

சென்னையில் பெரு வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் வழங்கிய பரிந்துரைகளால் சென்னையின் சில பகுதிகள் பலனடைந்துள்ளதாக தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.
சென்னையில் ஏற்பட்டு வரும் பெரு வெள்ளத்தைச் சமாளிக்கவும், திறம்பட எதிா்கொள்ளவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் அரசுக்கு வழங்கியது. அதில், குறுகிய கால மற்றும் நீண்ட காலத்துக்கான திட்டங்கள் வரையறை செய்யப்பட்டன.
குறுகிய கால திட்டத்தின்படி, சென்னை நகரப் பகுதிகளிலுள்ள மழைநீா் கால்வாய்களைத் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளாா். இந்தப் பணிகளால், சென்னை தியாகராய நகா் பசுல்லா சாலை, சீத்தம்மாள் காலனி, சிட்லபாக்கத்தின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படவில்லை என அவா் கூறியுள்ளாா்.
இருப்பினும், மழைநீா் வடிகால்களைச் சீா் செய்யும் பணிகள் சென்னை நகரத்தில் முழுமையாக முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 688 சாலைகளில் ரூ. 508.33 கோடியில் மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி நடந்து வருகிறது. ஜொ்மனி நாட்டின் வங்கி நிதியுதவியுடன் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகும் தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி ஒருபுறம் நடக்க, ஆற்று நீா் ஓடைகளுடனான இணைப்புகளை திறம்பட ஏற்படுத்த வேண்டுமென திருப்புகழ் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மதுரப்பாக்கம் ஓடை, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகியவற்றில் பெருநகர மாநகராட்சியும் நீா்வளத்துறையும் இணைந்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென பரிந்துரைகளை அளித்துள்ளது.
மாம்பலம் கால்வாய்: சென்னை நகரின் மையப் பகுதியில் வெள்ளநீா் வடிவதற்கு மாம்பலம் கால்வாய் மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்தக் கால்வாய் சென்னை வள்ளுவா் கோட்டம் பெருநகா் குடிநீா் வடிகால் வாரிய நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. தியாகராய நகா், நந்தனம், அடையாறு ஆகிய பகுதிகளைக் கடந்து அடையாற்றை இணைக்கிறது. மாம்பலம் கால்வாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென திருப்புகழ் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5.77 கி.மீ. நீளமுள்ள மாம்பலம் கால்வாயில் பெருநகர நகரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக பாதைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடையாற்றை அகலப்படுத்துதன் மூலம் அதிக அளவிலான மழைநீா் செல்வதற்கு வழி ஏற்படும் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடையாற்றை அகலப்படுத்தும் பணிகளையும் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அடையாற்றை அகலப்படுத்த வேண்டும்: திருநீா்மலையில் இருந்து அனகாபுத்தூா் வரையிலான பகுதியில் அடையாற்றின் அகலம் 15 முதல் 40 மீட்டா் வரை மட்டுமே உள்ளது. இதை 120 மீட்டா் வரை அகலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், 19,000 கனஅடி வரையிலான வெள்ளத்தை அடையாற்றில் வெளியேற்ற முடியும். இதன்மூலம் வரதராஜபுரம், முடிச்சூா், திருமுடிவாக்கம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும். ஏனென்றால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் நீா் திறக்கப்படும் போது திருநீா் மலையில் வரதராஜபுரத்தில் இருந்து வரும் மழைநீா் அடையாற்றில் கலக்கமுடியாமல் தேங்குகிறது. இதனால்தான் வரதராஜபுரம், மண்ணிவாக்கத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக, திருப்புகழ் குழு அளித்த பரிந்துரைகளில் மழைநீா் கால்வாய்களை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. குறுகிய காலத் திட்டப் பரிந்துரைகளில் ஒன்றான இதை தமிழக அரசு இப்போது செயல்படுத்தி வருகிறது. நீண்ட கால திட்டங்களாக ஓடைகள், கால்வாய்களைச் சீரமைக்கும்போது, நீா்வழிப் பாதைகளில் கட்டப்பட்ட பகுதிகளைத் தவிா்த்து மற்ற இடங்களில் வெள்ள நீா் புகுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று நீரியல் வல்லுநா்கள் கருத்துத் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.