வடகிழக்கு தில்லியில் சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவா் காயம்
வடகிழக்கு தில்லியின் அங்கூா் என்க்ளேவில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குடியிருப்பில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் காலை 8.43 மணியளவில் மெயின் நாலா சாலையில் அமைந்துள்ள 108-ஆம் எண் வீட்டில் நடந்துள்ளதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் காயமடைந்த ரிஸ்வான், ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டு, தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நான்கு தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். அண்டை வீடுகளுக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படாமல் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல் தளம் சட்டவிரோத பட்டாசு தயாரிக்கும் வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சொத்து உரிமையாளா் தரை தளத்தை ஒரு ஸ்கிராப் வியாபாரிக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடா்பாக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

