சென்னை, அக்.23: தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மின்சார சட்டம் 2003-ன் படி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தை 3 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரிய லிமிடெட், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் (டேன்டிரான்ஸ்கோ), தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகம் (டேன்ஜெட்கோ) என பிரிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் (டேன்டிரான்ஸ்கோ), கடந்த 2009 ஜூனில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அரசு விதிகளின்படி டேன்டிரான்ஸ்கோ மற்றும் டேன்ஜெட்கோ ஆகிய இரு கழகங்களும் இணைக்கப்பட்டன.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில், தமிழக அரசு, டேன்டிரான்ஸ்கோ, டேன்ஜெட்கோ மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் விரைவில் கையெழுத்திட உள்ளனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிவதற்காக, வரைவு ஒப்பந்த விவரம் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு, ஒப்பந்தம் சில வாரங்களில் கையெழுத்தாக உள்ளது.
மின் ஊழியர்களை எந்த கழகங்களுக்கு இடமாற்றம் செய்தல் மற்றும் ஆள்தேர்வு செய்தல் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு மின்சார வாரிய லிமிடெட்டின் தலைவரே செயல்படுத்துவர். இதுதொடர்பாக, டேன்டிரான்ஸ்கோ மற்றும் டேன்ஜெட்கோ ஆகிய கழகங்களுடன் கலந்து ஆலோசித்து குறைதீர்க்கும் கமிட்டிகளை அமைப்பார்.
இந்த கமிட்டி மூலம் ஆள் தேர்வு மற்றும் இடமாற்றம் என ஊழியர்கள் நலன் தொடர்பான பிரச்னைகள் கையாளப்படும். இந்த கமிட்டி அரசுக்கு பல பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு, ஆணைகளை வெளியிடும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் தன் கைவசம் உள்ள அனைத்து சொத்துக்களையும், தமிழக அரசிடம் வழங்கும். டேன்டிரான்ஸ்கோ மற்றும் டேன்ஜெட்கோ கழகங்களுக்கு தமிழக அரசு மூலம் நிதி வழங்கப்படும்.
இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 79 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 17 ஆயிரம் ஊழியர்கள் டேன்டிரான்ஸ்கோவுக்கு மாற்றப்பட உள்ளனர்.
மற்ற ஊழியர்கள் தொடர்ந்து டேன்ஜெட்கோவில் பணியாற்றுவர். அதேபோல எந்தெந்த கழகங்களில் இருந்து பணியாற்றி ஓய்வு பெறுகிறார்களோ, அந்த கழகங்களே (டேன்டிரான்ஸ்கோ மற்றும் டேன்ஜெட்கோ) இனி ஓய்வூதியம் வழங்கும்.
ஊழியர்களை இருட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் அரசு
மின்வாரிய ஊழியர்களை தமிழக அரசு இருட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது. மின் கழகங்களுக்குப் பதில் அரசே ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் விஜயன் கூறியது:
தமிழகத்தில் பணியாற்றி வரும் சுமார் 79 ஆயிரம் ஊழியர்களின் ஓய்வூதிய நலன் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படாமல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது மின் ஊழியர்களின் நலனில் பாதிப்பை உண்டாக்கும் என அஞ்சுகிறோம்.
எந்த கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்களோ, அந்த கழகங்கள் மூலம் இனி ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதிய சலுகை உள்ளிட்டவைகளை அரசே பொறுப்பு ஏற்று வழங்க வேண்டும். அதேபோல, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொத்து விவரம் குறித்து எந்த விவரமும் குறிப்பிடவில்லை. மின்வாரியத்தின் சொத்துக்களுக்கு, விலை நிர்ணயம் எப்படி செய்யப்பட்டது உள்ளிட்ட எந்த விவரமும் தொழிற்சங்கத்தினருக்கு தெரியாது. மின்வாரிய ஊழியர்களாகிய நாங்கள் தொடர்ந்து இருட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறோம் என்றார் விஜயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.