மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூடம்: உயர்நீதிமன்ற உத்தரவால் உடனடியாக மூடல்

மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சீல் வைத்து, அது குறித்த அறிக்கையை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு,
Updated on
2 min read

மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தை புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சீல் வைத்து, அது குறித்த அறிக்கையை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுரை மாவட்ட கலால்துறை உதவி ஆணையர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த பொது நல மனு:
நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூடுமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மதுரை மாவட்டத்தில் அமல்படுத்தப்படவில்லை.
மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள பாண்டிகோவில் பகுதியில் 4 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், இப்பகுதியில் பூஞ்சோலை மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மதுபானக் கடை மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இங்கு, இரவு 1 மணி வரை மதுபானம் விற்கப்படுகிறது. இதனால், பாண்டிகோவில் பகுதியில் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால், பாண்டிகோவிலில் இயங்கிவரும் பூஞ்சோலை மனமகிழ் மன்றத்தை மூடவும், அதுவரை அந்த மனமகிழ் மன்றம் செயல்பட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் உள்ள மனமகிழ் மன்றங்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் கடந்த ஆண்டு விநியோகம் செய்யப்பட்ட மதுபானங்களின் அளவு ஆகியன குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இம்மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பூஞ்சோலை மனமகிழ் மன்றம் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்க வேண்டாம். நாங்களும் அந்த வழியாகவே பயணிக்கிறோம். அங்கு நடப்பது மனமகிழ் மன்றமா, மதுபானக்கூடமா என்று எங்களுக்கும் எல்லாம் தெரியும் என்றனர். மேலும், மனமகிழ் மன்றங்களை கண்காணிக்கும் கடமையிலிருந்து தவறியதற்காக, மதுரை மாவட்டக் கலால் துறை உதவி ஆணையர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர் தரப்பில், குருவிக்காரன் சாலையில் உள்ள ஏ-1 மனமகிழ் மன்றத்திலும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை குருவிக்காரன் சாலையில் உள்ள ஏ-1 மனமகிழ் மன்றத்தை புதன்கிழமை மாலை 6 மணிக்குள் சீல் வைத்து, அது குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, குருவிக்காரன் சாலையில் உள்ள மனமகிழ் மன்றம் உடனடியாகப் பூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com