

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று நாடு விடுதலை பெற பாடுபட்டவர். பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக குரல் கொடுத்தவர். தேசிய உணர்வையும் மதநல்லிணக்கத்தையும் உயிர் மூச்சாக கொண்டவர் என அனைவராலும் பாராட்டப்படுபவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாயுபு. அவரது பேரனும் இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவருமான எம்.ஜி. தாவூத் மியாகான், தனது தாத்தாவால் கட்டி வளர்க்கப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று சிதறிக் கிடப்பதற்கு சில தலைவர்களின் சுயநலம்தான் காரணம் என்கிறார். அவர் தினமணி' க்கு அளித்த சிறப்புப் பேட்டி
அதிமுக ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இந்துத்துவா ஆதரவு நிலையில் அதிமுக இல்லை.
நல்லதை ஆதரிப்பது, கெட்டதை எதிர்ப்பது என அதிமுக நடுநிலையாகவே செயல்பட்டு வருகிறது.
ஆளுக்கு ஒரு கட்சி என தனித் தனியாக பிளவுபட்டு நிற்பது சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு பலவீனம்தானே?
சுதந்திரத்துக்கு முன்பு 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் என்பவரால் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து முகமது அலி ஜின்னா அதன் தலைவராக இருந்தார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து 1949 இல் அகில என்பதை நீக்கிவிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றப்பட்டது. அப்போது எனது தாத்தா காயிதே மில்லத் என்று அழைக்கப்படும் முகமது இஸ்மாயில் சாயுபு அதன் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், 1960 ஆம் ஆண்டு கட்சியின் பொதுக் குழு திருச்சி அருகே உள்ள காட்டூரில் கூடியது. அப்போது, ஒரு குழு காயிதே மில்லத்துக்கு எதிராக அணி திரட்ட முயன்றது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவ்வாறு காயிதே மில்லத்துக்கு எதிராக திரண்டவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதால் 1965-ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் கைதாகினர். பின்பு, 1967-ஆம் ஆண்டு அந்த எதிர்ப்பு குழுவினரை கட்சியில் இருந்து நீக்கினார் காயிதே மில்லத். அண்ணா காயிதே மில்லத்தின் பக்கம் இருந்தார். நீக்கப்பட்டவர்கள் பின்னாளில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கினர். இப்படித்தான் இந்த இயக்கம் பிளவு பட ஆரம்பித்தது. அப்படி பிரிந்து சென்றவர்களைத் திமுக அரவணைத்துக் கொண்டது. காயிதே மில்லத் தலைமையில் பலமாக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை தனித் தனியாக பிளவு படுத்தியதிலும், இஸ்லாமியர்களைப் பிளவுபடுத்தியதிலும் கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் இப்போதைய நிலை என்ன?
காயிதே மில்லத் போன்றவர்களால் கட்டிக் காக்கப்பட்ட முஸ்லிம் லீக் கட்சியை முதலில் அப்துல் சமது பலவீனப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து இப்போதைய தலைவர் காதர் மொய்தீன், இ. அகமது போன்றவர்கள் தங்களது சுயநலத்துக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வளரவிடாமல் முடக்கிவிட்டனர். பதவி ஆசையின் பொருட்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக காதர் மொய்தீன் திமுக உறுப்பினராக பதிவு செய்து திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதுபோல் கேரளத்தில் இ. அகமதுவும் இதுபோன்று தேர்தலில் போட்டியிடுவதற்காக சமரசங்களில் ஈடுபட்டு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியை முடக்கிவிட்டார். எனவே இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். வழக்கும் நிலுவையில் உள்ளது.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக அரசுதான் என்றும் கூறப்படுகிறதே?
2007-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 3.5 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இந்த 3.5 சதவீதத்தில் ஏற்கெனவே பணியில் உள்ள முஸ்லிம்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைப் புகுத்தியதால் இட ஒதுக்கீட்டால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு, அரசு பதவிகளில் ஏற்கெனவே 2 சதவீத இஸ்லாமியர்கள் பணியில் இருந்தால், புதிய வேலை வாய்ப்பில் 1.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்க இந்த இட ஒதுக்கீடு சட்டம் வகை செய்கிறது. இதுபோல் திமுக ஆட்சியின்போது உருது மொழியை பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், உருது மொழியைக் கட்டாய பாடமாக்கவில்லை., இதனால் மொழிப்பாடமாக சேர்த்தும் எவ்வித பயனும் இல்லாமல் போனது. மேலும், கட்டாய திருமண பதிவுச் சட்டம் திமுக ஆட்சி காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. இந்தக் கட்டாயத் திருமண பதிவுச் சட்டம் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரானது என பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் பிறகு அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்கிறீர்கள். ஆனால், இவற்றுக்காக கருணாநிதியைப் பாராட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக ஆகிய கட்சிகள் விழா எடுத்தார்களே?
இந்தப் பாராட்டு விழாக்கள் எல்லாம் கருணாநிதியை மகிழ்விப்பதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் மொய்தீன் நடத்தியது. தேர்தல்களில் பலமுறை தோற்ற பின், திமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர்தான் அவர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லா உருது மொழி விவகாரத்தில் முதலில் கருணாநிதியைப் பாராட்டினார். ஆனால், உண்மை விளங்கிய பிறகு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சி (முந்தைய தமுமுக), இந்தத் தேர்தலில் மீண்டும் திமுகவின் கதவைத் தட்டி உள்ளது.
அதிமுக இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் கட்சி என்ற குற்றச்சாட்டு உள்ளது, மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வந்ததும் அதிமுகதானே?
அதிமுக ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இந்துத்துவா ஆதரவு நிலையில் அதிமுக இல்லை. அப்படி இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பாரே முதல்வர். குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று கருணாநிதியிடம் கூறியபோது, அது வேறு மாநிலத்தின் பிரச்னை என ஒதுங்கிக்கொண்டார். பாஜகவுடன் அதிக காலம் நெருக்கமாக இருந்ததும், நீண்டநாள் பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்ததும் திமுகதானே தவிர அதிமுக அல்ல. நல்லதை ஆதரிப்பது, கெட்டதை எதிர்ப்பது என அதிமுக நடுநிலையாகவே செயல்பட்டு வருகிறது. இதில் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த முறையும் நீங்கள் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறீர்களா?
அதிமுகவுடன் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு சில தொகுதிகளில் எங்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிடவுள்ளோம்.
2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்த முறையும் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா?
அப்படியொரு வாய்ப்புக்காக நிச்சயமாக காத்திருக்கிறேன் திமுக தலைவர் கருணாநிதியைத் தோற்கடிப்பதுதான் எனது லட்சியம். அப்போதுதான் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாயுபுவின் ஆன்மா சாந்தியடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.