மானுட வரலாறு என்பது உணவால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. வேட்டை மிருகங்களைப் பின்தொடர்ந்தே ஆதிமனிதன் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி உலகெங்கும் பல்கிப் பரவினான். விவசாயமும், தானியங்களும் இல்லாத சூழலில் வேட்டையால் கிடைக்கும் உணவே மனிதனின் பசியைப் போக்கியது.
புல் மேயும் ஆடு, மாடு போன்ற மிருகங்களைப் பொறுத்தவரை அவை உணவின்றி இருக்கும் சூழலே ஏற்படாது. மேய்ச்சல் முறையில் எங்கேயும் கிடைக்கும் புல், இலை, தழை போன்றவற்றை உண்டு பசியின்றி வாழ்ந்துவிடும். ஆனால் சிங்கம், புலி போன்ற புலால் உண்ணும் மிருகங்களுக்கு விரதம் - விருந்து என்கிற உணவுமுறையே உகந்ததாக இருக்கும். சிங்கம், புலி, ஓநாய் போன்றவை தகுந்த வேட்டை கிடைக்க நாள் கணக்கில் சாப்பிடாமல், பசியுடன் இருக்கும். திடீரென ஒரு நாளில் மான், எருமை போன்ற ஏதாவது மிருகங்களை வேட்டையாடி வயிறு நிரம்ப உண்ணும். அதன்பின் மீண்டும் நாள் கணக்கில் பட்டினி, மீண்டும் வேட்டை என்றே வாழும்.
மனிதன் பசிக்குப் பழகியவன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய நாகரிக மனிதர்கள் புல்மேயும் மிருகங்களின் மேய்ச்சல் முறையில் உணவு உண்டு வருகிறார்கள். தினமும் மூன்று வேளை உணவு, நடுவே கணக்கு வழக்கில்லாத பஜ்ஜி, போண்டா, டீ, காபி, நொறுக்குத் தீனிகள் என எப்போதும் மேய்ச்சல் பாணியில் உணவை உண்டே பலரும் உடல் கொழுக்கிறார்கள். அதிலும் டிவி பார்க்கும்போது நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. நம் இயல்புக்கு மாறான இந்த மேய்ச்சல் உணவுமுறையால் நாம் ஆடு, மாடுகளைப் போல கொழுத்ததே மிச்சம்.
எனவே, நம் இயல்புக்கு ஏற்ற உணவுமுறை என்பது மேய்ச்சல் முறை அல்ல. விருந்து - விரதம் வகையிலான உணவுமுறையே.
ஆதிமனிதன் வேட்டையைத் தேடி அலைந்தவன். அவனுக்குத் தினமும் மும்முறை உணவருந்தும் சொகுசான வாழ்க்கைமுறை அமையவில்லை. பல நாள் பட்டினி கிடந்து ஒரு நாள் மிகப்பெரிய வேட்டையில் ஈடுபட்டு, அதன் பயனால் வயிறு நிரம்ப உண்பதே ஆதிமனிதனின் உணவுமுறையாகவும் வாழ்க்கைமுறையாகவும் இருந்தது.
ஆக மனித உடல் என்பது பல நாள் பட்டினியைத் தாங்கும் சக்தி கொண்டதே. உண்ணாமல் இருந்தாலும் பசியுடன் இருக்கவேண்டியதில்லை என்பது உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அனைவரும் அறிந்த விஷயம். ஆம், உண்ணாவிரதம் இருக்கும்போது நமக்குப் பசி எடுக்காது. அதே உண்ணாவிரதம் இருக்காமல் ஒரு வேளை உணவை உண்ணத் தவறினாலும் நமக்குப் பசி எடுத்து வயிற்றைக் கிள்ளும். களைத்துப்போய் வேலை செய்ய முடியாமல் சுருண்டுவிடுவோம். நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் களைப்பின்றி உழைப்பதையும், காலை உணவை உண்டுவிட்டு மதிய உணவு கிடைக்காதவர், பசியால் துடிப்பதையும் நாம் காண முடியும். இவை இரண்டும் விருந்து - விரத உணவுமுறையின் விளைவுகளே.
