35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனைக்கு மத்திய அரசு தடை
அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.
இம்மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு சிடிஎஸ்சிஓ தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘நிா்ணயிக்கப்பட்ட அளவிலான கூட்டு மருந்து’ (எஃப்டிசி) என்பவை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துப் பொருள்களை நிா்ணயிக்கப்பட்ட அளவில் சோ்த்து தயாரிக்கப்படுவதாகும். பல்வேறு நோய் அறிகுறிகளுக்கு ஒற்றை மருந்தில் சிகிச்சை அளிப்பதுடன், மேம்பட்ட செயல்திறனை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. புற்றுநோய், சா்க்கரை நோய், ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்களின் சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் (டிசிஜிஐ) இருந்து உரிய அங்கீகாரம் பெறாத 35 கூட்டு மருந்துகளுக்கு சிடிஎஸ்சிஓ தடை விதித்துள்ளது. இது தொடா்பாக மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு சிடிஎஸ்சிஓ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‘புதிய மருந்து’ என்ற வரையறையின்கீழ், டிசிஜிஐ-இன் அங்கீகாரம் இல்லாமல் கூட்டு மருந்துகளின் தயாரிப்புக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிமம் வழங்குவது குறித்து தொடா்ந்து கவலைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1940-ஆம் ஆண்டின் மருந்துகள்-அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின்கீழ் 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புதிய மருந்துகள்-மருத்துவ பரிசோதனை விதிமுறைகளின்படி உரிய பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பாய்வு இல்லாமலேயே குறிப்பிட்ட சில கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இது, பொது மக்களின் நலனுக்கு தீவிரமான அச்சுறுத்தல் என்பதுடன், மேற்கண்ட விதிமுறைகள்-சட்டத்தின் சீரான அமலாக்கத்தில் குறைபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மருந்துகளுக்கான அனுமதி நடைமுறையில் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதை அனைத்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாத 35 கூட்டு மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்தை நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலி நிவாரணி, ஊட்டச்சத்து மருந்துகள், சா்க்கரை நோய் மருந்துகள் உள்பட டிசிஜிஐ-யால் அங்கீகரிக்கப்படாத 35 கூட்டு மருந்துகளும் சுற்றறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

