மலையாளப் புத்தாண்டு தினமான விஷு திருநாளை ஒட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
மலையாள மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விஷு பண்டிகையன்று, மலையாள மக்கள் தங்களது இல்லங்களில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களின்படி அரிசி, காய் கனிகள், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, கொன்றை மலர், தங்க நாணயங்கள், புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷு கனியை விடியற்காலை எழுந்தவுடன் முதலில் காண்பர்.
புத்தாண்டில் தங்களுக்கு எல்லா நலனும் வளமும் வழங்க வேண்டி இறைவனை வணங்கி வழிபடுவர். குடும்பத்தில் உள்ள இளையவர்களும், குழந்தைகளும் பெரியவர்களை வணங்கி அவர்களிடம் ஆசி பெறும் போது அன்புப் பரிசாக விஷு கை நீட்டம் என்னும் பணப் பரிசைப் பெற்று மகிழ்வார்கள்.
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கும் இந்தப் புத்தாண்டு எல்லா வகைகளிலும் ஏற்றம் தந்திடும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது இனிய விஷு திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.