

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புது தில்லி தொகுதியில் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தலைநகர் தில்லியில் பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நிகழவுள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
வேட்புமனு தாக்கல் செய்ய ஜன. 17 கடைசி நாள் என்பதால், களத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, அரவிந்த் கேஜரிவால் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தாக்கல் செய்வதற்கு முன், கேஜரிவால் தனது மனைவி சுனிதாவுடன் அனுமன், வால்மீகி கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இருந்து புது தில்லி மாவட்ட நீதிபதி அலுவலகம் வரை நடந்தே சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினர், கட்சிக் கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் முதல்வருடன் நடைப்பயணம் மேற்கொண்டனர். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆம் ஆத்மி கட்சி முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அனைவரும் வாக்களிக்குமாறு தில்லி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாஜகவைத் தாக்கி பேசிய கேஜரிவால், கட்சிக்குத் தொலைநோக்குப் பார்வையோ, முதல்வர் முகமோ, கதையோ இல்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவர்கள் கூறவில்லை.
தில்லி மக்களை ஒரு ஜோடி செருப்பால் விலைக்கு வாங்க முடியாது, பாஜக என்ன செய்கிறது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.
காலிஸ்தானி ஆதரவு அமைப்பில் இருந்து தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியானது. கடவுளால் பாதுகாக்கப்பட்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. கடவுள் என்னுடன் இருக்கிறார். ஒருவரின் உயிர்நாடி முடிவடையும் நாளில் கடவுள் அவர்களை அழைக்கிறார் என்று அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு சுனிதா கேஜரிவால் கூறியது,
யார் சிறந்த ஆட்சியை வழங்குவார்கள் என்பது தில்லி மக்களுக்குத் தெரியும். யார் தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதும் மக்களுக்குத் தெரியும். எனவே, மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக புது தில்லி தொகுதியில் வேட்பாளராக கேஜரிவால் நீடித்து வருகிறார். அவர் இந்த முறை பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.