3. நாமார்க்கும் குடியல்லோம்
(பொது – திருத்தாண்டகம்)
பின்னணி
கடந்த சில நாட்களாக, கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினை சிந்தித்த நாம், அதற்கு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளையும், அந்த நிகழ்ச்சிகளின் விளைவாக அப்பர் பிரான் அருளிய பதிகத்தையும் இப்போது சிந்திக்கலாம். கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடி சிவபெருமானை வணங்கிய மருள் நீக்கியாருக்கு எவ்வாறு சூலை நோய் தீர்ந்தது என்பதையும், அவருக்கு இறைவன் நாவுக்கரசு என்று பெயர் சூட்டியதையும் நாம் அறிந்தோம்.
கடுமையான சூலை நோயால் வருந்திய தருமசேனர், தங்களால் அந்த நோயினை தீர்ப்பதற்கு ஏதும் செய்ய இயலாத நிலையில், அவர் சமண மடத்தை விட்டு நீங்கி திருவதிகை சென்று அங்கே சிவபிரானை வழிபட்டு தனது சூலை நோயினைத் தீர்த்துக்கொண்டார் என்ற செய்தியை பாடலிபுத்திரத்தில் (இன்றைய கடலூரின் ஒரு பகுதி பாடலிபுத்திரம் என்று அந்நாளில் அழைக்கப்பட்டது) இருந்த சமணர்கள் அறிந்தனர். தங்களுக்கு குருவாக விளங்கி, பிற மதத்தவர்களுடன் வாதம் செய்து அவர்களை வாதத்தில் வென்ற தருமசேனர், சைவராக மாறிவிட்டார் என்ற செய்தி தங்கள் மதத்தின் மதிப்பினை மிகவும் குறைத்திடும் என்று அவர்கள் உணர்ந்தனர்.
மேலும் மன்னன் உண்மை நிலையினை அறிந்தால் அவனும் சைவ மதத்திற்கு மாறிவிடுவான்; அதனால் தங்களது செல்வாக்கு மேலும் குறைந்துவிடும் என்றும் அஞ்சினார்கள். எனவே மன்னன் உண்மை நிலையினை அறியும் முன்னர் தாங்களே மன்னனிடம் சென்று நடந்ததை திரித்து, தருமசேனர் மேல் பழியினை சுமத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். தவ்வை = தமக்கை. எவ்வை = கபடம். லங்கனம் = விடுத்தல்
தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம்
பொய் வகுத்ததோர் சூலை தீர்ந்திலது எனப் போயிங்கு
எவ்வமாக அங்கு எய்தி நம் சமய லங்கனமும்
தெய்வ நிந்தனையும் செய்தனர் எனச்சொலச் தெளிந்தார்
சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த தனது தமக்கையாருடன் கூடுவதற்காக, தான் பொய்யாக உருவாக்கிக்கொண்ட சூலை நோய் தீரவில்லை என்ற நாடகம் நடத்தி, சூலை நோய் சமண சமய மருத்துவர்களால் தீர்க்கப்படவில்லை என்று சமண சமயத்திற்கு ஒரு இழுக்கினை ஏற்படுத்தி, சமணசமய குருமார்களுக்கான விதிகளை மீறியதும் அல்லாமல், சமண சமயத்தை மிகவும் இழிவாகவும் தருமசேனர் பேசினார், என்று மன்னனிடம் முறையிடுவது என்று தீர்மானித்தார்கள். இந்த பாடல், தங்களுக்கு விருப்பமான சமயத்தைச் சார்வதற்கு மக்களுக்கு பூரணமான உரிமை இருந்த போதிலும், அடுத்த சமயத்து கடவுளர்களையும் அடுத்த சமயங்களையும் இழித்துப் பேசுவது பெரிய குற்றமாக பண்டைய நாட்களில் கருதப்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. கபடமாக சூலை நோய் வந்ததாக தருமசேனர் நாடகம் ஆடியாதால், தங்களது மணி மந்திர மருந்துகள் பலிக்கவில்லை என்று திரித்துக் கூறுவதன் மூலம், சமணர்கள் சூலை நோய் தீர்க்கப் படாதது தங்களது மதத்திற்கு எந்த விதத்திலும் இகழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று மன்னனுக்கு உணர்த்த சமணகுருமார்கள் முயற்சி செய்தது இந்த பெரியபுராணப் பாடலில் வெளிப்படுகின்றது.
