உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பொது விடுமுறை அல்லாத நாள் என்பதற்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கும், குன்னூர், அரக்கோணம், சங்கரன்கோவில் உள்பட 31 நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் செப்டம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார். பின்பு அதே நாளன்று மாலை அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து முன்பு அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 28-ஆம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் என மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை கடந்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் ஆணையர் பிறப்பித்தார். இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதில் உள்நோக்கம் உள்ளது. மேலும், போதிய கால அவகாசம் வழங்கப்படாமலும், உள்ளாட்சி அமைப்புச் சட்டங்களைர் பின்பற்றாமலும் இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பெறுவது விடுமுறை அல்லாத ஏழு நாள்களில்தான் பெற வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் பிறப்பித்த அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகள் பொது விடுமுறை நாள்கள். இதனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என வாதாடினார்.
மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, அந்த நாள்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""விடுமுறை அல்லாத நாள்களில்தான் வேட்பு மனுக்களைப் பெற வேண்டும் என உள்ளாட்சி தேர்தலுக்கான விதிகளில் குறப்பிடப்பட்டுள்ளது.ஆனால், வேட்பு மனு பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட தேதியில் மூன்று நாள்கள் பொது விடுமுறையாக உள்ளன. அதுவே விதிமீறல். ஆனால், அந்த நாள்களிலும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக நீங்கள் (அரசு) தெரிவிக்கிறீர்கள். இதுவே மிகப்பெரிய விதிமீறல்'' எனத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பொது விடுமுறை நாள்களில் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் திறந்திருந்ததா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.
மேலும், பொது விடுமுறை அல்லாத நாள்கள் என்றால் என்ன என்பது குறித்து அரசிடமிருந்து விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசு வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.