

கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல் வல்வில் ஓரி, நாட்டிலுள்ள கோயில்களை ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று காவிரி நீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்யும் வழக்கமுள்ளவன். ஓர் ஆடிப்பெருக்கன்று காவிரி நீராட்டம் தடைபட்டது. அதனை மாசிமகத்தன்று செய்ய முடிவு செய்தான்.
காவிரியில் தீர்த்தம் எடுக்க படை பரிவாரங்களுடன் சென்று இரவில் தங்கினான். அவனைக் காணவந்த பூர்வகுடிகளிடம் இப்பகுதிக்கு என்ன பெயர் எனக்கேட்டான். அவர்கள் இப்பகுதிக்கு பெயர் எதுவும் கிடையாது. இன்றைக்கு நீங்கள் இங்கு வந்து தங்கியதால் உங்கள் வருகையால் "ஓரி வந்த ஊர்' என வழங்கப் போகிறோம் என்றார். அவ்வூரே இன்று மருவி "ஒருவந்தூர்' எனப்படுகிறது.
ஓரி தங்கிய இடத்திற்கு எதிரே ஓர் உப்புத் திட்டில் உப்பாண்டி, உய்யாண்டி, உக்காண்டி என்னும் மூவர் உப்பு மண்ணை எடுத்து காய்ச்சி உப்பை பிரிக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். காவிரிக்கு பூஜை செய்து குடங்களில் நீர் முகந்து திரும்பும் போது வானில் இருந்து ஒருபொன்மயமான பந்து சுழன்று பறந்து வந்தது. அனைவரும் பார்க்கும் போதே, அப்பந்து உப்புக் காய்ச்சிக் கொண்டிருந்தவர்களிடையே விழுந்தது. அவர்கள் வேலை மும்மரத்தில் அதனை ஒரு கலையத்தில் போட்டு மூடிவிட்டு பணியைத் தொடர்ந்தனர்.
அனைவரும் பொன் பந்து விழுந்த உப்புத்திட்டுக்கு வந்து விசாரித்தனர். அப்போது ஒரு சுட்டித்தனம் கொண்ட கன்னிப்பெண் வந்து அது தன்னுடையது தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்டாள். உப்பாண்டி பந்தை கலையத்தினுள் தேட, அது ஓட்டையாகி பூமிக்குள் சென்றிருந்தது. அந்தப்பந்தை எடுக்க முயன்றும் பந்து மேலும் மேலும் பூமிக்குள் சென்று கொண்டிருந்தது. பந்தை வெளியில் எடுப்பதற்காக பந்து போன பொந்தில் காவிரியில் இருந்து பூஜை செய்து கொண்டுவந்த தண்ணீரை முழுவதுமாக உள்ளே ஊற்றினர். அப்படியும் பந்து வெளியே வராததால் அவ்விடத்தைத் தோண்டத் தொடங்கினர். அப்போதுதான் அதிஅற்புதமான அம்மனின் தெய்வச்சிலை வெளியே வந்தது.
உடனே, அவ்விடத்திலேயே நான்கு கால்கள் நடப்பட்டு நெட்டுக் கோல் போட்டு இலை தழைகளால் பந்தல் போடப்பட்டு, தூபம் தீபம் காட்டி வழிபாடு துவங்கியது.
மதுக்கரைச் செல்லியம்மன் அவளின் இரு தங்கைகள் ஆக மூவரும் பந்தாடுவது எனவும் யார் பந்து எங்கு விழுகிறதோ, அங்கே சென்று அருளாட்சி நடத்துவது என முடிவு செய்தனர். மூவரும் ஒரு சேர பந்து வீசினர். மூத்தவள் பந்து ஒருவத்தூரிலும், இளையவள் பந்து பரந்தாடியிலும், காளியின் பந்து தொட்டியத்திலும் வீழ்ந்தது. மூத்தவள் பந்து ஒருவத்தூரில் விழுந்த நாள் மாசி மக நாளாகும். அன்றிலிருந்து அங்கே கோயிலும் பூஜையும் துவங்கியது. உப்பாண்டி உய்யாண்டி உக்காண்டி ஆகியோரிடம் பூஜையும் நிர்வாகமும் செய்யும் உரிமையைத் தந்து விட்டு தனது கொல்லிமலை சென்று நெடுநாள் ஆண்டான்.
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன்ஆலயம் மிகவும் பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் உடையது. பல இனத்தவரும் வந்து வழிபடக் கூடிய உயரிய திருத்தலங்களில் இக்கோயில் ஒன்றாகும். சிவமும் சக்தியும் இணைந்த உருவே ஒருவந்தூர் செல்லாண்டி அம்மன் ஆகும்.
கருவறையில் பிடாரி செல்லாண்டியம்மன் 8 கைகளுடன் அமர்ந்த கோலத்தில் இடப்புறம் உடுக்கை, சூலாயுதம், வாள் வரத ஹஸ்தத்துடனும் வலப்புறம் அபயம், கேடயம், மணி, கபாலச்சிமிழுடனும் திருப்பாதத்தின் கீழ் மஹிஷாசுரனை மிதித்த கோலத்தில் அருளுகிறாள்.
மாசிமகத்தில் சுயம்பு அம்மனாய் கோயில் கொண்ட ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயிலில் அருள்மிகு பிடாரி செல்லாண்டி அம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி, மதுரை வீரசாமி, பேச்சி அம்மன், சடைச்சி அம்மன், கன்னிமார்சாமி, பட்டவன்கள் ஆகிய தெய்வங்கள் அமைந்து அருள்கின்றனர். குதிரை செய்து வைத்து வழிபடும் வழக்கமும் இங்குள்ளது.
இப்பகுதியில் பிறக்கும் அனைத்து தலைச்சன் குழந்தைக்கும் "செல்ல' என்ற ஒட்டுப்பெயர் சேர்த்து பெயர் வைக்கின்றனர். திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாலையும் கழுத்துமாக வந்து அம்மனை வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் உப்பு மண்ணையே பிரசாத விபூதியாகப் பெற்றுச் செல்கின்றனர்.
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு முக்கியமான நாள்கள். இதைத்தவிர, அமாவாசை, பெளர்ணமி நாள்களும் முக்கியமாவை. புரட்டாசி மாதம் நவராத்திரித் திருவிழா, விஜய தசமியன்று சின்னத்தேரில் அம்பாள் ஊர் புறப்பாடு, மார்கழி வேல் திருவிழா 13 நாள்களுக்கு நடைபெறும். அவதார தினமான மாசி மகத்தினை ஒட்டி 15 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அம்பாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று 1008 பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும்.
ஒருவரம் கேட்டால் பலவரம் கொடுப்பாள் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் என இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோயில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மோகனூரில் இருந்து நிறைய பேருந்துகள் செல்லுகின்றன.
தொடர்புக்கு: 78670 31125 / 96775 00586.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.