

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பைக் டாக்ஸிகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை எளிதில் கடக்கவும், நீண்ட தொலைவு சென்றாலும் குறைந்த கட்டணம் போன்ற பைக் டாக்ஸிகளின் முக்கிய அம்சங்கள் மக்களை ஈர்த்துள்ளது.
ஆனால், காப்பீடு இல்லாமல் பலரும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸிகளாக பயன்படுத்துவதால், விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்வோருக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நாள்தோறும் மாலை 7 மணிக்கு சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“பைக் டாக்ஸி குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது , மத்திய அரசுடன் இணைந்துதான் முடிவெடுக்க முடியும்.
மத்திய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.
ஆனாலும் நீதிமன்றங்களில் பைக் டாக்ஸிகளுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் அலுவலர்கள் மூலம் குழு அமைத்து பைக் டாக்ஸி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
பைக் டாக்ஸியில் பயணிப்போரின் பாதுகாப்பு முக்கியம் . எனவேதான் பைக் டாக்ஸியை முழுமையாக தணிக்கை செய்ய சொல்லியுள்ளோம்.
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சிறு விபத்து ஏறரபட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பைக் டாக்ஸிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பைக் டாக்ஸியை எதிர்க்கின்றனர்.
பைக் டாக்ஸி மூலம் லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அதை தங்கள் தொழிலுக்கு ஆபத்தாக உணர்கின்றனர்.
மத்திய அரசின் நடைமுறையையும் , நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எனவே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
பைக் டாக்ஸியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. மத்திய அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
வாகனத்தை பறிமுதல் செய்யும் நிலைக்கு தற்போது செல்லவில்லை, அபராதம் மட்டுமே விதிக்கிறோம்.
அனைத்து துறையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கின்றன. எனவே அதற்கேற்ப விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது.
பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் போக்குவரத்துத் துறை இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தமிழகத்தில் ஒரு கி.மீ க்கு 52 காசுதான் பேருந்துப் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது . அருகில் உள்ள மாநிலங்களில் 1.10 காசு வரை ஒரு கி.மீ க்கு கட்டண வகிதமாக உள்ளது.
போக்குவரத்து துறை ஒரு சேவைத்துறை , எனவே நட்டம் வருஙது இயற்கை , ஆனால் அரசு அதை ஈடுசெய்து வருகிறது. பேருந்து போக்குவரத்தால்தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது.
மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கான தொகை போக்குவரத்து துறைக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது, எனவே போக்குவரத்து துறை சிரமமின்றி செயல்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதியே சம்பளம் கொடுக்க விடியல் பயணத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கு வழங்குவதே காரணம்.
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததே போக்குவரத்து துறை இழப்புக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.