மன்னனைக் கண்டவுடன், சமண குருமார்கள், நமது தலைவராகிய தருமசேனர், சூலை நோய் தன்னை வருத்தியதாக பொய் சொல்லி, உனது சமயத்தினை விட்டு நீங்கினார் என்று கூறினார்கள். தங்களது சமயம் என்றோ, பொதுவாக சமண சமயம் என்றோ கூறாமல், உனது சமயம் என்று சுட்டிக் காட்டிய தன்மை, சமணர்களின் வஞ்சகத்தை வெளிப்படுத்துகின்றது. தருமசேனர் மதம் மாறியது சமணர்களை பாதித்தது என்பதை உணர்த்தும் வண்ணம், நடைப் பிணங்கள் என்று சமண குருமார்களை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நடையாடும் தொழில் உடையார் என்றால் நடைப் பிணங்கள் என்று பொருள். உடையார்=தலைவர், ஆசிரியர். உடையார் என்று குறிப்பிடுவதன் மூலம் சேக்கிழார், பின்னாளில் சைவ சமயத் தலைவராக நாவுக்கரசர் விளங்க இருப்பதை முன் கூட்டியே உணர்த்தும் நயத்தை நாம் உணரலாம்.
கடை காவல் உடையார்கள் புகுதவிடக் காவலன் பால்
நடையாடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையாராகிய தருமசேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் அழித்தார் என்றார்
இவர்களின் முறையீட்டைக் கேட்ட மன்னன் மிகவும் வெகுண்டு, பொய்யான சூலை நோயினை காரணம் காட்டி, நமது சமயத்தை விட்டு தருமசேனர் நீங்கியதற்கு என்ன செய்யலாம் என்று அந்த குருமார்களிடம் வினவினான். தருமசேனரை அழைத்து அவருக்கு தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். மன்னரும் உடனே தனது மந்திரிகளை அழைத்து, தீயவனான தருமசேனரை அழைத்து வருமாறு உத்திரவிட்டான். பொருள் ஏதும் பெற்றுக்கொண்டு தருமசேனரை விட்டுவிடாமல், அவருக்கு தண்டனை அளிப்பதற்காக அவரை தவறாமல் அழைத்து வர வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுத்தான். இதனை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பல்லவ மன்னன் இரக்கம் இல்லாத உணர்வோடும் சமண மதத்தின் மீது கொண்ட மயக்கத்தால் நெறி தவறியதாகவும் சேக்கிழார் இங்கே கூறுகின்றார். தெருள் = தெளிந்த அறிவு. மன்னன் சமண குருக்களை தெளிந்த அறிவு கொண்டவராக கருதியதும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தான் எடுக்க வேண்டிய முடிவுகளுக்கும் அவர்களிடம் ஆலோசனை கேட்டதன் காரணம் இங்கே அழகாக கூறப்பட்டுள்ளது.
அருள் கொண்ட உணர்வின்றி நெறி கோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என்பால் கொடுவாரும் எனப் புகன்றான்