அது எப்படிச் சாத்தியம் என்று ஆச்சர்யம் கொள்கிறீர்களா? விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு வேளை உணவை உண்டாலும், அதிலும் குறிப்பாக மாவுச்சத்து அதிகமுள்ள தானிய உணவுகளை உண்டால் (சப்பாத்தி, பரோட்டா) உடலின் இன்சுலின் சுரந்து நம் ரத்தச் சர்க்கரை அளவுகளைக் குறைத்து பசியைத் தூண்டிவிடும். அதனால்தான் சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்தில் மீண்டும் பசி எடுக்கிறது. எட்டு மணிக்கு காலை உணவை உண்ட பலரும் பத்து மணிக்கு அலுவலக கேண்டீனில் கிடைக்கும் டீ, பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது இதனால்தான்.
அதே காலை உணவை உண்ணாமல் அலுவலகம் வருகிற ஒருவருடைய ரத்தச் சர்க்கரை அளவுகள் மிகவும் சீராக இருக்கும். அவருக்கு மதியம் 3 மணி வரை பசியே எடுக்காது. மதியம் 3 மணிக்கு உண்டாகிற பசி, ஆறு மணியளவில் உச்சக்கட்டத்தை அடையும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இரவு எட்டுமணி வரை எதுவுமே உண்ணாமல் இருந்தால் பசி தணிய ஆரம்பித்துவிடும். உறங்கும்போது பசி சுத்தமாக அடங்கிவிடும். இதனால் அடுத்த நாள் காலையில் மீண்டும் பசியின்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
நம்பமுடியவில்லையா? மனித உடல் இப்படி எத்தனை நாள் பசியின்றி இருக்கும் தன்மை கொண்டது?
நாள் கணக்கில் யாரையும் உண்ணாவிரதம் இருக்க நான் கூறவில்லை என்பதை முதலில் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
பசியின்றி இருக்கும் தன்மை என்பது நம் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பின் அளவைப் பொறுத்த விஷயம். இதனால் இரவு உணவையாவது ஒருவர் தினமும் கட்டாயம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் ஒருவரால் தினமும் ஒரு வேளை உணவை மட்டுமே உண்டு ஆண்டுக்கணக்கில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும். தொடர்ந்து உணவு உண்ணாமல் இருப்பது என்பது தற்காலத்தில் யாருக்கும் பழக்கமல்லாத விஷயம். ஆனால் பஞ்சமும், உணவுத்தட்டுப்பாடும் நிலவிய சூழலின்போது நம் முன்னோர்கள் நாள் கணக்கில் பசியுடன் இருந்துள்ளார்கள். ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம், ரம்ஜான் சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் 30 நாள் விரதம் என மதம் சார்ந்த உண்ணாவிரதங்கள் அனைத்தும் நம் ஆதிமனித உணவுமுறையின் எச்சங்களே ஆகும்.
இன்றைக்கும் உலக சமயங்கள் பலவற்றிலும் குறைவாக உண்பதே சிறப்பானதாகவும், விரதம் மற்றும் நீண்டநாள் பட்டினி இருப்பது போற்றத்தக்க விஷயமாகவும் கருதப்படுகிறது. புத்தர் போதி மரத்தடியில் உணவின்றி கடுந்தவம் செய்தே ஞானம் அடைந்தார் என பவுத்தம் கூறுகிறது. விசுவாமித்திரர் முதலான முனிவர்கள் ஆகாரமின்றி ஆண்டுக்கணக்கில் கடுந்தவம் புரிந்தே இறையருள் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. பைபிளில் இயேசு 40 நாள்கள் உணவின்றிப் பட்டினி இருந்ததாக பைபிள் கூறுகிறது.
