

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50 அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உங்களை ஏன் பணிக்காலம் நிறுத்திவைப்பு செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்களின் நியமனப் பணி இன்றே தொடங்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மருத்துவர்களின் ஊதியம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலானது, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், எம்பிபிஎஸ் படித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்ததுமே ஒரு அரசு மருத்துவருக்கு ரூ.80,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.
அவர் பணியில் சேர்ந்த பிறகு மேல் படிப்பு படிக்க வேண்டும் என்றால், அவர் மேல்படிப்பு படிக்க அனுமதிக்கப்படுகிறார். அதோடு அவர் மேல்படிப்பு படிக்கும் 3 ஆண்டு காலமும் பணிக்காலமாகக் கருதி முழுமையாக ஊதியம் வழங்குகிறோம்.
மேல்படிப்பு படித்து முடித்து விட்டு மீண்டும் பணிக்கு வரும் போது பணி உயர்வு வழங்கி, அதற்கேற்ற அளவில் ஊதியத்தை உயர்த்தித் தருகிறோம் என்று பதிலளித்தார் விஜயபாஸ்கர்.
அப்போது எம்பிபிஎஸ் முடித்த உடன் பணியில் சேரும் மருத்துவர்களுக்கே ரூ.80 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது என்றால், போராடும் மருத்துவர்கள் எவ்வளவு ஊதியம் கேட்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்கிறார்கள் என்று அமைச்சர் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.