நீத்தார் கடனை நேர்த்தியாகச் செய்யாதவர்கள் பிற பூஜைகள் செய்து என்ன பலன்?

பெறுவதற்கரிய மானுடப் பிறவி எடுத்த நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளாக தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பசுயக்ஞம் முதலியன சொல்லப்பட்டுள்ளது.
நீத்தார் கடனை நேர்த்தியாகச் செய்யாதவர்கள் பிற பூஜைகள் செய்து என்ன பலன்?
Updated on
2 min read

பெறுவதற்கரிய மானுடப் பிறவி எடுத்த நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளாக தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பசுயக்ஞம் முதலியன சொல்லப்பட்டுள்ளது. இதில் கோயிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது போன்றவை தேவ யக்ஞம் எனப்படும். தாய் தந்தையர்களின் சொற்படி நடந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்கள் இறந்த பின் அவர்களுக்கும், அவர்கள் மூதாதையர்களுக்கும் செய்யப்படும் பூஜை, சடங்குகள் பித்ருயக்ஞம் எனப்படுகிறது. பசு மிருகாதிகளுக்கு செய்யப்படும் பூஜைகள், பராமரிப்புகள் பசுயக்ஞம் என்று வகுக்கப்பட்டு சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அதிலும் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் ஒழுங்காகச் செய்யாவிடில் பிற பூஜைகள் செய்தும் பெரும் பயன் அளிக்காது என்பது சான்றோர்களின் ஆணித்தரமான வாக்கு. 

வள்ளுவப்பெருந்தகையும் இதனை தென்புலத்தார் வழிபாடு என இல்வாழ்வானின் கடமையாக முதன்மைப்படுத்தி குறளில் கூறியுள்ளார். ஆகையால் நாம் பித்ருக்களுக்கு சிரத்தையுடன் சிரார்த்தம் (திவசம்), தர்ப்பணம் (எள்ளும், தண்ணீரும் இறைத்தல்) முதலியன செய்ய வேண்டியது மிக மிக அவசியம் என தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. இதனால் பித்ருக்களுக்கு மறுமையில் நல்வாழ்வும், நமக்கு சந்ததியும், செல்வமும் உண்டாவது திண்ணம். மேலும் தேவர்கள், பித்ருக்கள், பந்து மித்ரர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை ஆற்றுவதே 'க்ருஹஸ்தாஸ்ரமத்தின்' முக்கிய நோக்கம் என்று சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

கர்மவசத்தால் நீத்தார் கடனை நேர்த்தியாக செய்ய முடியாததால் பித்ருக்கள் தங்கள் லோகத்தை அடையாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களின் ஆசிகள் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டு நாமும் இப்பூலகவாழ்வில் பல இன்னல்களை அனுபவித்து தவிக்கின்றோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அவ்வாறு கர்மாவை விட்டோர் மனம் திருந்தி தவறை உணர்ந்து இறைவனிடம் முறையிட்டு, நமது வாழ்வை நல்வழி செலுத்தும் முகமாக பரிகாரம் தேடிக்கொள்ள ஏதுவாக நமது பாரத புண்ணிய பூமியில் சில தலங்கள் அறியப்படுகின்றது. 

அவற்றுள் ஒன்றுதான் "தெள்ளார்'. இது ஒரு பித்ருக்கள் சாப நிவர்த்தி தலமாக பாவிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் ஸ்படிகம் போன்று தெளிந்த நீரோட்டத்துடன் கூடிய ஆற்றின் கரையில் உள்ள ஊராக அமைந்ததால் "தெள்ளார்' என அழைக்கப்பட்டு வந்துள்ளது  என செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. காஞ்சி வரதரின் அபிமான ஸ்தலமாகும். இத்தலத்தில் உள்ள ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் சந்நிதியில் பெருமாளிடம் முறையிட்டு அவருக்கு திருமஞ்சனம் செய்வித்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பித்ருக்களுக்கு பெரிதும் உகந்த எள்ளால் ஆன எள்ளோதரையும் மற்றும் தத்யோன்னம் (தயிர்சாதம்) கண்டருள பண்ணி அவரவர் தங்கள் பித்ருக்களை மனதால் தியானித்து பிரசாதத்தை மானசீக நெய்வேத்ய பூஜை செய்து தானும் தன் பங்காளி வர்க்கத்துக்கும் கொடுத்து, ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் செய்வித்து, ஸ்ரீ பெருமாளின் திருவடியை மனம் உருக பிரார்த்திக்க வேண்டும். 

அவ்வகையில் பித்ருக்கள் பித்ருலோகத்தை அடையச் செய்து நமக்கு அவர்கள் பரிபூர்ண ஆசிகள் கிடைப்பதற்கும், எந்தவித கஷ்டமும் இல்லாமல் தெளிவான வாழ்க்கை அனுபவிக்கவும் அருளுகின்றார் இத்தல பெருமாள் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை.  

ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் ஆலயம், திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி வட்டத்தில் உள்ள தெள்ளார் கிராமத்தில் உள்ளது. 

ஒரு திருமால் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்ற ஆலயம்.   ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி மற்றும், யோக நரசிம்மருடன் கூடிய சுதர்ஸன ஆழ்வார் சந்நிதிகளும் வழிபாட்டில் உள்ளன. 

மூலவர் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்கும் அலங்காரத்துடன் சாளக்கிராம மாலை அணிந்துகொண்டு சங்கு சக்ரதாரியாய் அபயகடிஹஸ்தத்துடன் ஸ்ரீ விஷ்ணுஸ்வரூப பெருமாளுக்கெல்லாம் "பாட்டனார்' என்ற வாக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அதிரூப சௌந்த்ரியத்துடன்  காட்சி தரும் அற்புதமான சேவை கண்களுக்கு மாபெரும் விருந்து.  

பல்லவர்கள் காலத்து நந்திவர்மனால் புதுப்பிக்கப்பட்ட பெருமை உடைய இவ்வாலயத்தில் ஆண்டு முழுவதும் எல்லா விசேஷ தினங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றன. எனினும் பித்ரு தினங்களான அமாவாசை மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த காலங்களில், தமிழ் மாத பிறப்பு, உத்திராயன, தட்சிணாயன புண்ணிய காலங்கள், புரட்டாசி மாளய பட்ச தினங்களில் எம்பெருமானுக்கு ப்ரத்யேக திருமஞ்சனம் சகஸ்ரநாம அர்ச்சனை, மற்றும் தளிகை செய்விக்கப்படுகின்றன. பங்கேற்று பயன் பெறுவது நமது கொடுப்பினையே!

வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் வந்தவாசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது தெள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம், கன்னியாகுமாரி செல்லும் அனைத்து பேருந்துகளும் தெள்ளார் வழியாகத்தான் செல்லும்.  

தொடர்புக்கு:  சுந்தரராஜ
பட்டாச்சாரியர் - 99769 49938.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com