பழனி வையாபுரி குளத்தை மேம்படுத்தி தூய்மைப்படுத்த மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை

பழனி நகரின் நடுவே சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பல்வேறு துறைகளுக்கும் உடனடி பணிகள் மேற்கொள்ள உத்திரவு பிறப்பித்துள்ளார். 
Updated on
2 min read

பழனி நகரின் நடுவே சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்தி மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பல்வேறு துறைகளுக்கும் உடனடி பணிகள் மேற்கொள்ள உத்திரவு பிறப்பித்துள்ளார். 

பழனியில் முந்தைய காலங்களில் ஏராளமான புனித தீர்த்தங்கள் இருந்துள்ளன.  இதில் பலவும் அழிந்து விட்ட நிலையில் ஒருசில தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.  நகரின் மையத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் முக்கியமானது வையாபுரி குளம்.  இதன் பேரால் பழனி நகரம் முன்பு வைகாவூர் என அழைக்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலம் அறியமுடிகிறது.  நகரின் மையத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த குளத்தில் பக்தர்கள் நீராடி மலைக்கு சென்ற காலம் மாறி தற்போது இந்த குளம் சாக்கடைகளின் சங்கமமாகி துர்நாற்றம் வீசி வருகிறது.  இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், இந்த குளம் மூலம் பாசன வசதி பெறும் வயல்களுக்கும் தீங்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுகுறித்து சென்னையை சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாண்புமிகு நீதிபதி தனிச்செயலர் ஆகியோர் கடிதத்தைத் தொடர்ந்து கடந்த சிலதினம் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து வையாபுரி குளத்தை சீரமைத்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பல்வேறு துறைகளுக்கு உத்திரவுகள் பிறப்பித்துள்ளார்.

இதன்படி பழனி நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளருக்கு குளத்தில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, வரும் காலத்தில் அசுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கவும்,  நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து, குளத்தில் படகுகுழாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதுள்ளது.  மேலும், திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் பழனி நகராட்சி ஆணையர் ஆகியோர் வையாபுரி குளத்தில் அசுத்தம், மாசு ஏற்படுத்துவோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும், அப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து பக்தர்கள் நலன்மீது அக்கறை மேற்கொள்ளவும் உத்திரவிடப்பட்டுள்ளது. 

தவிர திண்டுக்கல் மாவட்ட நில அளவை இயக்குநர் குளத்தின் முழு பரப்பையும் அளவீடு செய்தும், மாவட்ட கனிமவள இயக்குநர் மண்ணை தூர்வாறி, கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இந்த பணிகளின் போது தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்கவும், ஆன்மீகம் தொடர்பானது என்பதால் பழனி திருக்கோயில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இப்பணிகளை பழனி கோட்டாட்சியர் கண்காணித்து துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறை வையாபுரி குளத்தை முக்கியமான சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என ஏழுபக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வையாபுரி குளம் தொடர்பாக மேற்கண்ட அனைத்து துறைகளும் தங்கள் முதல் அறிக்கையை வரும் 29ம் தேதியும், இரண்டாம் நிலை அறிக்கையை அக்டோபர் ஐந்தாம் தேதியன்றும் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அக்.12ம் தேதி சம்பந்தப்பட்ட துறைகள் பணிகள் நடைபெற்றுள்ளதை உறுதி செய்து அறிக்கை தரவேண்டும்.  இவை மட்டுமன்றி வாரம்தோறும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை வழங்கவேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இப்பணிகளை மேற்கொள்ளும் முதல்நிலை அதிகாரிகள் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அதற்குரிய பிரச்னைகளுக்கும் பொறுப்பாகவுள்ளனர்.  வையாபுரி குளத்தை சீரமைக்க மனு வழங்கிய திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் முன்னரே கடந்த புதன்கிழமை பழனி வையாபுரி குளத்தை பார்வையிட்டு, பழனி வையாபுரி குளத்தை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சிவத்தொண்டர்கள் மூலம் தூர்வாற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பழனி நகரத்தின் நிலத்தடி நீராதாரம் பெருகுவதோடு, பழனி நகருக்கு பொலிவும், தூய்மையும், பக்தர்களுக்கு புனித நீராடுமிடமும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com