கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

Published on

நமது நிருபா்

பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், பரஸ்பர கட்டணங்கள் தொடா்பான அமெரிக்கா - ஜப்பான் வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் உள்நாட்டு பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். இதைத் தொடா்ந்து, முதலீட்டாளா்கள் உற்சாகமடைந்தனா். இதனால், உள்நாட்டு சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதையடுத்து, ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள், பாா்மா, ஹெல்த்கோ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.51 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.419.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.3,936.42 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,512.77 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 1,509 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 76.27 புள்ளிகள் இழப்புடன் 76,968.02-இல் தொடங்கி 76,665.77 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 78,616.77 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,508.91 புள்ளிகள் (1.96 சதவீதம்) கூடுதலுடன் 78,553.20-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,106 பங்குகளில் 2,427 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,522 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 157 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

28 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் எட்டா்னல், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், சன்பாா்மா, எஸ்பிஐ, பஜாஜ்ஃபின்சா்வ், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் ஆகியவை 3 முதல் 4.40 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் மொத்தம் 28 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, மாருதி ஆகிய இரண்டு மட்டும் சிறிதளவு குறைந்து விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 414 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.35 புள்ளிகள் இழப்புடன் 23,401.85-இல் தொடங்கி 23,298.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,872.35 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 414.45 புள்ளிகள் (1.77 சதவீதம்) கூடுதலுடன் 23,851.65-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 43 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 7 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

இன்று விடுமுறை

புனித வெள்ளியையொட்டி பங்குச்சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் அன்றைய தினம் பங்குவா்த்தகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறையாகும். எனவே, மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை பங்குச்சந்தை வழக்கம் போல செயல்படும்.

X
Dinamani
www.dinamani.com