காவலாளர்களுடன் சென்ற மந்திரிகள் திருவதிகை சென்றடைந்து, திருநாவுக்கரசர் என்று சிவபிரானால் பெயர் சூட்டப்பட்ட தருமசேனரை அணுகி, மன்னன் அவரை அழைத்ததை உணர்த்தி, வாருங்கள் நாம் அனைவரும் மன்னனிடம் செல்லலாம் என்று அவரிடம் கூறினார்கள். சேனை வீரர்களுடன் சென்ற அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு, மன்னவன் தருமசேனர் வர மறுத்தால் அவரை சிறைப் பிடித்து வர கட்டளை பிறப்பித்து இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. தன்னை அணுகிய அமைச்சர்களை நோக்கி நாவுக்கரசர், உமது மன்னனின் ஆணையினைக் கேட்டு அதன் வழியே உமது மன்னனைச் சாரும் நிலையில் தான் இல்லை என்று விடை அளித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.
நாமார்க்கும் குடி அல்லோம் என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
யாமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார்
தே என்றால் தெய்வத் தன்மை வாய்ந்தது என்று பொருள். மாலை என்பது இங்கே இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல்மாலை. தேமாலை என்று குறிப்பிடுவதன் மூலம் தெய்வத் தன்மை வாய்ந்த பாடல்கள் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. தேவாரம் என்பதன் பொருளும் அதுதானே.
மன்னனின் கட்டளை தனக்குப் பொருந்தாது வீரமொழி பேசிய நாவுக்கரசர், அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறிய பாரதி உட்பட பல புலவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. சூலை நோய் தன்னை கூற்றுவன்போல் வருத்துகின்றது என்று தனது முதல் பதிகத்தில் வேதனையுடன் புலம்பியவரின் மனநிலையில் எத்தைகைய மாற்றத்தை சிவபெருமானின் கருணை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சி.
துறவியான தனக்கு பல்லவ மன்னனின் கட்டளை பொருந்தாது என்று விளக்கிய திருநாவுக்கரசர் அருளிய பதிகம்தான் இந்த பதிகம். அரசனின் கட்டளைக்கு பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று விடை கூறிய பதிகம் என்பதால் இந்தப் பதிகம் மறுமாற்றுத் தாண்டகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பதிகம் தான் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகம். சிவபெருமானின் அருளால் சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர், நாவுக்கரசரின் தன்னம்பிக்கை, எந்த அளவுக்கு உயர்ந்து வளர்ந்தது என்பதை இந்த பதிகம் உணர்த்துகின்றது.
இந்தப் பதிகம் திருத்தாண்டகம் என்ற வகையினைச் சார்ந்தது. ஆறாம் திருமுறையில் உள்ள அனைத்துப் பாடல்களூம் திருத் தாண்டகம் என்ற வகையினைச் சார்ந்தவை. பாடலின் ஒவ்வொரு அடியிலும் ஆறு அல்லது எட்டு சீர்களைக் கொண்ட தாண்டக வகைப் பாடல்களை, முதலில் பாடிய நாவுக்கரசர் தாண்டக வேந்தர் என்று சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டு பெரிய புராணத்தின் பல இடங்களில் அழைக்கப் படுகின்றார். இவரைப் பின்பற்றி திருமங்கை ஆழ்வாரும் குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்று இரண்டு பாசுரங்களை அருளியுள்ளார்.
பாடல் 1
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே

