

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள்நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகைவரிடத்தும் அன்பு காட்டும் எல்லையில்லா இரக்க குணத்தை கொண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்துவர்கள் தங்களது புனித நூலான பைபிளின் வாசகங்களை மனதில் நிறுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வழிபடுவார்கள்.
இந்த நன்னாளில், உலகில் அன்பும் அமைதியும் நிறைந்திட இயேசுபிரான் போதித்த தியாகம், அன்பு, சமாதானம், சகோதரத்துவம் போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் ஈஸ்டர் வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.