என் ஆப்பிரிக்க நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எத்தியோப்பிய காப்டிக் கிறிஸ்தவ சமயத்தில் இருக்கும் (மிகத் தொன்மையான கிறிஸ்தவப் பிரிவுகளில் ஒன்று, காப்டிக் கிறிஸ்தவம்) கடும் விரத முறைகளைக் கூறினார். லெண்ட் எனப்படும் பண்டிகை காலகட்டத்தில் எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 40 நாள்களுக்குத் தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்களாம். அதிலும் புதன், வெள்ளி போன்ற நாள்களில் இறைச்சி, கோழி போன்றவற்றை எடுக்காமல் மீன், கொட்டைகள், டெஃப் எனப்படும் தானியத்தால் ஆன ரொட்டி போன்றவற்றை மாத்திரமே உட்கொள்வார்களாம். லெண்ட்டின் கடைசி ஒரு வாரம் முழுக்க பட்டினி இருப்பவர்களும் உண்டு. தீவிர கிறிஸ்தவர்கள் சிலர், 60 நாள்கள் ஒருவேளை மட்டுமே உண்ணும் மரபைக் கடைப்பிடிப்பார்கள் என்றும் சொன்னார்.
மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலில் அவர் தன் தாய் கடைப்பிடித்த விரத முறையை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.
‘என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும்போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என் நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்று கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சதூர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்வார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார்.
தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பது அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சதுர்மாசத்தின்போது ஒரு நாள் விட்டு ஒருநாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சதுர்மாச விரதத்தின்போது சூரியதரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாள்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்வதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரிய பகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாள்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான்; தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான். அதைப் பற்றிப் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடுதான் தாயார் கூறுவார். நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்’ என்கிறார் காந்தி.
இப்படிக் கடும் விரதம் இருந்து முடித்தபின் மிகப்பெரிய விருந்துடன் பட்சணங்கள், இனிப்புகளை எடுத்தபடி நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடுவது பல மதங்களில் வழக்கமாக உள்ளது. விரதம் முடிந்தபிறகு சீடை, முறுக்கு, பணியாரம், பொங்கல் என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பட்சணம் உகந்தது எனச் சொல்லி அதை செய்து உண்பார்கள். ஆக, கடுமையான விரதமும், அதைத் தொடரும் விருந்தும் என விரதம் - விருந்து உணவுமுறை ஆதிமனித காலகட்டத்தின் எச்சங்களாக இன்றைய மதங்களிலும் தொடர்வதைக் காண்கிறோம்.
சரி, நீண்டநாள் உண்ணாவிரதம் நமக்குக் கெடுதல் விளைவிக்காது என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பலரும் ஏன் மரணமடைகிறார்கள்?
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சிலரை எடுத்துக்கொண்டால், ஈழத்தில் திலீபன் 12 நாள்களில் மரணம் அடைந்தார். 1950-களில் பொட்டி ஸ்ரீராமுலு, தனி ஆந்திர மாநிலம் பெறவேண்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து 56-வது நாளில் உயிர் துறந்தார்.
தவிரவும் சல்லேகனம் எனும் வடக்கிருத்தல் முறையைப் பின்பற்றி பல ஜைனத் துறவிகள் 40 மற்றும் 60 நாள்கள் வரை உண்ணாநோன்பைக் கடைப்பிடித்து உயிர் துறக்கிறார்கள். (வடக்கிருத்தல் என்பது வடதிசையை நோக்கி அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்து உயிர்துறக்கும் முறையைக் குறிப்பதாகும்.
இதில் திலீபன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததால் தான் 12 நாள்களில் மரணம் அடைந்தார். தொடர்ச்சியாக உண்ணாமல் இருக்கும்போது தண்ணீர் பருகுவது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைக் கெடாமல் பாதுகாக்கும். தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினால் சிறுநீரகத்தில் தேங்கும் கீடோன்களைச் சுத்திகரிக்க வழியில்லாமல் சிறுநீரகம் செயலிழந்துவிடும். சில நாள்களில் மரணம் நேரிட வாய்ப்புண்டு.
