உணவுப் பொருள்கள் சோதனை: அச்சத்தில் குடிசைத் தொழில் முனைவோர்

பொன்னேரி:  தமிழகம் முழுவதும் கடைகளில் நடைபெற்று வரும் காலாவதி உணவுப் பொருள்கள் சோதனை காரணமாக குடிசைத் தொழில் முனைவோர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். படித்த மற்றும் படிக்காமல் வேலை கிடைக்காமல் இருக்கும் இள
உணவுப் பொருள்கள் சோதனை: அச்சத்தில் குடிசைத் தொழில் முனைவோர்
Updated on
1 min read

பொன்னேரி:  தமிழகம் முழுவதும் கடைகளில் நடைபெற்று வரும் காலாவதி உணவுப் பொருள்கள் சோதனை காரணமாக குடிசைத் தொழில் முனைவோர் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

படித்த மற்றும் படிக்காமல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் வீட்டில் உணவு பொருள்களை செய்து அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் குடிசைத் தொழில். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வேர்கடலை பர்பி, எள்ளு பர்பி, அச்சு முறுக்கு, தேன் மிட்டாய், உடைத்த கடலை உருண்டை, அதிரசம், அரிசி முறுக்கு உள்ளிட்ட பொருள்களை வீடுகளில் சொந்தமாக செய்து பின்னர் அதை ஒரு பாக்கெட்டில் அடைத்து உள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அளித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட தினத்துக்குள் அவர்கள் கடையில் அளித்துள்ள பொருள்கள் விற்பனையாகாமல் இருந்தால் அப்பொருள்களை அவர்களே திரும்ப பெற்று கொள்வர். எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் காலாவதியான பொருள்களை நுகர்வோருக்கு அளிக்க சம்மதிப்பதில்லை. காரணம், இவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்கள் மீது பொதுமக்களிடையே அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதே எண்ணம்.

விதிமுறைகள் தெரியாத நிலையில்...

பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் பொருள்களின் மேலே அப்பொருள் உற்பத்தி செய்த தேதி, அது காலாவதி ஆகும் தேதி, பொருளின் எடை மற்றும் விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் மேற்கண்ட அரசின் விதிமுறைகள் ஏதும் தெரியாமலே குடிசை தொழில் செய்பவர்கள் உணவு பொருள்களை பாக்கெட்டில் அடைத்து கடைகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் காலாவதியாகி போன உணவுப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் காலாவதி ஆன பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஊத்துக்கோட்டை பொன்னேரி ஆகிய ஊர்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனையில் குடிசைத் தொழில் மூலம் செய்து கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படும் மேற்கண்ட உணவுப் பொருள்கள் சுகாதாரத் துறையினரால் பறிமுதல் செய்யபடுகிறது.

இத்தனைநாள் எங்கே?பொதுமக்கள் உடல் நலன் கருதி உணவுப் பொருள்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இவ்விதிமுறைகள்  கடைப்பிடிக்க படுகின்றனவா, அல்லது மீறப்படுகின்றனவா என சுகாதாரத் துறையினர் இதுவரை ஆய்வு செய்ததும் இல்லை, குடிசைத் தொழில் செய்வோரிடம் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறியதுமில்லை எனவும் இது போன்று குடிசைத் தொழிலில் ஈடுபடுவோர் வாழ்வாதாரம் திடீரென பாதித்தால் அவர்கள் மிகவும் அவதிப்படுவர் எனவும், எனவே உணவுப் பொருள்களை தயாரித்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் குடிசைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு போதுமான கால அவகாசம் அளித்து சுகாதாரத் துறையினர் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com