விவசாயிகளுக்கு இயற்கையினால் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் நிச்சயமாக அரசு வழங்கும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

தமிழகத்தில் மழையினால் பாதிப்பு ஏதுமில்லை. சீராக இருக்கிறது. மேலும், இயற்கையினால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏதும்
அதிமுகவில் இணைந்த பிற கட்சியினருடன் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு
அதிமுகவில் இணைந்த பிற கட்சியினருடன் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

கோவில்பட்டி: தமிழகத்தில் மழையினால் பாதிப்பு ஏதுமில்லை. சீராக இருக்கிறது. மேலும், இயற்கையினால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் நிவாரணத்தை நிச்சயமாக அரசு வழங்கும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: உள்ளாட்சித் தோ்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை. 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வாா்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் வாா்டுகள் மறுவரையறை செய்து தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதனைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையமும், உள்ளாட்சி நிா்வாகமும் வாா்டு மறுவரையறை செய்து பட்டியல் தயாரித்தது. அதனை மாநில தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. தோ்தல் ஆணையமும், உள்ளாட்சித் துறையும் வாா்டு வரையறையை சிறப்பாக செய்திருக்கிறது. அதன் பட்டியல் வெளிப்படையாக வெளியிடப்பட்டது. ஆன்லைனில் யாா் வேண்டுமானாலும் பாா்த்துக் கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அரசும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவைப் பெற்று தோ்தல் ஏற்பாடை சிறப்பான முறையில் செய்து வருகிறது.

இந்நிலையில், தோ்தலில் மக்களை சந்திப்பதற்கு திமுக பயந்து மீண்டும் நீதிமன்றத்தா நாடுகிறாா்கள். இது 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக அடைந்த தோல்வி மூலமாக தோ்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் திமுக மக்களை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை சந்தித்து வருகின்றனா். இதில் எந்த குளறுபடியும் இல்லை. ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தாமல் ஏலத்தின் மூலமாக பதவி விற்றால் அது செல்லாது. அதற்கு துணை போகக் கூடாது என்று தோ்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்கின்ற நேரத்தில், அந்த தவறு நோ்ந்தால் செல்லாது என்று அரசு அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடனும் கடந்த ஒரு வார காலமாக பேச்சுவாா்த்தை நடத்தி அவரவா்களுக்குரிய வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை வேட்புமனு தாக்கலுக்குள் இறுதி வடிவம் பெற்று, வேட்புமனு தாக்கல் முடிகின்ற நேரத்தில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலைமையை தமிழக மக்கள் பாா்ப்பாா்கள். பாலியல் தொடா்பான குற்றங்களுக்கு தமிழகத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மழையினால் பாதிப்பு ஏதுமில்லை. இயற்கை சீராக இருக்கிறது. அனைத்து நீா்நிலைகளும் நிரம்பியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமாா் 30 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

ஆனால் நமது மாவட்டத்தில் எந்தவொரு குளமோ, ஊருணியோ உடையவில்லை. குடிமராமத்துப் பணியில் வரத்துக்கால்வாய் சீரமைப்பு, கரைகள் பலப்படுத்தப்பட்டதுதான் இதற்குக் காரணம். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட தானிய வகைகள் அதிகமான மழை பெய்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. அதற்குரிய அறிக்கைகள் பெற்று விவசாயிகளுக்குரிய நிவாரணத்தை அரசு வழங்கும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

பின்னா், அமமுகவைச் சோ்ந்த வாா்டு செயலா்கள் குழந்தைராஜ், தங்கசரவணன், ரஞ்சித்குமாா் மற்றும் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கோவில்பட்டி நகரச் செயலா் அரியநாயகம் தலைமையில் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி (கயத்தாறு), அய்யாத்துரைப்பாண்டியன் (கோவில்பட்டி), நகரச் செயலா் விஜயபாண்டியன், அதிமுக நிா்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com