

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமாரசுவாமி, சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாளிக்கின்றனர். இங்கு வழங்கப்படும் பிரசாதமான திருச்சந்தூர் உண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமடையும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு ஆண்டுதோறும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு பாதயாத்திரையாக இரண்டாவது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தங்களது உடைமைகள் மற்றும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய சீர்வரிசை பொருட்களை பாரம்பரிய முறைப்படி இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட கூண்டு வண்டியில் அனுப்பிவிட்டு அதனை பின் தொடர்ந்து பாதயாத்திரையாக நேற்று இரவு வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை வந்தடைந்தனர். அவர்களுக்கு இன்று அதிகாலை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாள், செல்வ முத்துக்குமாரசுவாமி சன்னதிகள் வழிபாடு செய்தனர். முன்னதாக அவர்கள் தங்களது குலதெய்வமான தையல்நாயகி அம்பாளுக்கு சீர்வரிசையுடன், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பின்னர் அவர்கள் பாதயாத்திரைக்கு துணையாக கொண்டு வந்த குச்சிகளை கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
தென் மாவட்ட பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்துவிட்டு ஊர் திரும்ப வசதியாக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.