எனவே, நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் தாராளமாக 20 நாள்கள் முதல் ஒரு மாதம் வரை உண்ணாமல் இருக்கலாம் என்பது இந்த உதாரணங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆனால் இத்தகைய உண்ணாவிரதம் என்பது ஒரு அதீத நிலையே. 21 நாள்கள் அல்லது ஒரு மாதம் வரை உயிர் போகாது என்பதாலேயே நாம் உண்ணாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆதிமனிதன் 30 நாள்கள் எல்லாம் உண்ணாமல் இருந்திருப்பானா? அதிகபட்சமாக சில நாள்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே வேட்டை கிடைக்காமல் அவன் பட்டினி கிடந்திருக்கலாம். பசியுடன் இருக்கும் சமயம் அவன் மேலும் துடிப்புடன் செயல்பட்டிருப்பான்.
உண்ணாவிரதம் இருக்கும் சமயம் மனித மூளையின் ஆற்றல் பெருகுகிறது. பசி எடுத்த நிலையில் மூளை அடுத்தவேளை உணவைப் பெற என்ன செய்யவேண்டும் எனச் சிந்திக்கிறது. இதனால் மூளையின் சிந்தனைத்திறன் மேம்படுகிறது. உண்ணாவிரதம் இருந்த பலரின் மூளைகளை ஆராய்ந்ததில் அவற்றில் புதிதாக நியூரான்களும், செல்களும் வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.
அதேசமயம் நன்குச் சாப்பிட்டுவிட்டு, மூளைக்குப் போதுமான க்ளுகோஸ் கிடைத்த சூழலில் என்ன ஆகும்? மூளை ஓய்வெடுக்க அல்லது உறங்கவே விரும்பும். நன்றாக மதிய உணவை உண்ட பலரும் அடுத்து செய்ய விரும்புவது உறங்குவதையே!
மூளையின் செயல்திறனை வளர்க்கும், சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் தன்மை கொண்டது உண்ணாநோன்பு. மூளையை மந்தப்படுத்தும் சக்தி கொண்டது உணவு. ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களில் நாம் உண்ணாமல் இருப்பதே மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் நல்ல வழி.
உண்ணாநோன்பின் இன்னொரு பலன், அது நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மூன்று நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பது நம் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுக்க மாற்றி அமைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் நம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தி புதிய வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய நேர்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி பெருக முக்கியமானவை இந்த வெள்ளை அணுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (இணைப்பு: https://news.usc.edu/63669/fasting-triggers-stem-cell-regeneration-of-damaged-old-immune-system/) இந்த ஆய்வில் கூறப்படும் விஷயம் - உடலில் தேவையின்றித் தேங்கி நிற்கும் பழைய வெள்ளை ரத்த அணுக்களை உண்ணாவிரத முறை அகற்றிவிடுகிறது. பிறகு அது புதிய, துடிப்பு மிகுந்த வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்துவிடுகிறது.
ஆனால் இந்த நன்மைகள் கிடைக்க 2 அல்லது 3 நாள்களாவது உண்ணாவிரதம் இருக்கவேண்டியிருக்கும், என்னால் இதைப் பின்பற்ற முடியாதே என எண்ணவேண்டாம். உண்ணாவிரதத்தின் நன்மைகள் நமக்குக் கிடைக்க, 3 நாள்கள் கட்டாயம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பதல்ல. பதிலாக, உடலில் தேங்கியுள்ள கிளைகோஜென் (க்ளுகோஸ்) கரைந்து, மூளை கீடோனில் (கொழுப்பில்) செயல்பட ஆரம்பிப்பதே நம் தேவை என விஞ்ஞானிகள் இப்போது கூறுகிறார்கள்.
தினமும் 23 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து ஒரு வேளை உயர்கொழுப்பு நிரம்பிய பேலியோ உணவுகளை எடுக்கும் ஒருவருக்கு 2, 3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்காமலேயே மேலே சொன்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.
