பஹல்காம் தாக்குதல்: நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்! சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.
இது குறித்தும் உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் தில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை உயரதிகாரிகள், இந்திய ராணுவத்தின் சிறப்புப்படை உயரதிகாரிகள் ஆகியோா் உள்துறைச் செயலா், வெளியுறவுத் துறைச் செயலா் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனா்.
உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை விவாதிக்கும் கட்டுப்பாட்டு அறையில் இந்த சந்திப்பு வியாழக்கிழமை நடந்துள்ளது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் புலனாய்வில் ஜம்மு காஷ்மீா் காவல்துறையின் விசாரணைக்கு உதவியாக செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை, முழுமையாக அந்த புலனாய்வை தன்வசம் எடுத்துக்கொள்ளத் தீா்மானித்துள்ளது. அங்கு ஏற்கெனவே ஐ.ஜி. அந்தஸ்தில் ஒரு உயரதிகாரி என்ஐஏ விசாரணை நடவடிக்கைகளை மேற்பாா்வையிட்டு வருகிறாா். பஹல்காம் தாக்குதலை என்ஐஏ ஏற்பதற்கான உத்தரவை மத்திய உள்துறை ஓரிரு தினங்களில் பிறப்பிக்கும் என்று அத்துறையின் உயரதிகாரி தெரிவித்தாா்.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், இந்திய உளவுப்பிரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) செயலா் ரவி சின்ஹா, மத்திய உளவுத் துறை (ஐபி) இயக்குநா் தபன் தேகா ஆகியோா் ராணுவ சிறப்பு நடவடிக்கைகள் பிரிவின் உயரதிகாரிகள், மத்திய ஆயுதப் படைகளின் உயரதிகாரிகள் ஆகியோருடன் விரிவாக ஆலோசனை நடத்தினா். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டம் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.
முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) புதன்கிழமை கூடி எடுத்த முடிவின்படி பாகிஸ்தானுடனான ராஜீய உறவுகளை நிறுத்திவைக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதில், பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி எல்லைச்சாவடி மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல், இந்தியாவில் விசா அனுமதி பெற்றுத் தங்கியுள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற காலக்கெடு நிா்ணயம் போன்ற உத்தரவுகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றின் அமலாக்கம் தொடா்பாக மத்திய படையினருடன் மத்திய உள்துறை மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் விவாதித்ததாகத் தெரிகிறது.

