ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

வங்கிகளின் இணையதள முகவரி: ரிசா்வ் வங்கி அறிவுறுத்தல்

வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீா்படுத்தி வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.
Published on

வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீா்படுத்தி வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் அதிகரித்து வரும் முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது வங்கி இணையதளங்கள் பொதுவான இணையதள முகவரிக் களங்களான ‘.காம்’, ‘.கோ.இன்’ என்பதைக் கொண்டே இயங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக ‘.பாங்க்.இன்’ என்ற இந்திய வங்கிகளுக்கான பிரத்யேக இணையதள முகவரிக் களததைப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வங்கி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐடிஆா்பிடி) மூலம் இந்த புதிய இணையதள முகவரி மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய இணையதள இணைப்பகம் (என்ஐஎக்ஸ்ஐ) இந்தத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘.பாங்க்.இன்’ என்ற இணையதள முகவரி களத்துக்கு பதிவாளராக செயல்படும்.

அனைத்து வங்கிகளும் ஒரே சீராக இந்த இணையதள முகவரி கள மாற்றத்தை வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com