

திண்டுக்கல்: காந்தியடிகளின் 150-ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு, காந்திய சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதல் மத்திய பல்கலைக்கழகமாக, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாத்மா காந்தியின் சீடர்களான ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.சௌந்தரம் ஆகியோரால் காந்திகிராம கல்வி நிறுவனம் 1956-இல் தொடங்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததால் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் 1976-ஆம் ஆண்டு முதல் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.
அகில இந்திய அளவில் 14 கிராமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோதிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலைக்கு வளர்ச்சிப் பெற்றது திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மட்டுமே.
தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், நேரடி கல்வி நிறுவனமாக செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பெற முடியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 மாதம் மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்பு, 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பு என 36 வகையான தொழில் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.
இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 207 ஏக்கர் நிலம் இருந்தும், அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டட வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இதற்குத் தேவையான நிதி உதவி கிடைத்தால் மட்டுமே, இந்தப் பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சி அடையும் என திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், கல்வியாளர்களும் கூறுகின்றனர். இந்தச்சூழலில்தான் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை, மத்திய பல்கலைக்கழகமாக நிலை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீன் வளம், விளையாட்டு, சட்டம், மொழி என பல்வேறு துறைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்த வரிசையில் கிராமப்புற வளர்ச்சிக்கு திட்டமிடும், காந்திய சிந்தனைகளை கற்பிக்கும் முதல் பல்கலைக்கழகமாகவும், தமிழகத்தின் இரண்டாவது மத்திய பல்கலைக்கழகமாகவும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி சுமதிப்ரியா கூறுகையில், மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டால் 28 துறைகளுடன் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகத்தில், குறிப்பிட்ட பாடங்களில் கூடுதல் பிரிவுகள் தொடங்குவதற்கும், சில துறைகளை விரிவாக்கம் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். நவீன ஆய்வுக் கூடம், 24 மணி நேரம் செயல்படக் கூடிய டிஜிட்டல் நூலகம் போன்ற வசதிகளும் கிடைக்கும் என்றார்.
முதுகலை ஆய்வு நிறைஞர் ரஞ்சித்குமார் கூறியது: மத்திய அரசு சார்பில் கூடுதலான நிதி உதவி வழங்கப்படும்போது, மாணவர்களுக்கான கல்வி கட்டணம் குறையும். மேலும், மாணவர்களுக்கு கூடுதல் விடுதி வசதி ஏற்படுத்தினால், வெளியிடங்களில் தங்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் உணவு வகைக்கு ஏற்ப, நவீன வசதிகள் கிடைக்கும். காந்திய சிந்தனை குறித்து நாட்டின் அனைத்து பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார்.
துணைவேந்தர் சு.நடராஜன்: கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய மூன்று துறைகளில் கிராமப்புற மக்களின் தேவைகள் குறித்த கொள்கைகளை பரிந்துரைக்கவும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், விவசாய உற்பத்திப் பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றவும் வழிகாட்டுதல் அவசியம்.
அந்தப் பணிகளை, காந்திய சிந்தனைகளை பரப்பியும், காந்திய நிர்மான திட்டங்கள் குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் மேற்கொண்டு
வருகிறது.
அந்த வகையில் காந்தியடிகளின் 150-ஆவது நினைவு ஆண்டினை முன்னிட்டு, காந்தியக் கொள்கை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்தப் பல்கலைக்கழகத்தை, மத்திய பல்கலைக்கழகமாக மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.