திருவையாற்றில் அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா

ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணா மலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால்
திருவையாற்றில் அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா
Updated on
3 min read

ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணா மலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு. காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.

தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. "சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல, விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார். ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.

திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வட கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம், மாளவம், இலாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய பகுதிகளைக் கடந்து கங்கைக் கரையில் உள்ள வாரணாசியை அடைந்தார். அதன்பின் மனிதர்களால் எளிதில் போக முடியாத வழிகளில் கயிலை மலையை நோக்கி நடந்து சென்றார் திருநாவுக்கரசர். வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சில சமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர்.

ஒரு நிலையில் அவரின் பாத தசைகள் தோய்ந்து போயின. மணிக்கட்டுகள் மறுத்துப் போயின. அப்போதும் இறைவன் மீது கொண்ட பக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார்.

அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார். "இம்மானிட வடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது'' என்றார். ஆனால் அப்பர் பெருமானோ, "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட இறைவன், "ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு! இதோ இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க'' என்று அருளிச் செய்து மறைந்தார். அங்கு உடனே தடம்புனல் ஒன்று நாவரசர் முன் தோன்றிற்று. அதில் மூழ்கிய அவர் திருவையாற்றில் கோயிலுக்கு வட மேற்கே சமுத்திர தீர்த்தம் என்றும், உப்பங்கோட்டை பிள்ளை கோயில் குளம் என்றும் வழங்கும் அப்பர்குட்டை திருக்குளத்தின் மீது உலகெல்லாம் வியக்குமாறு எழுந்தார். திருக்கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்தார். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட நாவரசர் தேனொழுகும் திருப்பதிகங்களும், தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன யாவும் சிவமும், சக்தியுமாய் காட்சி தருவதை வியந்தவர்,

“மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்”

என்று பாடி சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்து இன்புற்றார். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என்று தான் கண்ட காட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம் காண்பிக்கிறார். அப்பர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டிற்கும் உள்ளத்தின் உறுதிப்பாட்டிற்கும் அடிமைத் திறத்திற்கும் உவந்து திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்தது.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா பல ஆண்டுகளாக பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18-ம் நாள் (02-08-2016) செவ்வாய்க்கிழமை அன்று அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவபூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதியன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர்ப்பிறைக்கண்ணி யானை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.

திருவையாற்றுக்கு உரிய சிறப்பு ஆடி அமாவாசை அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா, "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும். திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் முழுமையாக கிடைக்கும்.

திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சிக் காண திருவையாறு சிவ சேவா சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. அனைவரும் வருக எம்பெருமானின் திருவருளைப் பெருக.

தொடர்புக்கு: திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை ந. செல்வம், +91 9976253220, சி. ராஜ்குமார் +91 9444885679

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com