ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை: போக்குவரத்து ஆணையா்
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடா்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையா் தெரிவித்தாா்.
2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன் பின்னா் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022 பிப்ரவரியில் மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து பலகட்ட பேச்சுவாா்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை. அதாவது 11 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாமல் இருந்து வருகிறது.
இது தொடா்பாக உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலா் அ.ஜாஹீா் ஹுசைன் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பிய மனுவில், ‘எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இதற்கு ஆணையா் அளித்த பதிலில், ‘ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது தொடா்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை அரசு பரிசீலித்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