விளக்கம்

நடலை = பொய்

ஏமாப்பு = மகிழ்வுடன் இருத்தல்

குறுகுதல் = அடைதல்

கோமான் = அரசர்க்கு அரசன்.

சிவபிரானுக்கு அடிமையாகத் தன்னை கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அறிவித்துக்கொண்ட திருநாவுக்கரசர், சிவபிரானுக்கு ஆட்பட்ட காரணத்தால் வேறு எவருக்கும் ஆட்படமாட்டோம், வேறு எவர்க்கும் குடியல்லோம் என்று இங்கே கூறுகின்றார். நியாயம் இல்லாத அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர் பெருமான் திகழ்வதை நாம் இங்கே காணலாம். இயமனுக்கே அஞ்சமாட்டோம் என்று கூறுவதன் மூலம் அரசன் எம்மாத்திரம் என்று முழங்குவதையும் நாம் உணரலாம். அரசனை தெய்வமாக மதித்த காலம் என்பதால் அரசனின் ஆணைக்கு கட்டுபடாதவர்க்கு நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. சிவபிரானின் அருளைப் பெற்றதால் தனக்கு அந்த விதிமுறை செல்லாது என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகின்றார்.

சிவபெருமான் தன்னை ஆட்கொண்ட காரணத்தால் தான் எவர்க்கும் குடி அல்லோம் என்றும் யாதும் அஞ்சோம் என்று மணிவாசகரும் திருவாசகத்தில் (திருச்சதகம் முப்பதாவது பாடல்) கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது.

தேவர்கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் எந்தை
மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் வந்து என்னையும் ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியாரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே

இந்தப் பாடலில் அப்பர் பிரான் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று கூறுகின்றார். சிவபிரானுக்கு அடிமையாக அவர் மாறிய பின்னர், அவருக்கு மற்றவர் இழைத்த துன்பங்களும் இன்பங்களாக மாறியதை நாம் அவர் வாழ்வில் காணலாம் சங்கரன் என்றால் இன்பம் அளிப்பவன் என்று பொருள். அதாவது இன்பமே உருவாக உடையவன் என்று பொருள். சங்கரனை வணங்கிய தானும், அவனருளால் அவனது நிலையினை அடைந்த தன்மையினை இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் என்று சிவபெருமானை குறிக்கும் அப்பர் பிரான் சிவபிரானுக்குத் தலைவர் எவரும் இல்லை என்பதை உணர்த்துகின்றார். அதனால் எவரையும் வணங்க வேண்டிய அவசியம் சிவபிரானுக்கு இல்லை. இதனையே சேர்ந்தறியாக் கையான் என்று மணிவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார் (திருவெம்பாவை பதின்மூன்றாம் பாடல்).

கையார் வளை சிலம்பக் காதார் குழையாட
மையார் குழல் புரளத் தேன் பாய வண்டு ஒலிப்ப
செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய். .

ஒரு சக்கரவர்த்தியின் நிழலில் இருக்கும் ஒருவன் மற்ற அரசர்களையோ அந்த சக்கரவர்த்தியின் சிற்றரசர்களையோ மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் இங்கே சிவபெருமானை அரசர்க்கு அரசன் என்ற பொருள் பட கோமான் என்று குறிப்பிட்டு, தான் பல்லவ மன்னனுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை என்பதனை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சிவபெருமானுக்கு அடிமையாக மாறியதன் பின்னர் தனக்கு ஒரு புது மதிப்பு வந்து சேர்ந்ததாக உணரும் அப்பர் பிரான் தன்னை, நாம் என்று மிகவும் உயர்வாக கூறிக்கொள்வதையும் நாம் உணரலாம். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைத் தீர்த்த இறைவனின் அருள் இருப்பதால், தனக்கு எந்த பிணியும் வராது என்ற நம்பிக்கை இந்த பாடலில் ஒலிப்பதையும் நாம் உணரலாம். பிணி என்பதற்கு பிறவிப்பிணி என்று பொருள் கொண்டு, பிறவிப்பிணி தீர்க்கப்பட்ட நிலையில் தான் இருப்பதாக அப்பர் பிரான் கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். அப்பர் பிரான் திருவையாறு தலத்தின் மீது அருளிய தானலாது உலகம் இல்லை என்று தொடங்கும் பதிகத்தில், இறைவனுக்கு மீளா அடிமையாக மாறுவதுதான் நாம் சிவபிரானுக்குச் செய்யும் கைம்மாறு என்று கூறுகின்றார். அதாவது சிவபெருமானுக்கு அடிமையாக ஆட்பட்ட தாம், அந்த நிலையிலிருந்து மீளாமல் என்றும் அவருக்கு அடிமையாகவே இருப்போம் என்ற முடிவுடன் இந்த அருளாளர்கள் இருந்த நிலையினை நாம் உணருகின்றோம்.

