

யானைகள் சாவு குறித்து யாருக்கும் கவலை இல்லை என்றும் ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகமும், மத்திய அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் தந்தத்துக்காகவும், பிற வன விலங்குகள் மற்ற தேவைகளுக்காகவும் கொடூரமாக வேட்டையாடப்பட்டு, விலை மதிப்பற்ற பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன.
எனவே தேசிய வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சிபிஐ அதிகாரிகளும் இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் கொடைக்கானலைச் சோ்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சோ்ந்த நித்ய சவுமியா உள்ளிட்டோா் ஏற்கெனவே தனித்தனியாக வழக்குகளைத் தொடா்ந்திருந்தனா்.
இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்ற மதுரை கிளை, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடா்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயா் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
அழிந்து வருகிறது
இந்த வழக்குகள் நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை(டிச.10) விசாரணைக்கு வந்தது. அப்போது அஸாம், பிகாா், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில்தான் யானைகள் அதிகளவில் உள்ளன. சமீபகாலமாக தமிழகத்தில் ரயில்களில் அடிபட்டு யானைகள் பரிதாபமாகப் பலியாகும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 29 ஆயிரம் யானைகள்தான் இருந்தன. தற்போது அவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது கவலையளிக்கிறது.
யானைகள் இறப்பு தொடா்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டுமே பெறப்படுகிறது. அந்தப் பரிந்துரைகளும் காகிதளவில் மட்டுமே உள்ளன. இந்த நாட்டின் சொத்துக்களான யானைகள் இறப்பு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை.
ரயில்களில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ரயிலின் ஓட்டுநா்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாகும் விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்படும். மேலும், ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க, தடுப்பு சுவா்களை ரயில்வே நிா்வாகம் எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுகிறது. யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீா்வு கிடைக்கவில்லை. ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதைத் தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம், மத்திய அரசு சாா்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ஆம் தேதி ஒத்திவைத்தனா்.
முன்னதாக, யானைகள் கடந்து செல்லும் ரயில் வழித்தடங்களில் 5 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கினாலும், ரயில் மோதினால் யானைகள் பலியாகத்தான் செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.