கோவை: தீ விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் பலி - நடந்தது என்ன?

முத்துகவுண்டன்புதூரில்  வாடகை குடியிருப்பில் தற்செயலாக நேரிட்ட விபத்தில் 3 பேர் பலி, 4 பேர் காயம்
கோவை: தீ விபத்தில் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் பலி - நடந்தது என்ன?
Updated on
2 min read

சூலூர், ஜூலை.16: சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு வாடகை குடியிருப்பில் தங்கியிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஒரு கேனில் இருந்து மற்றொரு கேனுக்கு பெட்ரோலை மாற்றும்போது ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திருமூர்த்தி என்பவர்  சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார்.  அந்த வீட்டில் பெட்ரோல் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அழகர் ராஜா மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் தங்கி இருந்தனர். 

திங்கட்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் அவர்கள் தங்கி இருந்த அறையில் உணவு சமைத்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது அழகர் ராஜா பெரிய கேனிலிருந்து பெட்ரோலை சிறிய கேனுக்கு மாற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றியது. (அவர் தர்கொலைக்கு முயற்சித்ததாக முதலில் கூறப்பட்டது). அந்த அறையில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருள்களை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், தீ பற்றிய உடன் அறை முழுவதும்  மள மளவென தீப்பறவியது.  இதில் அந்த அறையில் இருந்த ஏழு பேரும் சிக்கிக்கொண்டனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீயானது சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் மீது பற்றியதால் அருகில் இருந்தவர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர். இதனிடையே, வீட்டுக்குள் இருந்த மூன்று பேர் தீ விபத்தினால் ஏற்பட்ட புகையின் காரணமாக மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தீ விபத்து குறித்த தகவலை அடுத்து சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எரிந்து கொண்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக அதனை குளிர்வித்து வெளியே எடுத்து வந்தனர்.

தீயணைப்பு படையினர் வீட்டுக்குள் சிக்கி உயிரிழந்த மூன்று பேரது உடலை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் அழகர் ராஜா, சின்ன கருப்பு, முத்துகுமார்   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த சூலூர் காவல் துறை ஆய்வாளர் மாதையன் மற்றும் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் தீக்காயம் அடைந்த மேலும் நான்கு பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடமலை குண்டுவைச் சேர்ந்த பெட்ரோல் கண்டெய்னர்  லாரி ஓட்டுநர் தினேஷ், மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த நண்பரான மனோஜ், வீரமணி ஆகியோர் 90 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த போது சமையல் செய்து கொண்டிருந்த பாண்டீஸ்வரன் முகத்தில் லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன கருப்பு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வாகராயம்பாளையத்தில் தங்கி அங்கே பணிபுரிந்து வருவதாகவும் தங்களது நண்பர்களை பார்க்க ஏதாவது ஒரு நாள் இங்கு வந்து செல்வார்கள் எனவும் மற்ற ஐந்து பேரும் ஒரே ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் எனவும் ஐந்து பேரும் பெட்ரோல் ஆயில் டேங்கர் ஓட்டு ஓட்டுநர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, விபத்து குறித்து கோவை மாவட்ட நீதிபதி பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றார். அதில் தற்செயலாக விபத்து நேரிட்டதாகவும் இதில் அந்த அறையில் இருந்த ஏழு பேரும் தீயில் சிக்கிக் கொண்டதாகவும் பாண்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நேரில் விசாரணை செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சூலூர் வட்ட வட்டாட்சியர் தனசேகர் மற்றும் முத்து கவுண்டன்புதூர் கிராமத்திற்கு உட்பட்ட விஏஓ முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோவை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்று பொது மக்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதி அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் இப்பகுதியை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படும் தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலை குண்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் அழகர் ராஜா,  திங்கட்கிழமை காலை சூலூர் அருகே ராவத்தூரில் பெட்ரோல் கண்டெய்னர் லாரியை ஓட்டி வரும் பொழுது ஒரு தனியார் பள்ளி ஆசிரியை மீது மோதியதில் ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், திங்கட்கிழமை மாலை தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது பெரிய கேனில் இருந்து சிறிய கேனுக்கு பெட்ரோலை மாற்றும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com