உண்ணாவிரதத்துடன் கலோரிக் கட்டுப்பாடும் இணையும்போது உண்ணாவிரதத்தின் வீரியம் மிகவும் அதிகரிக்கும். அதேசமயம் காலை முதல் உண்ணாமல் இருந்துவிட்டு இரவில் இஷ்டத்துக்குக் கிடைத்ததை எல்லாம் உண்பது மிகவும் தவறானது. மூன்று வேளையும் எவ்வளவு சாப்பிடுவோமோ அதைவிடவும் குறைந்த அளவு கலோரிகளையே உண்ணாநோன்பிருக்கும் நாள்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக 1800 கலோரிகளுக்குக் குறைவாக உண்ணும்போது உண்ணாநோன்பின் பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைவிட அதிகமான கலோரிகளை எடுத்தால் காலை முதல் உண்ணாமல் இருந்ததன் பலன் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உண்ணாநோன்பு நம் உள்ளுறுப்புக்களைச் சுத்திகரிக்கிறது. தொடர்ந்து மூன்று வேளையும் உண்ணும் சராசரி மனிதனின் குடலில் அரை கிலோ முதல் 1 கிலோ வரை உணவு தேங்கியிருக்கும். இந்த உணவை முழுக்க ஜீரணம் செய்து முடிப்பதற்குள் மீண்டும் பெரும்தீனியை உள்ளே தள்ளுகிறோம். ஆனால் உண்ணாநோன்பு இந்த உணவை முழுக்க ஜீரணம் செய்யும் வாய்ப்பை பெருங்குடலுக்கு வழங்கி, அது ஓய்வெடுத்து தன்னைப் புதுப்பித்துக்கொள்ள அவகாசம் வழங்குகிறது.
இதேபோல உணவில் உள்ள நச்சுக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களுக்கும் ஓய்வு கிடைக்கும். அவை உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை அகற்றி உடலைப் புதுப்பிக்கவும் ஓய்வெடுக்கவும், புதிய செல்களை உருவாக்கி தம் செயல்திறனை அதிகரிக்கவும் உண்ணாவிரதம் வாய்ப்பளிக்கிறது. இந்த வகையில் உண்ணாவிரதம் முழுமையாக நம் உடலை மாற்றியமைத்து, நம்மைப் புதிய மனிதனாக்குகிறது.
உண்ணாவிரதம் இருக்க நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்:
குறைந்தது 16 மணி நேரமாவது தினமும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த 16 மணி நேரமும் நீரைத் தவிர வேறு எந்தப் பானம், உணவையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது, மோர் குடிப்பது போன்றவற்றால் பலனில்லை.
16 முதல் 20, 23 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருக்கலாம். 23 மணி நேர விரதம் இருப்பவர்கள் இரவு உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவில் பட்டினியுடன் உறங்கச் செல்லக் கூடாது. வாரம் 2, 3 நாள்களிலாவது உண்ணாவிரதம் இருக்கவேண்டும். உண்ணாவிரதம் முடிந்தபின்பு உண்ணும் கலோரிகளின் அளவு 1800 என்கிற அளவுக்குள் இருக்கவேண்டும்.
உண்ணாவிரதம் இருக்கும் நாள்களில் உண்ணும் உணவானது வைட்டமின்கள், மினரல்கள், புரதம், கொழுப்பு நிரம்பிய முட்டை, இறைச்சி, பால், பனீர், காய்கறிகள், கீரை போன்ற பேலியோ உணவுகளாக இருப்பது அவசியம்.
நல்ல உடல்நிலையில் இருப்பவர்களே உண்ணாவிரதம் இருக்கவேண்டும். மேய்ச்சல் முறையைத் தவிர்த்துவிட்டு, விருந்து - விரதம் என்கிற உணவுமுறைக்கு மாறுவதன் மூலம் சிறப்பான பயன்களை அடையலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.