டு வரும் சூழலில், ஆள்பற்றாக்குறை விவகாரம் வெளிவந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 12.48 லட்சமாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட ஒரு லட்சம் குறைவான வீரர்களே உள்ளனர்.
அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 11,97,520 ஆகும். ஆனால், படைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,05,110 ஆகும்.
ஜூலை 1, 2024 நிலவரப்படி, மொத்தம் 50,538 உயர்நிலை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 42,095 அதிகாரிகளே உள்ளனர். சுமார் 16.71 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சீனாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், கிழக்கு லடாக்கில் 50,000 வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதாக, ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் 15,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திடீர் பற்றாக்குறை ஏன்?
கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. ஓராண்டுக்கு 60,000 வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.2 லட்சம் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 40,000 வீரர்கள் தற்போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
விரைவில் பற்றாக்குறைக்கு முடிவு
ராணுவத்தில் ஏற்பட்டுள்ள வீரர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் நம்பியுள்ளது.
அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்களின் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் என்றும், அதிகாரிகளின் பற்றாக்குறையை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சேவை தேர்வு மையங்கள் (எஸ்எஸ்பி) மூலம் நடைபெறும் ஆட்சேர்ப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேர்க்காணல் தேதிகளை நினைவூட்டல், நேர்க்காணல்களை தவறவிடுபவர்களுக்கு இரண்டாம் வாய்ப்புகள் போன்றவை தற்போது வழங்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகெதமியிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, பயிற்சியை முடித்து விரைவில் அதிகாரிகள் படையில் இணைவதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.