கீள் அலால் உடையும் இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் கீளும் கோவணமும் தவிர்த்து வேறு ஏதும் உடை அணியாத சிவபெருமான், பாம்புகள் அணிகலனாக அழகு செய்யும் தனது தோள்களைத் தவிர வேறு துணை ஏதும் தேவைபடாதவர் என்றும், மன்மதன் அவரது நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட பின்னர் அவரை எதிர்த்து நின்றவர் எவரும் இல்லை என்று கூறி, அத்தகைய பிரானுக்கு, அவரை விட்டு என்றும் பிரியாமல் அடிமைத் தொழில் புரிவதைத் தவிர நாம் அவருக்குச் செய்யக்கூடிய மைம்மாறு வேறு எதுவும் இல்லை என்றும் நமக்கு உணர்த்துகின்றார்.

சுந்தரர் தனது வலது கண்ணின் பார்வையினை மீண்டும் பெறுவதற்காக திருவாரூரில் அருளிய பதிகத்தின் (7.95) முதல் பாடலில் மீளா அடிமை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

வாளாங்கு இருப்பீர் = அடியார்களுக்கு உதவி ஏதும் செய்யாது இருக்கும் நிலை.

தங்களது துன்பத்தினை வேறு எவரிடமும் சொல்லாத தன்மை இங்கே உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. தனக்கு உதவி செய்யாத ஒருவனை நோக்கி, எனது துன்பத்தினை தீர்க்கும் திறன் படைத்தும் எனக்கு உதவி செய்யாமல் இருக்கும் நீயும் ஒரு மனிதனா, பரவாயில்லை நீ நன்றாக வாழ்வாயாக என்று இகழ்ச்சிக் குறிப்பு தொனிக்க, நாம் கூறுவது போன்று இறைவனை நோக்கி சுந்தரர் கூறும் பாடல். இந்த நிலை, இறைவனுக்கு அவருக்கும் இருந்த நெருக்கமான நட்பினை நமக்கு உணர்த்துகின்றது. வேறு எவரையும் நாடாமல் சிவபெருமானுக்கு தொண்டு செய்யும் அடியார்கள், தங்கள் துயரத்தினை உணர்த்தாமலே, அவற்றினை உணரக் கூடிய வல்லமை படைத்த இறைவன், அடியார்கள் தங்களது துயரத்தினை அவன் சன்னதியில் வெளிப்படுத்தி முறையிட்ட பின்னரும், உதவி செய்யாமல் இருத்தல் இறைவனுக்கு அழகா என்ற வினா இங்கே எழுப்பப் படுகின்றது.

பொழிப்புரை

தான் எவருக்கும் குடியல்லாத தன்மை கொண்டவனும், ஓர் காதில் வெண்குழையை அணிந்தவனும், அனைவருக்கும் அரசனுமான சங்கரனுக்கு, மீளாத அடிமையாக உள்ள நாம், அவனது அன்றலர்ந்த மலர் போன்று மென்மையானதும் செம்மையானதுமான திருவடிகளை அடைக்கலமாக அடைந்தோம். ஆதலின் நாம் சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடிமை அல்லோம்; இயமனுக்கும் பயப்படமாட்டோம். அரசனின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது என்பதால், அரசாணையை மீறிய குற்றத்திற்காக எமக்கு நரகத்தில் எந்த தண்டனையும் வராது; எவரிடமும் அச்சம் இல்லாத காரணத்தால் பொய்யினைத் தவிர்த்தவராக நாம் விளங்குகின்றோம்; என்றும் களிப்புடன் இருப்போம்; எந்தவித நோயும் இன்றி வாழ்வோம்; சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பணியமாட்டோம்; எங்களது வாழ்வில் இனி இன்பமே நிறைந்து நிற்கும். எந்தவிதத் துன்பமும் நேராது;

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.