தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து

 ஆளுநர் வாழ்த்து  சென்னை, ஏப். 12: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:  தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு புத்தாண
தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

 ஆளுநர் வாழ்த்து

 சென்னை, ஏப். 12: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

 தமிழ்ப் புத்தாண்டு மற்றும் விஷு புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் தமிழக, கேரள மக்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் அமைதியும், முன்னேற்றமும், வளமும் கிடைக்கட்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தும் பாடுபட அனைவரும் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 முதல்வர் வாழ்த்து

 பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிய தமிழ் மக்கள், அந்த நாள் வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டதால் மனமுடைந்தார்கள். வலிந்து திணிக்கப்படுகிற மாற்றங்களை மக்கள் ஒருநாளும் ஏற்பதில்லை. எனவே, சித்திரை முதல் நாளையே பெரும்பான்மையான உலகத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

 சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பல கோடி தமிழர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மக்களின் மனம் விரும்பும் மக்கள் அரசாக செயல்படும் இவ்வரசு, சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என மாற்றி அறிவித்தது. இந்தப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். தமிழர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என வாழ்த்துகிறேன். உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 விஜயகாந்த்: தமிழ்ப் புத்தாண்டில் தமிழ் மக்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும். இலங்கைவாழ் தமிழர்களின் இன்னல் தீர்ந்து வருங்காலம் இனிதாக அமைந்திட வேண்டும்.

 பி.எஸ். ஞானதேசிகன்: தமிழக மக்கள் எல்லா வளமும், நலனும் பெற்று வாழ வேண்டும். இலங்கைவாழ் தமிழர்களும் அரசியல் சம உரிமை பெற்று அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும்.

 ராமதாஸ்: தமிழ்ப் புத்தாண்டு தை திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இந்தத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 தா.பாண்டியன்: மின் பற்றாக்குறையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்ற கவலைகள் கடந்த ஆண்டோடு முடிந்து இந்த ஆண்டு முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.

 பொன். ராதாகிருஷ்ணன்: தமிழ்ப் புத்தாண்டு தினம் சித்திரை முதல் நாளாக மாற்றப்பட்டு தமிழர் உரிமை மீட்கப்பட்ட தினமாகக் கொண்டாடுவோம்.

 சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், காங்கிரஸ் பிரமுகர் கார்த்தி ப.சிதம்பரம், மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் சேதுராமன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com