

ஆடம்பர பங்களாக்கள் மட்டுமின்றி சாதாரண வீடுகளிலும் கூட தற்போது கண்ணாடி குடுவைகளிலாவது வண்ண மீன்கள் வளர்ப்பதைப் பார்க்க முடிகிறது. வீட்டில் வளர்க்கப்படும் மீன்களை சிறிது நேரம் உற்று நோக்கும்போது மன உளைச்சல், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக மருத்துவர்களே தெரிவிப்பதால் வீட்டில் மீன்கள் வளர்ப்பு என்பது சாதாரணமாகிவிட்டது.
வீடுகளிலும், அலுவலகங்களிலும் நாம் பார்க்கும் அல்லது வளர்க்கும் வண்ண மீன்களுக்கு பின்னால் ஏராளமான ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. இதுதொடர்பாக உதகையைச் சேர்ந்த மீன் வளர்ப்பாளரும், சிறந்த அக்குவேரியம் அமைப்பிற்கான மாநில அரசின் விருதுகளை பெற்றவருமான எஸ்.உதயனிடம் பேசியதிலிருந்து:
வீடுகளில் மீன் வளர்ப்பு என்பதை நாம் வாஸ்து என்கிறோம். இது சீனாவில் பெங்சூய் கலையின் ஓர் அம்சமாகும். உலகிலேயே அதிக சென்சிட்டிவான உயிரினம் மீன்தான். பொதுவாக தற்போது நான்கு வகை மீன்களே வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அரோனா, பிளவர் ஹார்ன், கோல்டன் பிஷ் மற்றும் கோய் என்பவையே அவை. மீனை திபெத்தியர்களும், சீனர்களும் தெய்வமாக வழிபடுகின்றனர். அதனால், உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த வளர்ப்பு மீன்களுக்கு ஒவ்வொரு விதமான மரியாதை உள்ளது. இந்த நான்கு வகை மீன்களும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆற்று மீன்களாகும். அங்குதான் இந்த மீன்களை வாஸ்து மீன்களாகவும் நம்புகின்றனர்.
அரோனா வகை மீன் அமேசான் பகுதியை தாயகமாகக் கொண்டதாகும். இது தற்போது 20 நிறங்களில் கிடைக்கிறது. அரை இஞ்ச் முதல் 12 இஞ்ச் நீளம் வரையிலான மீன்களை வீட்டில் வளர்க்கலாம். இது உணவாக சிறிய மீன்களையே உட்கொள்ளும். தற்போது கருவாடும் இதற்கு உணவாக வழங்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அரோனா ஒவ்வொருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும். இதன் முன்னர் அமர்ந்துதான் விஷயங்களைத் தீர்மானிப்பர். அப்போது மீனின் செயல்பாடுகளை வைத்தே இறுதி முடிவெடுக்கப்படும். பேச்சுவார்த்தையின்போது மீனின் அசைவில் வித்தியாசம் தென்பட்டால் அந்த உடன்பாடு கையெழுத்தாகாது என்பது எழுதப்படாத விதியாகும்.
பிளவர் ஹார்ன் ரக மீன் வீட்டிற்குள் அசுத்த ஆவியையோ அல்லது பிளாக் மேஜிக் எனப்படும் செய்வினைகளையோ அண்ட விடாமல் தடுக்கும் மீன் என புகழ் பெற்றதாகும். வீட்டிற்குள் புகுந்துவிடும் அசுத்த ஆவிகளை நுழைய விடாமலிருக்க இந்த மீனையே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். வீட்டில் இரவு நேரத்தில் எல்லோரும் உறங்கி விடும் போது அசுத்த ஆவிகள் வீட்டிற்குள் நுழைந்து விடுமெனவும், அப்போதும் கண் மூடாமல் அசைந்து கொண்டிருக்கும் மீனினத்தில் பிளவர் ஹார்ன் அத்தகைய ஆவிகளை நுழைய விடாமல் தடுப்பதாக தென்கிழக்கு ஆசிய மக்கள் இன்னமும் நம்புகின்றனர்.
கோய் ரக மீன்களை சீனர்கள் தங்கள் மூதாதையர்களாகவே பார்க்கின்றனர். இதற்கு இம்மீனின் முகத்தில் வளர்ந்துள்ள மீசையே காரணமாகும். அதனால் கோய் ரக மீன்களோடு 8 கோய்களையும் ஒரு கருப்பு நிற மீனையும் வைக்கும்போது வீட்டில் செல்வம் கொழிக்குமென சீனர்கள் நம்புகின்றனர்.
அதைப்போலவே கோல்டன் பிஷ் வீட்டில் செல்வம் கொழிக்க வைக்கும் மீனாகக் கருதப்படுகிறது. இந்த வளர்ப்பு மீன்களுக்கான தொட்டியை தென்கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு திசையிலோதான் வைக்க வேண்டுமென்பது விதியாகும்.
வீட்டிலோ அல்லது அலுவலகத்திலிலோ எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும்போதும், திருஷ்டி ஏற்படும்போதும் அவை நேரடியாக முதலில் சம்பந்தப்பட்ட மனிதர்களைத் தாக்காமல் வீட்டிலுள்ள மீன்களையே தாக்குமென்பதால் தங்கள் உயிரை எஜமானருக்காக கொடுத்து இவை காப்பாற்றுவதாகவும் பெங்சூய் சாஸ்திரம் குறிப்பிடுகிறது'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.