முதியோர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான தாய்ச்சி உடற் பயிற்சி வகுப்புகள் திருச்சியில் ஜூன் 15-ம் தேதிமுதல் தொடங்கப்படுகின்றன என டாக்டர் சுனில்சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர்கள் சுனில் சீனிவாசன், சாந்தி ஆகியோர் மேலும் தெரிவித்தது:
தாய்ச்சி என்ற உடற்பயிற்சி முதியோர், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டோர், மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பயன் பெறும் வகையில் சீன அறிஞர்களால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நமது நாட்டினரும் பயன் பெறும் வகையில் நாங்கள் பயிற்சி பெற்று, இந்தியாவிலும் இப்பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியிலும் இப்பயிற்சியை நடத்தி வருகின்றோம்.
மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் இந்த உடற் பயிற்சியை வழங்க முடிவு செய்து முதல் கட்டமாக திருச்சி மாநகரில் அப்பல்லோ, காவேரி, மாருதி, வாஸ் ஆகிய 4 மருத்துவமனைகளில் நடத்தவுள்ளோம். மிகவும் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படவுள்ள இந்த பயிற்சி ஜூன் 15-ம் தேதி தொடங்கி 8 வாரங்களுக்கு நடைபெறுகின்றது. வாரத்திற்கு 1 நாள் 1 மணி நேரம் என ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி நடைபெறுகின்றது. அப்பல்லோ மருத்துவமனையில் மட்டும் சனிக்கிழமைகளில் பயிற்சி நடைபெறும்.
தாய்ச்சி உடற் பயிற்சி உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடத்தப்படுவதால் முதியோர் மற்றும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டுள்ளோர், மருந்து மாத்திரைகளை குறைக்கும் அளவுக்கு பயன் கிடைத்துள்ளது. இன்சுலின் பயன்படுத்தியோரும் அதனை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியோர் தாமாக நடக்கவும், தடுமாறி விழுவதிலிருந்து தப்பவும், தன்னம்பிக்கை கூடவும் இப்பயிற்சி உதவுகின்றது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.