

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
பஞ்சாப் அதிரடி
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். பஞ்சாப் அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 36 ரன்களில் (2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
அதன் பின், பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் (7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 27 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 82 ரன்கள் (6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) எடுத்து ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: நிக்கோலஸ் பூரன், மார்க்ரம் அதிரடி: லக்னௌவுக்கு 4-வது வெற்றி!
ஹைதராபாத் - 245
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதில், முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் வீசிய முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்காமல் 75 ரன்களை வாரி வழங்கினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், ஈசன் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்
பின்னர், 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கியது முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இருவரும் காட்டிய அதிரடியில் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். அபிஷேக் சர்மா கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் பிடிக்கத் தவறினர். இதனால், ரன் வேகமாக ஏறியது. 19 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுத்த டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் விளாசினார்.
பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்ததும், ட்ராவிஸ் ஹெட் 66 ரன்களில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) பஞ்சாப் வீரர் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஹைதராபாத் பதிலடி
அவர் வெளியேறினாலும், மற்றொரு முனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் விளையாடி பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
ஹைதராபாத் அணி 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் (14 பவுண்டரி, 10 சிக்ஸர்) எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவருக்குப் பின்னர் வந்த கிளாசன் 21 ரன்களும், இஷன் கிஷன் 9 ரன்களும் எடுத்து ஹைதராபாத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். முடிவில், 18.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிகபட்ச சேஸிங்காகவும் இது அமைந்தது. 6 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு இது 2வது வெற்றியாகும். 5-வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
இதையும் படிக்க: மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சிஎஸ்கே: முன்னாள் ஆஸி. கேப்டன்
அபிஷேக் சர்மா சாதனை
இதற்கு முன்னதாக, ஹைதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தவரான முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரின் (126 ரன்கள்) சாதனையையும், இந்தியர்களில் அதிக ரன் அடித்தவரான கேஎல். ராகுலின்(132 ரன்கள்) சாதனையையும் முறியடித்தார் அபிஷேக் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.