'திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!'

பஞ்சபூதத் தலங்களுள் பூமிக்குரியத் தலமாகவும், மூலாதாரத் தலமாகவும், முக்தியளிக்கக்கூடிய தலமாகவும் விளங்குவது திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலாகும். சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே
'திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!'
Updated on
2 min read

பஞ்சபூதத் தலங்களுள் பூமிக்குரியத் தலமாகவும், மூலாதாரத் தலமாகவும், முக்தியளிக்கக்கூடிய தலமாகவும் விளங்குவது திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலாகும்.

சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும், பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். நளனும், சனீஸ்வர பகவானும் வழிபட்ட பெருமையைக் கொண்ட திருவாரூர், சர்வ தோஷ பரிகாரத் தலமாகும்.

எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்கி வென்றவர் தசரத மகாராஜா. அந்தக் கதையை இங்கு பார்ப்போம்.

தசரத மகாராஜாவிற்கு சனி தசை ஆரம்பிக்கின்ற வேளை.... அப்போது மன்னரின் குலகுருவான வசிஷ்டர் அவரிடம், "உங்களின் குலதெய்வம் சிவபெருமான் உள்ள திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபட்டால் உங்களை சனி நெருங்கமாட்டார்' என்றார். அவ்வாறே தசரத மகாராஜாவும், திருவாரூர் வந்து கமலாலயத் திருக்குளத்தில் நீராடினார்; ஆரூர் சிவபெருமானை வழிபட்டார். அப்போது சனிபகவான், தசரத மகாராஜாவைப் பற்ற வந்தார்.

சிவபெருமானை வணங்கியதால் ஏற்பட்ட துணிவினால் சனி பகவானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் தசரதர். தன்னுடைய வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைக் கண்ட சனி பகவானும் தசரதனிடம், "என்ன வரம் கேட்டாலும் தருகிறேன்... கேள்!' என்றார். உடனே தசரதர், "சனீஸ்வரனே! நீ உனது கடமையைச் செவ்வனே செய்கின்றாய். உலக உயிர்களுக்கு, சுக துக்கங்களின் வேறுபாட்டை உணர்த்தும் வகையிலே நீ செயல்படுகின்றாய். ஆனாலும் நீ அவர்களைப் பற்றுகின்ற காலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அண்ட சராசரங்களையும் படைத்து, காத்து, இறுதியில் சம்ஹாரமும் செய்யும் முழுமுதற் கடவுள் திருவாரூரிலே வீற்றிருக்கும் சிவபெருமான். அவரை "தஞ்சம்' என்று சரணடைந்த பின்னாலே என்னை நீ துன்புறுத்த விரும்பினாய். அதனால்தான் உன்னோடு நான் போரிட்டேன்; சிவனருளால் வென்றேன்.

எனவே, திருவாரூர் வந்து, கமலாலயத்தில் நீராடி, தியாகேசப் பெருமானையும் உன்னையும் எவர் ஒருவர் வணங்கினாலும் அவர்களுக்கு நீ நல்லதே செய்ய வேண்டும்; தீங்கு செய்யக்கூடாது' என்று கேட்டார். சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருவோரை தன்னுடைய கண்ட சனி, பாத சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி என்று எந்தக் காலமானாலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார். அதனால்தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச் சக்ரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்; "தன்னை இனியும் நவக்கிரகங்கள் துன்பப்படுத்தக்கூடாது' என வேண்டிக் கொண்டார். இதையொட்டிதான், "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!' என்னும் பழமொழி சொல்லப்பட்டு வருகின்றது.

அசுரர்களில் இரணியனுக்கு நிகரானவன் சதயகுப்தன் என்னும் அசுரனாவான். இவனுக்குப் பிரம்மா, "மனிதர்கள், தேவர்கள், விலங்குகள் இப்படி யாராலும் அழிக்க முடியாத வர'த்தைக் கொடுத்தார். வரம் வாங்கிய சதயகுப்தனோ "தன்னை வெல்வதற்கு யாரும் இல்லை' என்னும் செருக்கில் அனைவரையும் துன்புறுத்தலானான். அப்போது அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், "மன்னனே! உனக்கு இவர்களால் எல்லாம் அழிவில்லை. ஆனால் நவக்கிரகங்களின் பிடியிலிருந்து நீ தப்ப முடியுமா?' என்று கூறினார். உடனே சதயகுப்தனும் நவக்கிரகங்களை அழிக்க நினைத்து அவர்களின் மீது போர் தொடுத்தான். அந்தப் போரில் தோற்ற நவக்கிரகங்கள், திருவாரூர் சென்று தியாகராஜரை சரணடைந்தனர். அப்போது சிவபெருமான் நவக்கிரகங்களிடம், திருவாரூருக்கு வருவோருக்கு நல்லதே செய்துத் தருவதாக உறுதியளித்தால் அவர்கள் இழந்த பதவியை மீட்டுத் தருவதாகக் கூறினார். அதற்கு நவக்கிரகங்களும் சம்மதம் தெரிவிக்கவே, தியாகராஜர் சதயகுப்தனை வென்று நவக்கிரகங்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். அதனால்தான் நவக்கிரகங்கள் இங்கே சிவனை ஒரே வரிசையில் நின்று வணங்குகின்றனர்.

திருவாரூரிலே நவக்கிரகங்கள் சிவபெருமானுக்கு (தியாகேசப் பெருமானுக்கு) கட்டுப்பட்டு அனுக்ரஹ மூர்த்திகளாக இருப்பதனால் இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு நற்பலன்களையே தருவர்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி, வரும் 26.09.09 சனிக்கிழமையன்று பிற்பகல் 3.27 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.

இதை முன்னிட்டு சனி ப்ரீதி ஹோமம், சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள் இன்றும் (செப்.25), நாளையும் (செப்.26) இக்கோயிலில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்-04366 242343, செல் 94885 21115 எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

தகவல், பட உதவி :

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com